-முனைவர் கோ.வசந்திமாலா 

     தனிமனிதன் தன் கடமைகளைத் தவறாது செய்வது அறமாகும். மனிதனின் நல்லொழுக்கம் என்பது செயல், எண்ணம் ஆகிய இரண்டும் சேர்ந்ததாகும். பண்டைய தமிழ்ச் சான்றோர்கள் அறத்தைக் கொள்கையாகவோ, கோட்பாடாகவோ போற்றவில்லை. சமயமாகவும் கருதவில்லை. அறத்தை வாழ்க்கை நெறியாகவே போற்றினார்கள்; வாழ்ந்தார்கள். மனிதன் தன் வாழ்க்கையின் பலவகை அனுபவங்களிருந்து அறிவு பெறுவதே சிறந்த வாழ்வியலாகும். அவ்வாழ்வியல் தூய்மையானதாக அமைய வேண்டுமெனில் மனிதன் தனக்கென ஒரு தனி நியதி அறத்தை மேற்கொண்டு வாழவேண்டும். அத்தகைய அறவாழ்வை எவ்வாறு அமைத்துக் கொள்வது என்பதனை, நமது சங்க இலக்கியப் பேழை என்று அழைக்கப்படும் புறநானூறு செம்மையுறச் செய்துள்ளது. நமது தமிழ் நாகரிகத்திற்கு ஒரு மூலதாரம்.

அறம் – சொற்பொருள் விளக்கம்:

     அறம் என்பதற்குத் தமிழ் அகரமுதலி, “தருமம் புண்ணியம் அறச்சாலை, தருமதேவதை, யமன், தகுதியானது, சமயம், ஞானம், நோன்பு, இன்பம், தீப்பயன் உண்டாக்கும் சொல்”1 என்றுபொருள் தருகின்றது. இதில் கூறப்பட்டுள்ள அனைத்துச் சொற்பொருள்களும் மனிதனுடைய வாழ்வோடு தொடர்புடையனவாகும்.

     அறம் என்னும் சொல் முறையே வழக்கம், நீதி, கடமை, புண்ணியம், ஈகை, அறக்கடவுள், சமயம் என்ற பல்வேறு பொருள்களிலும் வழங்கப்பட்டு வருகிறது”2 என்று க.திருநாவுக்கரசு அவர்கள் அறம் என்பதற்குப் பொருள் கூறுகின்றார். எனவே, மனிதன் அறவழிப்பட்ட வாழ்க்கை வாழ்தலே தனி மனிதனுக்கும், மனித சமுதாயத்திற்கும் நன்மையும், உயர்வும் தரும் என்பதனைக் கருத்தில் கொண்டு வாழவேண்டும்.

இலக்கண நூல்களில் அறம்:

     பண்டைத் தமிழிலக்கண நூல்களும், இலக்கியங்களும் அறத்தைப் பின்பற்றியே எழுதப்பட்டனவாக அமைந்துள்ளன.

     தொல்காப்பியம் தமிழ்மொழியில் சிறந்த இலக்கண நூல். தமிழ் மொழியின் இலக்கணத்தைச் செம்மையாகக் கூறுவதுடன் அறக்கருத்துக்களையும் விளக்குகின்றது. தலைவன் தலைவியின் வாழ்வியல் அறன் வழிப்பட்டதாய் அமைய வேண்டும் என்பதனை,

     காமஞ் சான்ற கடைக் கோட் காலை
     ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
     அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
     சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே”என்றும்,

அன்பே அறனே இன்பம் நாணொடு”என்றும் மற்றும் பிற அறக்கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.

களவியல் உரை:

     இறையனார் களவியல் உரையிலும் அறக்கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.

இதில்,
பெண்டிற்கு அறமென்பது கற்பு
     கற்பின் தலைநிற்றல்
     அறத்தொடு நிற்றலாகும்”என்ற அடிகளால் அறியலாம்.

சங்க இலக்கியங்களில் அறம்:

     சங்க இலக்கியங்கள் காதலையும், வீரத்தையும் பாடுபொருளாகக் கொண்டுள்ளன. இருப்பினும் பெரிதும் அறக்கருத்துக்களையும், அவ்விலக்கியங்கள் போற்றுகின்றன. வீரத்திற்கு முதலிடம் கொடுத்தவர்கள் அறக்கருத்துகளையும் நினைவு கூர்ந்தனர்

     அறனும் அன்றே ஆக்கமும் தேயும்”என்று நற்றிணையும்,

திறவோர் செய்வினை அறவது ஆகும்”7என்று குறுந்தொகையும்.

அறம்புரி அருமறை நவின்ற நாவின்”8என்று ஐங்குறுநூறும்,

அறம்புரி அந்தணர் வழிமொழிந் தொழுகி”9

என்று பதிற்றுப்பத்தும்.

ஞாயிறு திங்கள் எறனும் ஐவரும்”10என்று பரிபாடலும்,

பிறர் நோயுந் தந்நோய் போல் போற்றி அறனறிதல்”11
என்று கலித்தொகையும்,

அறன் கடைப் படாஅ வாழ்க்கையும்”12
என்று அகநானூறும், அறக்கருத்துக்களை வெளிப்படுத்துகின்றன.

     அறநூல்களில் முதலாவதாக அமையும் திருக்குறள் மனித சமுதாயத்தைப் பண்படுத்தத் தேவையான அறக்கருத்துக்களக் கூறியுள்ளது. தனி மனிதனுக்குத் தேவையான அறங்களை வலியுறுத்துகிறது.

     “அறத்தான் வருவதே இன்பம்”13என்றும்.

“அறனிழுக்கா தல்லவை நீக்கி”14என்றும்,

“ அறன் அறிந்த மூத்த அறிவுடையார்”15என்றும்,

அறன்அறிந்து ஆன்றமைந்த சொல்லான்.”16என்றும்,

     “அறத்திற்கும், ஆதியாய் நின்றது”17     என்றும் கூறுவதை நோக்க இல்லறம் ஆடம்பரத்தாலோ, பொருள் சேர்க்கையாலோ, இன்னும் பிறவற்றாலோ உயர்ந்திருப்பின் பெருமையில்லை. பழிநீங்கி வாழ்வதலே சிறந்தது என்பதனைக் குறிப்பால் ஆங்காங்கே வள்ளுவர் உணர்த்துவதை அறியலாம். அரசுக்கும் அறமே துணை என்று வலியுறுத்துவதை அறிய முடிகின்றது. மேலும் அறத்தின் மாண்பினையும், அறம் செய்யப்படும் விதத்தையும் உணர்த்துகிறது.

அறத்தின் சிறப்புக்கள்:

     ஒருவனுக்கு அறஞ்செய்தலின் மேம்பட்ட ஆக்கமும் இல்லை. அதனை மயக்கத்தான் மறத்தலின் மேம்பட்ட கேடும் இல்லை. இதனை வள்ளுவர்,

     அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை அதனை
     மறத்தலின் ஊங்கில்லை கேடு”18 என்கிறார்.

புறநானூறு போற்றும் அறம்:

     பதினெண் மேல்கணக்கு நூல்களை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எனக் கூறுவார். அவற்றில் எட்டுத்தொகை நூல்களின் வரிசையில் புறநூலாக இடம் பெறுவது புறநானூறு. இதில் பண்டைத் தமிழகத்தின் அரிய வரலாற்றுத் தொகுப்பு, பண்பாட்டுக் களஞ்சியம், இலக்கியக் கருவூலம், இதனுள் தமிழகத்தின் கோநகரங்கள், துறைமுகங்கள், மலைகள், ஆறுகள், கடற்கரைகள், காடுகள் பற்றிய செய்திகளும், புரவலர்கள், புலவர்களைப் போற்றி அவர்களின் அறிவுரைகளைச் செவிமடுத்து ஒழுகிய சிறப்புக்களும், மன்னர் தம் மாண்பு பற்றிய அரிய குறிப்புகளும் போர்த்தினவுற்று அறமுறை பிறழாது போர்புரிந்து மார்பில் வேலேற்ற மைந்துடைக் காளையின் வீரப்பெருமைகளும், மூவேந்தரின் குடிமை முதலான பண்புகளும், குறுநில மன்னர்களின் ஆண்மை, ஈகை, ஒப்புரவு முதலான சால்புகளும், களச்சாவுற்ற தம் மைந்தரின் உடல் கண்டு பெருமிதமெய்திய தாயரின் மறக்குணங்களும் பிறவும் மிகவும் அழகுற எடுத்துணர்த்துகின்றன. மேல் எடுத்துரைக்கப்பட்ட அனைத்திலும் “அறம்” என்ற உணர்வு தோய்ந்து காணப்படுவது நாம் அறியத்தக்கது என்பதற்குச் சில சான்றுகள்.

     இவ்வுலகம் இன்றளவும் நிலையாக அமைவதற்குக் காரணங்கள் எவை என்று வேண்டுவோர்க்கு அறம் செய்வோரும், அறச்சிந்தனையுடையோருமே என்பதனை, கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி,

     உண்டால் அம்ம, இவ் உலகம் – இந்திரர்
     அமிழ்தம் இயைவது ஆயினும். இனிது” எனத்
     தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்,
     துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி,
     புகழ் எனின், உயிரும் கொடுக்குவர், பழி எனின்
     உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்;
     அன்ன மாட்சி அனையர் ஆகி,
     தமக்க என முயலா நோன் தாள்
     பிறர்க்கு என முயலுநர் உண்மையானே”19  என்கிறார்.

     அமிர்தமே இயைவது ஆயினும் தாமே தனியே உண்பவர்கள் இல்லை. அறம் செய்து வாழும் தன்மையுடைய பெரியோர்கள் இவ்வுலகில் வாழ்வதால் தான் இவ்வுலகம் நிலைந்துள்ளது என்று அறத்தின் சிறப்பு பேசப்படுகிறது.

     இக்கருத்து திருக்குறளில் விருந்தோம்பல் என்ற அதிகாரத்தில்,

     விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
     மருந்தெனினும் வேண்டற்பாற் அன்று”20 

     என்று வள்ளுவர் விருந்தினர் வெளியே இருக்க சாவா மருந்து என்றாலும் அமிர்தம் என்றாலும் உண்ணக்கூடாது என்று குறிப்பிடுகின்றார்.

மறத்திலும் அறம்

     தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த வாழ்வில் மறக்குடியில் பிறந்தவர்கள். எனினும் அறம்போற்ற மறந்தில் என்ற கருத்தினை, பாண்டியன் பல்யாகசாலை முதுகுடடுமிப் பெருவழுதி நெட்டிமையார்,

     ஆவும், ஆன் இயற் பார்ப்பன மாக்களும்
     பெண்டிரும், பிணியுடையீரும், பேணித்
     தென்புலவாழ்நர்க்கு அருங் கடன் இறுக்கும்
    பொன்போல் புதல்வர்ப் பெறாஅ தீரும்
     எம்அம்பு கடி விடுவதும், நும் அரண் சேர்மின்
    என அறத்து ஆறு நுவலும் பூட்கை மறத்தின்”21என்ற படலில், போர் செய்வதிலும் அறம்போற்றி வாழ்ந்த அறச்சிந்தனைகளைப் புறநானூற்றுப் பாடல்கள்வழி அறியலாம்.

     உலகிலுள்ள உயிர்களைக் காத்துநின்று வலிமை மிக்கவர்களுடன் மட்டுமே போர் செய்ய வேண்டும். இல்லை எனில் பழி பாவங்கள் உண்டாகும் என்ற  இக்கருத்தை வள்ளுவர்.

     மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்என்ப
     தன்னுயிர் அஞ்சும் வினை”22 

காலத்தை வென்ற புறத்தில் – அறம் :

     நம் நாட்டின் பழந்தமிழர்கள் எக்காலத்திலும், எந்த நேரத்திலும் எல்லோருக்கும் வழங்கி அறம் போற்றி வாழ்ந்தார்கள் என்ற சிந்தனையை அதியமான் நெடுமானஞ்சியை ஔவையார் பாடிய

     ஒருநாள் செல்லலம்; இரு நாள் செல்லலம்;
     பல நாள் பயின்று, பலரொடு செல்லினும்
     தலைநாள் போன்ற விரும்பினன் மாதோ –
    இழைஅணி யானை இயல்தேர் அஞ்சி
    அதியமான்; பரிசில் பெறூம் காலம்
     நீட்டினும் நீட்டாது ஆயினும் யானைதன்
    கோட்டுஇடை வைத்த கவளம் போலக்…என்ற படலில் அதியமான் அஞ்சி எவ்வாற அறம் செய்து வாழ்ந்தான் என்பதனைப் புறப்பாடல் கல்வெட்டு போல் பதிவு செய்துள்ளது நமக்கு அகச்சான்றாய் அமைகின்றது.

வள்ளுவர் கூறிய,

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
     பேரறி வாளன் திரு”24

என்ற குறளைப் போல் அதியன் உள்ளூரில் பழுத்த பயன்மரம் போன்று வாழ்ந்தான் என்ற வாழ்வியல் இலக்கியமாய்ப் புறநானூறு புலப்படுத்துவது தெளிவாகிறது.

அளந்தறியா – அறம்:

     அறம் என்பது மழை எவ்வாறு கைமாறு கருதாமல் வரையாது எல்லோருக்கும் ஏற்றத்தாழ்வின்றி வாரி வழங்குகிறதோ, அதுபோல் நம் முன்னோர்கள் அறம்செய்து வாழ்ந்தனர் என்பதற்கு மலையமான் திருமுடிக்காரியைக் கபிலர் பாடண்திணை வழிப் பாடியுள்ள பாடல்,

     நாள் கள் உண்டு, நாள் மகிழ் மகிழின்,
     யார்க்கும் எளிதே. தேர் ஈதல்லே
     தொலையா நல்இசை விளங்கு மலையன்
     மகிழாது ஈத்த இழை அணி நெடுந்தேர்
     பயன் கெழு முள்ளுர் மீமிசைப்
     பட்ட மாரி உறையினும் பலவே 

நன்றாக வாழும் நாள்களில் மதுவை உண்டு மகிழ்ச்சியுடன் வாழும் நாள்களில் அறம் செய்தோர் பலர். ஆனால் மது அருந்தாமல் இருக்கும் வேளையிலேயும் விருப்பமுடன் பொன் அணிகலன் அணிந்த நெடுந்தேரினைக் கொடையாக வழங்கினான். அவ்வாறு வழங்கிய தேர்கள், பயன் பொருந்திய முள்ளூர் மலை உச்சியின்கண் பெய்த மழைத்துளியினும் பலவாகும் என்று கூறியுள்ள இருக்கருத்து அறத்தின் உச்சநிலையைக் காட்டுவதாய் அமைந்துள்ளது.

***

பார்வை :

  1. ம.சண்முகம்பிள்ளை – தமிழ் – தமிழ் அகரமுதலி
  2. க.த. திருநாவுக்கரசு – திருக்குறள் நீதிஇலக்கியம்
  3. தொல்காப்பியம்
  4. இறையனார் களவியலுரை
  5. நற்றிணை
  6. குறுந்தொகை
  7. ஐங்குறுநூறு
  8. பதிற்றுப்பத்து
  9. அகநானூறு
  10. புறநானூறு

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.