பவள சங்கரி

சிறுவர் இலக்கியம்

ஒரு கதையை சுவைபடச் சொல்வதற்கு பல வழிமுறைகள் உள்ளன. ஒரு பயிற்சி முயற்சியாக கொண்டு அதை பல்வேறு முறைகளில் மாற்றி எழுத முயற்சிக்கலாம்.
ஐந்து அல்லது ஆறு பக்கங்கள் ஒவ்வொரு முறையிலும் எழுதிப்பார்க்கலாம். இதனால் எழுத்து நடையில் ஒரு இலகுவான தன்மையும், தெளிவும் ஏற்படுவதோடு பல சவால்களையும் எதிர்கொள்ள இயலும். இவையனைத்திலும் முக்கியமாக நினைவில் கொள்ளவேண்டியது வாசகர்களை அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற ஆவலில் வைத்திருக்க வேண்டும் என்ற அடிப்படைக் கருத்தே.

திரைக்காட்சியிடையே முன்னிகழ்ச்சியின் இடைப்பதிவு (ஃபிளாஷ் பேக்) வாசகர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய ஒரு எழுத்து முறை. அதேபோன்று நேரிடையாகக் கதையை முன்னெடுத்துச் செல்வதிலும் இனிமை கூட்டலாம். கதை மாந்தர்களின் குணநலன்களுக்கேற்ப அதன் போக்கிலேயே கதையை நகர்த்திச் செல்வதும் ஓர் வகை. எது எப்படியாயினும் வாசகர்களின் அடுத்த காட்சிக்கான எதிர்பார்ப்பு மட்டுமே குறிக்கோளாக இருக்க வேண்டும். பயிற்சிக்கான பரிட்சார்த்த முறையில் எழுதி முடித்தவுடன் எழவேண்டிய வினாக்கள்:

⦁ ஏதேனும் ஒரு குறிப்பிட்ட போக்கு தொடரப்பட்டுள்ளதா?
⦁ வாசகர்களின் எண்ணத்தில் வினாக்கள் உருவாக வழியமைந்திருக்கிறதா?
⦁ கதை மாந்தரின் செயல்பாட்டிற்கு தடையேற்படுத்தும் பாத்திரங்களும், களமும் குழப்பமின்றி உருவாக்கப்பட்டுள்ளதா?
⦁ விவரம் அறிய ஆர்வமேற்படுத்தும் வெளிப்படையான பிரச்சனைகள் உள்ளனவா?
⦁ வித்தியாசமான பாத்திரப்படைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளனவா?
⦁ பிரச்சனைகளை இலாவகமாகக் கையாளும் கதாநாயகன் உருவாக்கப்பட்டுள்ளானா?
⦁ உறுதியான அடித்தளத்தில் இனிமையான கட்டமைப்புகள் காணப்படுகின்றனவா?
மேற்கண்ட வினாக்களுக்கு நேர்மறையான பதில்கள் கிடைக்கும்பட்சத்தில் அதன் வெற்றியை நிர்மாணித்த கட்டமைப்புகள் குறித்த தெளிவை உண்டாக்கும் வினாக்களை எழுப்பினால் அதன் விடைகளே நல்லதொரு படைப்பின் அடித்தளமாக அமைந்துவிடும்.

⦁ எந்தவிதமான கதைப்போக்கு இயல்பான எழுத்துகளை உருவாக்கியுள்ளது?
⦁ சிறந்த வகை கதைப்போக்காக உறுதிப்படுத்தும் முறை எது?
⦁ என் கதைக்கு எந்த விதமான போக்கு சுவையளிக்கக்கூடியது?
⦁ கதையைத் தெளிவாகச் சொல்லும் முறைமை எது?

மேற்கண்ட வினாக்களுக்கு ஆக்கப்பூர்வமான விடைகளை அளிக்க முடியுமென்றால் அது சுவையானதொரு படைப்பின் அறிகுறி என்பதை அறியலாம்.
திடீரென ஒரு பொறி தட்டுகிறது. அருமையான கதைக்கான கரு உருவாகிவிட்டதென்று மனம் பரபரக்கிறது! இந்தக்கதை இதுவரை உலகில் எவரும் தொடாத ஒரு கருவைக்கொண்ட சிறந்த கதை என்பதை எண்ணி பெருமை பிடிபடவில்லை. எல்லாம் சரி. கதையின் ஆரம்பம் கூட அருமையாக அமைந்துவிடுகிறது. எல்லாம் திட்டப்படி சரியான முறையில் நடந்திருக்கிறது. ஆனாலும் திடீரென ஒரு புள்ளியில் அப்படியே நிற்கிறது. மேலே நகரமாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்து நெஞ்சில் ஏதோ பந்து அடைத்தது போன்ற நிலையை ஏற்படுத்தி தொல்லையேற்படுத்துகிறது. இப்படியொரு அனுபவம் ஏற்படுவது உங்களுக்கு மட்டும்தானா என்றால் நிச்சயமாக இல்லை. மிகப்பெரிய எழுத்தாளருக்கும்கூட இந்த நிலை ஒரு கட்டத்தில் வந்திருக்கும். மிகப் பிரபலமான அந்த நூலை எழுதும்போதுகூட இது போன்ற அசைவற்ற நிலை ஏற்பட்டிருக்கலாம். அடுத்த கட்டத்திற்கு எப்படி நகர்த்திச்செல்வது என்ற குழப்பத்தில் உறைந்திருக்கலாம்.

இதற்கான பதிலும் நீங்கள் எழுதிய அந்த ஆரம்பப்பகுதியின் இறுதி வரிகளிலேயே உள்ளது என்பதே உண்மை. ஒரு கட்டத்திலிருந்து அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்லும் வகையில் இறுதிப்பகுதி அமைந்திருக்க வேண்டியது அவசியம்.

கதைப் பயணத்திற்கும், வாழ்க்கைப் பயணத்திற்கும் உள்ள வேறுபாடு என்றால் அது, யதார்த்தமான வாழ்க்கையைப் போன்றல்லாமல் கதையில் காரணமில்லாமல் காரியங்கள் இருக்கவியலாது. அதாவது, கதையின் ஒவ்வொரு அசைவிற்கும், திருப்பங்களுக்கும் தெளிவான காரணங்களை வாசகர்கள் முன் படைக்க வேண்டியது அவசியம். ஒரு மொட்டு மலர்ந்து மலராவதைக் குறிக்கும் முன்பு மண்ணில் ஊனும் விதையினையும், அது துளிர்விடும் காட்சியையும் தெளிவாக வாசகர்கள் முன் படைக்க வேண்டியது அவசியம். அதேபோன்று அது மலரவும், பசுமையாய் மணம் பரப்பவும் உரமாய் இருக்கும் அந்த உன்னதத்தையும் வெளிப்படுத்தவேண்டும். அதோடு அப்பயிரை வளர விடாமல் தடையேற்படுத்தும் களைகள், சூழல்கள் என அனைத்துக் கோணங்களையும் ஆழ்ந்து நோக்கி அளவாக விளக்கம் தரவும் வேண்டும். படைப்பிலக்கியம் என்பதே கற்பனைகளை சற்றே விரிவாக்கி கருத்துகளை உள்வாங்கி, அதனை உணர்வுப்பூர்வமாகவும், சற்றே மிகைப்படுத்தப்பட்ட வடிவிலும் வழங்கக்கூடியதாகும். அதாவது வாழ்வின் யதார்த்தங்களை, சம்பவங்களை அது இயல்பாகவே இருக்கும்வகையில் மிகைப்படுத்திச் சொல்வதிலேயே ஒரு கதைச்சொல்லியின் வல்லமை அடங்கியிருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கான படைப்புகள் எனும்போது அவர்களுக்கு குழப்பம் ஏற்படுத்தாத வகையில் பக்குவமாகச் சொல்லவேண்டிய பொறுப்பும் கூடிவிடுகிறது. திரைக்காட்சியிடையே முன்னிகழ்ச்சியின் இடைப்பதிவோ (ஃபிளாஷ் பேக்) அல்லது நேரிடையான முன் நகர்த்தலோ, கதை மாந்தரின் குணாதிசயங்களுக்கேற்ப வளைந்து நெளிந்து செல்லக்கூடியதோ எதுவாயினும் உங்களுடைய ஆரம்பப் பகுதியின் அடிப்படையிலேயே தொய்வின்றி தொடர வேண்டியதாகும்.

கதையின் மத்திய பகுதியின் ஆரம்பம் உங்களுடைய மொத்த கவனத்தையும் உள்ளடக்கியதாகவும், கற்பனைச் சிறகை விரிக்கும் தளமாகவும், கருவின் ஆழ்ந்த கருத்தை கோடிட்டுக் காட்டுவதாகவும் அமைவது சிறப்பு. உதாரணமாக,
“ஆண்டவருக்கு அனுதினமும், ஆகம முறைப்படி பூசைகள் செய்துவந்த சிவ கோசரியார் அவர்களுக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது. இறைவன் மீதிருந்த இறைச்சியையெல்லாம் நீக்கி சுத்தம் செய்து பூசை செய்துவிட்டு, மனம் நொந்து புலம்பலானார். ஆண்டவன் அன்று இரவு சிவ கோசரியார் கனவில் தோன்றி திண்ணனாரின் அன்பு வெளிப்பாட்டை அடுத்த நாள் காலை மரத்தின் பின்னால் மறைவாக நின்று கவனிக்கும்படி கூறி மறைந்தார்.”

கண்ணப்ப நாயனாரின் வரலாற்றுக் கதையில், இப்பகுதியின் அடுத்து நடக்கப்போவதை ஆர்வமுடன் வாசிக்கத் தயங்கமாட்டார்கள். ஆன்மீகக் கதையோ, அறிவியல் கற்பனையோ அன்றி நவீனக் கதைகளோ எதுவாகினும் அடிப்படைக் கருத்தாக்கங்கள் சரியான கட்டமைப்பிற்கு வழியமைக்கும்.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.