பெருவை பார்த்தசாரதி

 

hearing sound

 

 

 

 

 

 

 

 

 

 

மண்ணில் உதித்த மாமணியேயென் ரத்தினமே..

…..மணமுடித்த கையுடனே நீயுந்தான் வந்துபிறந்தாய்.!

கண்ணில் உருளும் கண்மணியாயுனை காத்தாலும்..

…..காலதேவன் அழைப்பால் நீள்வாழ்வு கிட்டவில்லை.!

மின்னிடுமுன் முகத்தைத்தான் சட்டென மறப்பேனா..

…..மனதைப் பின்னிடுமுன் நினைவலைகள் நீங்கிடுமா.!

புண்ணிய உலகுக்கு பிறந்தவுடனே சென்றுவிட்டாய்..

…..புரண்டழுமென் பேய்ச்சத்தம்…தூரத்தில் கேட்குதா.?

 

பட்டால்தான் துயரமென்பது தெரியுமென்பார் நான்…

…..பட்டகடன் எத்துணையோயுனை மகவாய்ப் பெறுதற்கே.!

சுட்டால் வரும்தழும்பு வாழ்நாளிலழியா தென்பாருனை

…..சுருட்டிக் கொண்டுசென்ற யமனுக்கே இதுதர்மமா.?

கட்டழகு குலையாத கண்ணே நீயென் கண்ணைவிட்டு

…..காததூரம் போய்விட்டாய் காலனுனை அழைத்ததால்.!

மொட்டவிழ்ந்து மலராகுமுன் யமனுனுலகுக்குச் சென்றாலும்

…..எட்டாத தூரத்தில்கூட கேட்குமென் அலறல்சத்தம்.!

 

எரிகின்ற எரிதழலில் வேகின்றயுன் மென்னுடல்

…..எந்தன் வயிற்றையும் சேர்த்தெரிப்பதை யாரரிவார்..!

கரியாக நீமாறும் காட்சியைக் காணுமுன்னென்

…..கண்ணையும் பிடுங்கியுன் கையாலே எறிந்துவிடு.!

புரியாத மொழிபோலயான் புலம்புமதைக் கேட்டுப்

…..புரிந்து கொள்வோர்..! வானுலகில் இருக்கிறாரா.?

தெறிக்கு மொலிமீண்டும் எதிரொலியாய் கேட்பதுபோல்

…..புத்திரசோக கடுந்துக்கம் நெடுந்தூரத்தில் கேட்குதா..?

 

எப்போதும் இன்பமொன்றையே நாடுவர் மனிதர்கள்

…..என்றாலும் துன்பமொன்று வரும்போது தாங்கிடாரதை.!

தப்பேதும் செய்யாத தாய்க்கொரு தண்டணையாய்

…..தன்மகவை ஈன்றவுடன் பறிகொடுத்த நிலைகொடுமை.!

இப்படி ஆகுமென மனிதராரும் நினையாரில்லை

…..இதைப்போலத் துன்பமாருக்கும் வாராது அருள்வாயா.!

எப்படித் தாங்குமென்பலகீன இதயமிந்தப் பேரிடியை..

…..இனிவாழ்ந் தென்னபயன்.! என்னுயிரையும் எடுத்துவிடு.!

இறைவா..!

 

 

நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு::24-07-2017

நன்றி:: கூகிள் இமேஜ்..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.