க. பாலசுப்பிரமணியன்

கற்றலும் தன்னம்பிக்கையும்

education-1

கற்றலைப் பற்றிய சிந்தனைகள் தோன்றி அதன் குறிக்கோள்களையும் வளர்முறைகளையும் பற்றி ஆராய்ச்சிகள் நடக்கும் காலம் தொட்டே கற்றலுக்கும் வாழ்விற்கும் உள்ள தொடர்புகள், இணைப்புகள் பற்றிய சிந்தனை ஆரம்பித்தது. “கற்றலின் நோக்கமே வாழ்வில் வளம்பெருக்க’  என்ற ஒரு கருத்தும், கற்றலின் நோக்கம் ‘ஒரு தனிமனிதனின் தேவைகளை பெருக்குதல் ‘என்றும், கற்றலின் நோக்கம் ‘சமுதாயச் சிந்தனைகளை வளர்த்துப் போற்றுதல்’ என்றும், “கற்றலின் நோக்கம் பொருளீட்டு அதற்கான திறன்களை வளர்த்தல் ‘ என்றும் பல விதமான கருத்துக்கள் பல காலக் கட்டங்களில் கூறப்பட்டு, ஒவ்வொரு கருத்தும் ஒவ்வொரு சமுதாய காலகட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு ஒப்புதல்கள் அளிக்கப்பட்டும் பின்பு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டும் விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டன. ஆனால் எல்லா காலகட்டங்களிலும் ஒரு வளரும் குழந்தையின் ‘தன்னம்பிக்கைக்கு’ கற்றல் ஒரு விதையாகக் கருதப்பட்டது. ஆகவே எந்த ஒரு பாடத்திட்டமாக இருந்தாலும் எந்த மொழியிலோ, எந்த சமூக சூழ்நிலைகளில் அது உருவகிக்கப்பட்டாலும் கற்றலின் உள்நோக்கம் அந்த மாணவனின் தன்னம்பிக்கையை வளர்ப்பது மட்டுமின்றி, அந்தத் தன்னம்பிக்கையின் உள்ளூற்றை வளப்படுத்தி சிறப்படையச் செய்வதாக அமைந்தது.

எந்த ஒரு பொருளைப் பாடமாக எடுத்துக்கொண்டாலும், எந்த ஒரு மொழியின் அடிப்படையில் கற்றல் ஏற்பட்டாலும், எந்த மாறுபட்ட கற்றல் சூழ்நிலைகளில் கற்றலின் வளர்ச்சி ஏற்பட்டாலும் அது தன்னம்பிக்கையையும் அதன் சார்ந்த அறிவு, உணர்வு மற்றும் கைத்திறன்கள் சார்ந்த தன்னம்பிக்கையை விதைக்கவும், வளர்க்கவும், போற்றவும் சார்பாக இருக்கவேண்டும் என்ற கருத்துக்கு எந்த காலகட்டத்திலும் மாற்றுக்கருத்து இருந்ததாகத் தெரியவில்லை. ஆயின், இந்த தன்னம்பிக்கையை உணர்த்துவதற்கும், வளர்ப்பதற்கும் தேவையான போதிக்கும் முறைகள், அதனைச் சார்ந்த உள்ளீட்டுக்கள் சமுதாயத்தின் அரசியல் மற்றும் கலாச்சார முறைகளுக்கு ஏற்றவாறும் அவைகளை போற்றியவையாகவும் அமைந்திருந்தன. பொதுவாக அத்தனை முறைகளுக்கும் அடிப்படையாக இருத்த கருத்துக்களில் சில கீழ்க்கண்டவை.

  1. தன்னைப் பற்றிய அறிவு

நான் யார் என்ற அறிவு தன்னம்பிக்கைக்கு அடிப்படையாக விளங்குகிறது. இந்த அறிவு தன்னைப் பற்றிய ஒரு சிந்தனையில் தன் திறன்கள், தன் குறைகள், தன்னுடைய குறிக்கோள்கள், தன்னுடைய நடந்து செல்லும் பாதையின் சிறப்புக்கள், தடங்கல்கள் ஆகியவற்றை அறிந்து அதற்கான வழிமுறைகளை வகுப்பதற்குத் தேவையாகவும் உதவியாகவும் இருக்கும். ஆனால், இந்த விவாதங்களில் தன்னைப்பற்றிய குறைவான தாழ்ந்த எண்ணங்களை ஊன்றவோ அல்லது வளரவோ  அனுமதித்தால் அது எதிர்மறையான பலன்களை அளிப்பதற்கான வாய்ப்புகளைத் தருகிறது. ஆகவே, தன்னை ஒரு ஆக்க சக்திக்கு உள்ளீட்டப்பட்ட பொருளாகக் கருதி ‘முன்னோக்கான பார்வைகளை’ வளர உதவி செய்ய வேண்டும். எனவே, கற்றலின் உள்ளீடுகள் ஆக்கப்பூர்வமான  சிந்தனைகளை வளர்ப்பதற்கு ஏற்றதாக அமைதல் வேண்டும்.

2, முயற்சி

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள ஏணிப்படியாக இருப்பது “முயற்சியே’. “என்னால் முடியும்” என்ற எண்ணத்துடன் எந்த ஒரு அறிவையும் திறனையும் பெற்றுக்கொள்ள முதல் அடி எடுத்துவைத்தல் தன்னம்பிக்கையின் அறிகுறியாகும். ஏணிப்படிகளில் ஏறும்பொழுது தடுமாற்றங்கள் ஏற்படலாம். அதிலிருந்து தவறி கீழே விழுவதற்கான வாய்ப்புகள் நிச்சயம் உண்டு.  ஆனால்  ஆங்கில மேதை ஆலிவர் கோல்ட்ஸ்மித் கூறியது போல் “ஒரு மனிதனின் மேன்மை ஒவ்வொரு முறை கீழே விழும் போதும் மீண்டும் எழுந்து நிற்பதில் தான் இருக்கின்றது.” என்ற கருத்தை நினைவில் கொள்ளுதல் அவசியம். எவெரெஸ்ட் சிகரத்தை  எட்மண்ட் ஹில்லாரி என்ற வீரர் முதன் முறை முயற்சியில்  தோல்வி அடைந்த போது அந்த  சிகரத்தின் அடிவாரத்தில் நின்று கொண்டு மீண்டும் ஒரு முறை பார்த்துச் சொன்னாராம் “ஏ சிகரமே! இந்த முறை நான் தோற்றிருக்கலாம். ஆனால் மீண்டும் உன்னை வெல்ல நான் வருவேன். ஏனென்றால் இதற்கு மேல் உன்னால் வளர முடியாது. என்னால் வளர முடியும் “. இது அவருடைய நிகரற்ற தன்னம்பிக்கைக்கு உதாரணமாக  விளங்குகின்றது. கற்றலின் உள்ளீடுகளுக்கும்  போதிக்கும் முறைகளும், கற்றலுக்கான சூழ்நிலைகளும் இந்தத் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு உறுதுணையாக இருத்தல் மிக்க அவசியம். ஆயின், பரீட்சைகள் என்ற போர்வைக்குள் கற்றலை மூடிவைத்து அதை மூச்சு விட முடியாமல் திணற வைப்பதாக பல  பாடத் திட்டங்கள் அமைந்துள்ளது வருந்தத்தக்க  நிலை. கற்றலின் பொழுது  நடக்கும்   மதிப்பீடுகள் கற்றலின்ஆர்வத்தை  மேம்படுத்துவதாகவும் கற்றலின் வேகத்தையும் அது சார்ந்த திறன்களையும் வளப்படுத்துவதாகவும் அமைத்தல் மிக்க அவசியம்

  1. தோல்விகளின் பொறுப்பேற்றல்

நம்முடைய போராட்டங்களில் வெற்றி தோல்வி என்ற இரு பகுதிகள் உண்டு. இரண்டையும் சம நோக்குடன் பார்த்துப் போற்றத் தெரிந்துகொள்ள வேண்டும்.   தோல்விகளை பொதுவாக ஒரு முயற்சியின் முற்றுப்புள்ள்ளிகளாகக் கருதும் நோக்கம் பரவலாக இருக்கின்றது. மாணவர்களிடமும் நாம் பழகும்போதும் பேசும்பொழுதும் தோல்விகளால் வாழ்க்கை இடிந்து பாழாகிவிடுவது போன்ற ஒரு கருத்து உருவகத்தை முன் வைக்கின்றோம். இது மிகவும் தவறான போக்கு. தவறான குறிக்கோள்கள், தவறான பாதைகள், வழிகள்,   பாதைகளில் வரும் இடைச்செருகல்கள், கவனக்குறைவுகள். கவனச் சிதறல்கள், போட்டி மனப்பான்மைகளால் ஏற்படும் நோக்கத் தடுமாற்றங்கள் போன்ற பலகாரணங்கள்  தோல்விக்கு வழிவகுக்கும்  உள்ளீடுகளாக  அமைகின்றன.ஆகவே, தோல்விக்கான காரணங்களை அலசி ஆராய்கின்ற  திறன்களை கற்றலின் ஒரு பகுதியாக அமைத்தல் அவசியம். பொதுவாக சிறு வகுப்புகள் முதற்கொண்டே பள்ளிகளில் ‘தவறுகளைச் சுட்டிக்காட்டும் ‘ பழக்கம் இருக்கின்றதே தவிர, அந்தத் தவறுகளுக்கான காரணங்களை அலசி அறியும் முறைகள்  சொல்லிக்கொடுப்பது  இல்லை. “Error Analysis” என்று சொல்லப்படும் தவறுகளை அலசி ஆராயும் திறன்கள் வளர்க்கப்பட வேண்டும்.  மேலும்  தவறுகளுக்கான முழு பொறுப்பேற்றும் பழக்கத்தையும் அதைத் தன்   குறையாகக்  கருதி தன்னம்பிக்கையை இழக்கவோ அல்லது தன்னை துன்பங்களுக்கு வித்தாக ஆக்கிக்கொள்ளவோ கூடாது. சில நேரங்களில் தேர்வுகளில் தோற்றுப் போனதாக அறிவிக்கப்படும் மாணவர்கள், தங்கள் தகுதிக்கோ அல்லது எதிர்பார்ப்புக்களுக்கோ குறைவாக மதிப்பீட்டும் மாணவர்கள் தங்கள் வாழ்கையையே முடித்துக்கொள்ளும் பரிதாபகரமான நிகழ்வுகளைப்பார்க்கும் பொழுது நமது கல்விமுறைகள் செயல்படும் நடைபாதைகளில் உள்ள தவறுகள்  போட்டுக் காட்டப்படுகின்றன.

(தொடரும் )

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *