Featuredஇலக்கியம்கட்டுரைகள்பத்திகள்

நலம் .. நலமறிய ஆவல் (65)

நிர்மலா ராகவன்

பணக்கார வீட்டுக் குழந்தையா! ஐயோ, பாவம்!

நலம்

எங்கள் தெருவில் நாலைந்து வீடுகள் தள்ளி இருக்கிறாள் மிஸஸ் வாங். பெரிய படிப்பு, அதற்கேற்ற உத்தியோகம். கணவன், மனைவி இருவரும் கைநிறைய சம்பாதித்தார்கள். பெரிய வீடு இல்லாமலா! ஆனால், தம்பதியர் வீட்டிலிருப்பதே அபூர்வம்.

அவர்களுடைய மூன்று குழந்தைகளை யார் பார்த்துக்கொள்வது?

வெளிநாட்டுப் பணிப்பெண்கள் எதற்காக இருக்கிறார்கள்!

“எங்கள் வீட்டில் மூன்றுபேர் வேலை செய்கிறார்கள்,” என்று என்னிடம் சாதாரணமாகத் தெரிவித்தாள். பெருமை என்றில்லை. வேறு என்ன செய்வது என்ற தொனி. “மாடியைச் சுத்தப்படுத்த ஒருத்தி, கீழே ஒருத்தி. இவர்களிருவரும் இந்தோனீசியர்கள். குழந்தைகளைக் கவனித்து, அவர்களுக்குப் பிடித்ததை சமைத்துப்போட ஃபிலிப்பீனோ!” என்றாள்.

ஃபிலிப்பீன் நாட்டைச் சேர்ந்த பெண்கள் ஆங்கிலம் தெரிந்தவர்களாக இருப்பதால், மலேசியாவில் அவர்களுக்குச் சம்பளம் அதிகம். எனக்குத் தெரிந்த ஒரு பணிப்பெண் கணக்காய்வாளராக இருந்தவள்!

`வீடு என்றால் ஓய்வெடுக்கத்தான்!’ என்பதுபோன்ற மனப்பான்மை கொண்ட மிஸஸ் வாங் பருமனாக இருந்ததில் ஆச்சரியமில்லை.

சுமாரான வருமானம் உடையவர்கள்கூட வீட்டிலேயே விளையும் மரவள்ளிக்கிழங்கையும், உருளைக்கிழங்கையும் சாப்பிட்டு குண்டாக இருக்கையில், தானும் அவர்களைப்போல் இருப்பதா என்று அவள் நினைத்திருக்க வேண்டும். பொழுதைக் கழிக்க கோல்ஃப் ஆடும் பழக்கத்தை மேற்கொண்டாள். அதோடு, லைன் டான்ஸ் என்ற நாட்டியப்பயிற்சி வேறு.

“மிகவும் ஷேப்லியாக (shapely) ஆகிவிட்டீர்களே!” என்று நான் பாராட்டியபோது, மகிழ்ந்துவிட்டாள். உடனே அவள் முகம் மாறியது. “என் மகள் யென் யென்னையும் (Yen Yen) இதையெல்லாம் கற்றுக்கொள்ளச் சொல்லி வற்புறுத்துகிறேன். ஆனால் அவளுக்கு எதுவுமே வணங்குவதில்லை,” என்றுவிட்டு, “எப்போதும் சாப்பாட்டில்தான் கவனம்!” என்று பிரலாபித்தாள்.

எனக்கு ஆச்சரியம் எழவில்லை.

சமைப்பதற்கென்றே அமர்த்தப்பட்ட ஒரு பணிப்பெண். சிறுமிகள் தம் காலைச் சுற்றி வராமலிருக்க தின்பண்டங்கள் ஓயாது கொடுத்துக் கொண்டிருப்பவள்.

தாய், தந்தை இருவருடைய கவனிப்பும் இல்லாது, என்ன செய்வது என்று புரியாது, தொலைகாட்சி பார்த்தபடி எதையாவது கொறிக்கும் பழக்கம் அவளுடைய மூன்று குழந்தைகளுக்கும்.

அது மட்டுமா? ஏதாவது ஒரு விளையாட்டிலோ, படிப்பிலோ சற்றே தோல்வியுற்றால் அதிர்ந்து போகும் பெற்றோர். தம்மைப்போன்று தாம் பெற்ற குழந்தைகளும் வாழ்க்கையில் பெருவெற்றி அடையவேண்டும் என்ற `நல்லெண்ணத்துடன்’ அவர்களை அளவுக்கு மீறிக் கண்டிப்பவர்கள்.

இதனால், தான் எதையாவது செய்யப்போய், அதில் தோல்வி அடைந்து எப்போதோ பார்க்கும் பெற்றோரிடம் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டியிருக்குமே என்று பயந்து புதிதான எதிலுமே ஆர்வமில்லாமல் போயிருக்கிறாள் அப்பெண், பாவம்! குமுறி எழும் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தெரியாது, உணவால் அதை மறக்க முயற்சிக்கிறாள். விலையுயர்ந்த ஆடைகளும், ஆளுக்கொரு கணினியும் இருந்தாலும் யென் யென் ஏழைதான் என்றே தோன்றியது.

வாழ்க்கையில் பிடிப்போ இலக்கோ இல்லாது, சாப்பிடுவதில் மட்டும் ஆர்வம் காட்டிக்கொண்டு, எப்படியோ பொழுது போனால் சரி என்று காலத்தை ஓட்டுகிறவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள்தானே?

என்னிடம் படிக்க வந்த ஒரு மலாய் பையனும் இப்படித்தான்.

“இந்தக் கணக்கைப் போடு,” என்று நான் சொல்ல வேண்டியதுதான், நாற்காலியில் சரிந்து உட்கார்ந்துவிடுவான். நாம் இவனுடன்தான் பேசுகிறோமா என்ற சந்தேகம் நமக்கே வந்துவிடும். அப்படி இருக்கும் அவனுடைய தோரணை.

`என்ன சொன்னால் சுறுசுறுப்பாக மாறுவான்?’ என்ற குழப்பத்துடன் தாய் ஓயாமல் விரட்ட, மேலும் அடங்கிப்போயிருந்தான்.

`திட்டினால், குழந்தைக்கு அவமானம் அளிப்பதுபோல!’ என்று சிறு வயதில் எந்த தவறு செய்தாலும் கண்டிக்காது விட்டதில், பதின்ம வயதில் மனம் போனபடி நடக்கும் இப்படிப்பட்ட சிறுவர்கள் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் பாரமாகி விடுகிறார்கள்.

நான் இப்படி ஒரு பையனைப்பற்றி அவனுடைய தாயிடம் புகார் செய்தபோது, “வீட்டிலும் இப்படித்தான்! எதிர்த்து எதிர்த்துப்பேசுவான். என்ன செய்வதென்றே புரியவில்லை,” என்றாள் வருத்தத்துடன். உரிய காலத்தில் கண்டிக்காது விட்டது யார் தப்பு?

கதை

அது கூட்டுக்குடும்பம். ஆனாலும், ஒருவர் விஷயத்தில் இன்னொருவர் அநாவசியமாகத் தலையிடாது சுமுகமாக இருந்ததால், வீட்டில் அமைதியும், சிரிப்பும் நிலவின.

தாய் வேலைக்குப் போனால், பார்த்துக்கொள்ள தாத்தாவும் பாட்டியும் இருந்தார்கள். தனிமை தெரியாது குழந்தைகள் வளர்ந்தார்கள்.

மூன்று வயதாக இருந்த ராணியை ஒரு நாற்காலியின்மேல் ஏறவைத்து, அவளுடைய தோய்த்த துணிகளை உலர்த்தச் செய்தார் தந்தை. அன்று பூராவும், `நானே செய்தேன்!’ என்று பெருமையாக எல்லாரிடமும் சொல்லி மகிழ்ந்தாள். எவ்வளவு சிறிய குழந்தையானாலும், ஒரு காரியத்தை அதன் வயதுக்கேற்ப செய்து முடித்தால், தன்னம்பிக்கை வளருமே!

அடுத்த ஆண்டு பாலர் பள்ளியில் விளையாட்டு விழா. ராணிக்கு எல்லாவற்றிலும் முதல் பரிசு.

ஒரு விளையாட்டில், சிறிது தொலைவு ஓடி அருகிலிருந்த வாளியிலிருந்து துணியை எடுத்து உலர்த்துவது.

மற்ற குழந்தைகளெல்லாம், `இது நம் வீட்டு வேலைக்காரியின் வேலை அல்லவா?’ என்று திகைத்து நின்றார்கள்.

`இதற்கெல்லாமா போட்டி வைப்பார்கள்!’ என்று பெற்றோர் அதிருப்தியுடன் முணுமுணுத்தார்கள்.

`போகட்டும், சிறு குழந்தைகள்தானே!’ என்கிறீர்களா?

தமிழ்நாட்டில் எங்கள் உறவினர் வீட்டுப்பையன். இருபது வயது.

“இன்னிக்கு ரெண்டு வேலைக்காரியும் மட்டம் போட்டுட்டா. கொஞ்சம் துணியை உலர்த்துப்பா,” என்று நான் கெஞ்சலாகக் கூற, “எப்படின்னே தெரியாது,” என்று அலட்சியமாகக் கூறியபடி அப்பால் போய்விட்டான். அவன் ஒரு குறிப்பிட்ட துறையில் மேதாவி. ஆனால், அதுமட்டும் போதுமா?

`களவும் கற்று மற’ என்று எதற்காகச் சொல்லி வைத்தார்களோ! வாழ்க்கைக்குத் தேவையான பலவற்றையும் அரைகுறையாகவாவது கற்றிருந்தால் எங்கு சென்றாலும், எப்படியாவது பிழைக்கலாம். எல்லாவற்றிற்கும் பிறர் கையை நாட வேண்டியதில்லை.

கடந்த நூற்றாண்டின் பிரபல அமெரிக்க வயலின் விற்பன்னர் யஹூதி மெனுஹின் ஒரு முறை கூறியிருந்தார், “நான் என் மாணவர்களுக்கு வயலின் வாசிக்க மட்டும் கற்றுக் கொடுப்பதில்லை. தம் விரல்களை இழந்தாலும், அவர்களால் பிழைத்துக்கொள்ள முடியும்!”

தொடருவோம்

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க