2000 ரூபாய் நோட்டுகளுக்குத் தட்டுப்பாடா?
பவள சங்கரி
தலையங்கம்
2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் குறைந்து கொண்டு வருகின்றன. மத்திய வங்கி படிப்படியாக 2000 ரூபாயை நிறுத்த முடிவு செய்துள்ளதா என மக்கள் மனதில் ஐயம் தோன்றியுள்ளது. மத்திய வங்கியிலிருந்து மற்ற வங்கிகளுக்கு 2000 ரூபாய் நோட்டுகள் குறைந்த அளவே அனுப்பப்படுவதாக செய்திகள் மூலம் அறிய முடிகிறது. இன்று வங்கிகள் அளிக்கக்கூடிய 2000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் மறு சுழற்சியில் வரக்கூடியவை மட்டுமே. மத்திய அரசின் ஆணைப்படி சேமிப்பு வங்கிக் கணக்குகள், நடப்புக் கணக்குகள் ஆகியவைகளில் பெருந்தொகைகளை செலுத்தினால் சட்டப் பிரச்சனையை சந்திக்க நேரும் என்பதால் அந்த 2000 ரூபாய் நோட்டுகளை தனி நபர்கள் வங்கியில் செலுத்தாமலே கைகளிலேயே வைத்துக்கொள்கிறார்கள். சில தவறான அணுகுமுறைகளால் அல்லது வங்கிகளுக்கு வருமானத்தைக் கூட்டுவதற்காக ஏடிஎம்களிலிருந்து 3 – 5 முறைகளுக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிப்பதால் சிறு சேமிப்பு கணக்குகளில் பணம் செலுத்துவது குறைந்து வருகிறது. இந்த ஏடிஎம்கள் சேவை புரிபவர்களால் (சர்வீஸ்மேன்) மிகவும் சுத்தமாகவும், எப்பொழுதும் பணம் நிரம்பியும் இருக்கும். ஆனால் வங்கிகளின் தவறான அணுகுமுறையால் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஏடிஎம்கள் குப்பை மேடாகக் காட்சியளிக்கின்றன. நாம் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்றாலும் இன்று பத்திற்கு ஐந்து ஏடிஎம்களில் பணம் இருப்பதில்லை. இது போன்ற தவறான அணுகுமுறைகளே வங்கிகளின் செயல்பாடுகளில் உள்ளன. சுமாராக 50,000 ஏடிஎம்களில் பணம் நிரப்பும் நிறுவனங்களே இதன் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர். 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்மில் ஒரு முறை நிரப்பினால் அவைகள் சராசரியாக 4 நாட்களுக்கு வரும். ஆனால் தற்போது 100 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் மட்டும் வைப்பதால் தினசரி நிரப்பப்பட வேண்டியுள்ளது. மத்திய அரசும், மத்திய வங்கியும் சரியான கொள்கை முடிவையெடுத்து ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்துவதற்குரிய கட்டுப்பாடுகளையும், ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்குரிய கட்டுப்பாடுகளைத் தளர்த்தியும் வங்கியிலிருந்து எடுக்கப்படும் தொகைக்கு கட்டுப்பாடுகள் விதித்தும் சில மாற்றங்கள் செய்தால் நம் பொருளாதாரம் மேலும் வலுவடையும் என்பதில் ஐயமில்லை. சமீபத்திய செய்தியின்படி 200 கோடி 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதற்கு மத்திய வங்கிக்கு மத்திய அரசின் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது ஒரு சரியான நடைமுறையாக இருந்தாலும் மாற்று ஏற்பாடுகள் செய்வது அவசியம். உயர் மதிப்பு நோட்டுகளுக்கு அதிகாரப்பூர்வமற்ற கட்டுப்பாடுகள் கொண்டுவருவதாகவே தெரிகிறது. இவ்வாறு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதிலும் ரூபாயின் மதிப்பு அதிகரிக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியதாகும். ஏற்றுமதியை அதிகரித்து இறக்குமதியைக் குறைக்கும் விதத்தில் அரசின் செயல்பாடுகள் இருந்தால் ரூபாயின் மதிப்பு அதிகரிக்கும். அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பூண்டிலிருந்து போஃபார்ஸ் உதிரிப்பாகங்கள் வரை தரமற்ற பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதை தவிர்க்கலாமே.
—————————————–