ஒரு புள்ளியில் தொடங்கிய பயணம்..!
பெருவை பார்த்தசாரதி
இலக்கில்லாமல் யாவரும் வாழ்வில் பயணித்தாலந்த
……இல்வாழ்க்கை யென்பதொரு போதும் பயன்தாரா.!
இலகுவாகப் வாழ்வின் உச்சம்தொட நினைத்து
……இதுதான் வழியென வகுத்துக் கூறவுமுடியாது.!
பலபிறவி எடுத்தாலும் மாந்தர்பிணி யென்றும்தீராதாம்.!
……சிந்தனைசெய்து சீரும்சிறப்புமாக வாழ்வதற்கு மனித
குலத்திற்கே மகத்தான வரமாகுமந்தச் சிந்தனையே..
……ஒரு புள்ளியில் தொடங்கும் புனிதப்பயணமாகும்.!
கருப்பையில் தோன்று மதற்குள்ளொரு புள்ளியாகத்
……தொடங்குகிற வாழ்க்கை பயணமதன் முடிவுவரை..
கருத்தோடு வாழக் கற்கவேண்டு மொருபாடம்.!
……கருவறைமுதல் கல்லறைவரை கற்றலே வாழ்க்கை.!
பொருள் பொதிந்த வாழ்வதனை வாழ்வதற்கேநாம்..
……பெற்றிடுவோம் அனுபவங்கள் புதிதா யனுதினமும்.!
ஒருநிறுத்தமிலா பயணம்தான் வாழ்க்கை என்றாலது..
……புள்ளியிலா வாக்கியமாயது இனிதே தொடரவேணும்.!
உமையாளின் துணையின்றி ஈசனுலகாள முடியாது.!
……வாழ்க்கைத் துணையின்றி வாழ்ந்தும் பயனில்லை.!
நமைக்கேட்டு நம்தோலின் முடியுதிர்வ தில்லை.!
……பயணமென்று வரினதில் படுந்துன்பம் இயற்கையே.!
இமைகேட்டு விழியிரண்டும் மூடிக் கொள்வதில்லை.!
……வழிகேட்டுநம் வாழ்க்கைப் பயணம் அமைவதில்லை.!
சுமையென்று தாய்தன் கருவைச் சுமப்பதில்லை.!
……சுகமான பயண மென்றெதுவும் தொடங்குவதில்லை.!
எண்ணத்தில் நல்லெண்ணம் சேர்ந்து விட்டால்..
……இயல்பு வாழ்க்கை யென்பது மாந்தர்க்கெளிதாகும்.!
மண்ணுலகில் பிறப்பதற்கு மாதவனருள் வேண்டும்.!
……மனம்நிறைந்த வாழ்க்கைப் பயணமதில் வேண்டும்.!
புண்ணிய மொன்றே செய்யின் பிறவியில்லையாம்..
……புதிதாய் மீண்டுமீண்டும் பிறக்கவேணு மேனென்றால்.!
பண்ணுடனே பார்த்தவெது வொன்றையும் பாடும்..
……புலவராகயெம் பயணம் முடிவுவரை தொடரவேணும்..!
==============
நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு::31-07-2017
நன்றி:: கூகிள் இமேஜ்..