ஆய்வுக் கட்டுரைகள்இலக்கியம்

திரைப்பாடல்களில் உறவுமுறை: தந்தை-மகன்/தாய்-மகள் – ஆய்வு  

 –பேரா.செல்வ கனிமொழி 

முன்னுரை:

உறவுமுறைகள் காலங்கடந்தும் வாழுகின்ற மக்கட்பண்புகளுள் ஒன்றாகத் திகழ்கின்றது. இவற்றில் தந்தை – மகன் – தாய் – மகள் என்னும் உறவு பிரிக்கமுடியா நிலையுடையது. அவ்வுறவில் பொதிந்திருக்கும் அன்பின் அடர்த்தியை உணர்ந்த இயல்பான மக்கள் தாங்கள் பாடிவைத்த மக்கட்பாடல்களில் அதைப் பதிவுசெய்திருந்தனர். அதனையொட்டி எழுந்த பல்வேறு இலக்கியங்களிலும் அதைக் காணமுடிகின்றது. இத்தன்மையைத் திரைப்படப்பாடல்களில் பாடலாசிரியர்கள் உறவுமுறைகளின் உயிர்மை குறையாமல் எடுத்தாண்டுள்ளனர். அவ்வகையில் திரையிசைப்பாடல்களில் வெளிப்படும் தந்தை – மகன் – தாய் – மகள் உறவுமுறை குறித்த அடர்ந்த அன்பை ஆராய்வது இக்கட்டுரை. 

உறவுப் பொதுநிலை: 

தாயிற் சிறந்த கோயிலுமில்லை
தந்தைசொல் மிக்க  மந்திரமில்லை
……………………………
அன்னை தந்தையே அன்பின் எல்லை. 

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
மாதா பிதா குரு தெய்வம்  (முன்னோர் மொழி)

இவ்வாறாகத் தாய் தந்தையரின் சிறப்பு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. சமூக வாழ்வியல் இல்லறத்தில் கணவன் மனைவி என்பதான உறவு முறை ஒரு கூறாகும். இதில், இருவருக்கிடையிலான புரிதல், மற்றும் இன்பவாழ்வின் வெளிப்பாடு மழலை எனலாம்.

கணவன் மனைவி என்ற நிலையில் இருந்து அடுத்த படிநிலையாகத் தாய் தந்தை என்னும் வளர்ச்சியை, பெருமையினை எய்துகின்றனர். வழித்தோன்றல் என்பது முக்கிய ஒன்று எனலாம். மனித வாழ்வில் பல உறவுமுறைகள் காணப்படுகின்றன. தாத்தா-பாட்டி – மாமன்–அத்தை – பெரியப்பா–பெரியம்மா – சித்தப்பா–சின்னம்மா – அண்ணன்–தம்பி – அக்கா–தங்கை – எனக் குறிப்பிடலாம். இவை மனிதகுலத்தைப் பிணைப்போடு வாழச் செய்கின்ற உறவின் முறை ஆகும். இவற்றையெல்லாம் கடந்து பார்க்கின்றபோது,

`யாதும் ஊரே யாவரும் கேளிர்` என்பது கணியன் பூங்குன்றனாரின் அன்பினை எடுத்துரைக்கும் வலிமைமிக்க பாடல்.  இதில், இவ்வுறவு முறைகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாக கருதப்படுவது,

     தாய்-மகன்
     தந்தை-மகள்

உறவின் நிலைப்பாடு. ஒரு தாய்க்கு எத்தனை குழந்தை இருந்தாலும், அன்பு என்பது ஒன்றே. இருப்பினும், தாய்க்கு மகன்மீதும், தந்தைக்கு மகளின் மீதும் இருக்கக் கூடிய அன்பு, பாசம் என்பது இயற்கையான ஒன்று. இதே போல் பெண்மகள் தந்தை மீது செலுத்தக் கூடிய பாசமும், ஆண்மகன் தாய்மீது வைக்கக்கூடிய பாசமும் சமுதாய வாழ்வில் கண்கூடு.

தாயானவள் தன்மகனை வாழ்வின் ஆதாரம் என்று கருதுகின்றாள். ஆனால், தந்தையோ தன்மகளை இன்னொரு தாயாகவே பார்க்கின்றான்.

`தன்மகனைச் சான்றோன் எனக்கேட்டத் தாய்`
என்று வள்ளுவம் சுட்டுகின்றது.

`மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும்என்கிறார் கவிமணி.

இதன்மூலம் ஆண்- பெண் குழந்தையின் பெருமை உணரப்படுகின்றது.

அவ்வகையில் தாய்–மகன் – தந்தை–மகள் பிணைப்பு திரைப்படங்களில், குறிப்பாக சிறுவருக்கான திரைப்பாடல்களில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது என்பதை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகக் கொள்ளலாம்.

திரைப்பாடலில் தாய்-மகன்:

திரைப்படங்களில் பொருண்மை என்பது வரலாறு, காதல், துயரம், வீரம், நகைச்சுவை என வகைப்படுத்திக் கொள்ளலாம். இதில், ஏதாவது ஒரு காரணியாகக் குழந்தை அல்லதி சிறாரின் பங்கு இன்றியமையாத ஒன்றாகும். அப்படிப் பார்க்கின்றபோது சில படங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

ராம், வேலையில்லாப் பட்டதாரி, மன்னன், அப்பா, தோனி, முப்பொழுதும் உன் கற்பனைகள் போன்ற படங்களைக் குறிப்பிடலாம்.

சான்றாகப் பாடல்,

`ஆராரிரோ நான் இங்குப் பாட
தாயே நீ கண்ணுறங்கு
என்னோட மடிசாய்ந்து` (ராம்)

`அம்மா அம்மா எனக்கு யாரு? அம்மா!
உன்ன விட்டா எனக்கு யாரு? அம்மா!` (வேலையில்லாப் பட்டதாரி)

`அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே` (மன்னன்)

என்பது போன்ற பாடல்களைக் குறிப்பிடலாம். தாய்-மகன் உறவு நிலையில் இவை சில. இதுபோல எண்ணிலடங்காப் பாடல்கள் காணக்கிடக்கின்றன.

`சான் பிள்ளை ஆனாலும்
ஆண் பிள்ளை` (பழமொழி)

எனக்கருதும் மனப்போக்கு தாயிடம் உள்ளது எனலாம். தன் வாழ்வாதாரம் தன் மகன் என நினைக்கின்றாள் தாய்; அதுபோலவே மகனும் தன் தாயின் மீது எல்லையற்ற பாசமும் பற்றும் கொண்டவனாக இருக்கின்றான்.

`அம்மா என்றால் அன்பு`என்பதற்கேற்பப் பசித்திருக்கும் வேளையறிந்து உணவுத்தரக்கூடியவள், தன்னலனை நாடாமல் தன்மகன் நலனையே எண்ணிப் போற்றுபவளாக இருப்பவள், வாழ்பவள் தாய் என்றால் மிகையன்று.

தந்தை – மகள் – பிணைப்பு:

குழந்தைக்குத் தாய் முதன்மையானவள் என்றால், தந்தை அதற்கு அடுத்து போற்றப்படக் கூடியவர். பல வீடுகளில் தந்தையே தாயாக மாறி வாழ்பவர் இருக்கின்றனர். தாயுமானவன் என்று சொன்னால் அது அமிழ்தம்.

ஒரு தந்தைக்குத் தன் இருபால் குழந்தைகள் மீதும் அன்புஉண்டு. இருப்பினும் பெண் பிள்ளைகளைத் தாயாகப் பார்க்கும் தந்தையர் ஏராளம் ஏராளம். ஒரு குடும்பத்தில் மூத்தபிள்ளை பெண்ணாகப் பிறக்கின்றபோது, அக்குழந்தையினை மகாலட்சுமியாகவே கருதுகின்றனர். சில முரண்பட்ட கருத்துக்கள் இருந்தாலும், அவை காலப்போக்கில் அழிந்துவிட்டன எனலாம்.

தந்தை மகளின் அன்பினை வெளிப்படுத்தும் சில படங்களின் பாடல்களைக் காணலாம்.

 • கன்னத்தில் முத்தமிட்டால்
 • சொல்ல மறந்த கதை
 • அபியும் நானும்
 • சிறுத்தை
 • தெய்வத்திருமகள்
 • தங்க மீன்கள்
 • உன்னை அறிந்தால்
 • உன்னைச் சொல்லி குற்றமில்லை
 • பசங்க-2

இதில்,  சில படங்களில் பாடல்களைக் பார்க்கின்றபோது தந்தை – மகளின் பிணைப்பு நெகிழச்செய்கிறது எனலாம்.

சான்றாக, 

வாவா என் தேவதையே
பொன்வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா (அபியும் நானும்)

என்பதில், தந்தை தன் மகளை இளவரசியாக, தேவதையாகப் பல வடிவங்களில் நோக்குகின்றான்.

`சித்தாடைக் கட்டியவள் நடக்கும்போது
பெத்தவள் சாயல் என்று நினைத்துக்கொண்டேன்.

எனவும், `தங்கத்தை மார்போடு அணைக்கையிலே தாய்மையின் பெருமையினை உணருபவராக குறிப்பிடுவது மறுக்க இயலாத உண்மை.

இதைப்போல், வேறொரு பாடலில்,

`உனக்கென்ன வேணும் சொல்லு`

என்பதில் மகளோடு தந்தை இருக்கும்போது உலகமே மாறிவிட்டதாகவும், புது உலகம் சென்றதாகவும் எண்ணச்செய்வது உடல் சிலிர்க்கச் செய்கின்றது. தாலாட்டு என்பது தாய்க்குரியது மட்டுமல்ல தந்தைக்கும் உண்டு என்பதைப் பின்வரும் பாடல் குறிப்பிடுகின்றது. 

ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
………………………….. மழலையின் மொழிகேட்டு
தாயாகத் தந்தை மாறும்………………     (அபியும் நானும்)

என்பதிலிருந்தும்,

ஆராரோ ஆரிரரோ
அம்புலிக்குத் தான் இவரோ (சிறுத்தை) 

எனவரும் பாடலிலும் தந்தை தாலாட்டுப் பாடுவதாக இருப்பது அவர்களின் அன்பினைப் புலப்படுத்துவதாகவே அமைகின்றது. மேலும்,

ஆனந்த யாழை மீட்டுகிறாய் – அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்… (தங்கமீன்கள்)

மகளை ஆனந்தயாழ் இசையாகக் கருதுவது சொற்களில்லா வார்த்தை எனலாம். 

முடிவுரை:

திரைப்பாடல்கள் தரமுள்ளவை தரமற்றவை என்னும் விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், அப்பாடல் மக்கள் மனத்தில் எளிதில் சென்றுசேரும் ஊடகக்கருவியாகத் திகழ்ந்துக்கொண்டிருக்கிறது. திரையிசைப்பாடலுக்கான மெட்டுக்குள் வார்த்தைகளை நுழைப்பது நேர்த்தியே. திரைப்பாடல்களில் குழந்தைகளுக்கான பாடல்கள், குழந்தைகள் பிம்பங்களாக வந்து நிகழ்த்தும் பாடல்கள் என்று குழந்தைகளுக்கும் தாய் தந்தையர்களுக்குமான உறவுநிலை உணர்த்தும் பாடல்கள் நிறைந்து காணப்படுகின்றன. கால வேறுபாடின்றி இத்தன்மைத்தான பாடல்கள் வந்துகொண்டேயிருக்கின்றன.

 

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (1)

 1. Avatar

  வாழ்த்துக்கள்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க