-இன்னம்பூரான்
ஆகஸ்ட் 7, 2017

ஆங்கிலத்தில் ‘எல்லாவற்றையும் உட்படுத்திய’ என்ற பொருள் கூறும் ecumenical என்ற சொல் உணர்த்தும் இலக்கை, ஒரு பெரிய கோரிக்கையாக முன்வைக்கிறேன். அதன் பொருட்டு, ஒரு கோப்புக்கூட்டல் செய்ய விரும்புகிறேன்.

இன்றைய கோப்பு: [5]

வல்லமையாளர்

innam

வல்லமை என்ற மின்னிதழ் வாரந்தோறும் ஒரு வல்லமையாளரைத் தேர்வு செய்கிறது. தற்காலம் அந்த பணியை மனமுவந்து முன்னின்று நடத்தி வரும் செல்வன், ஆய்ச்சிமார் போல் தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுப்பது போலும், தங்கத்தைப் புடம் போடும் ஆசாரி போலும், நன்கு ஆராய்ந்தபின் நமக்கு நற்செய்திகள் பல அளிக்கிறார், தேர்வு செய்யப்பட்ட வல்லமையாளரின் சாதனைகளை விவரிக்கும்போது. எனக்கு எவிடென்ஸ் கதிர் பற்றிப் பல வருடங்களாகத் தெரியும்; திரு வின்சென்ட் ராஜ் பற்றி இன்றுதான் தெரியும்.

திரு. வின்செண்ட் ராஜ் தன்னலம் நாடாதவர், நீதிக்குப் போராடும் விடாக்கொண்டர் என்பது தெளிவாகத் தெரிகிறது. சமூகத்தில் அடிக்கசண்டாகத் தங்கிக்கொண்டு, சமுதாயத்தில் நஞ்சு விதைக்கும் சாதி,மத, இன பேதங்கள், கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து,ஊழல்கள், முறைகேடுகளுக்கு அரசு முன்னின்று கவசம் பூட்டும் கேவலங்கள் ஆகியவற்றை எதிர்ப்பது உயிருக்கு அபாயம் என்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். அவர் அத்துடன் நிற்காமல், சமுதாயத்தால் காயம் பட்டவர்களுக்கு புத்துணர்ச்சியும், புனர்வாழ்வும் அளிக்கப் பாடுபடுவது போராளியின் அமைதிச்சாரல் என்க. போனஸ்:  கூட்டுப் போராளி.

திரு.செல்வன், எவிடென்ஸ் கதிர் அவர்கள் சட்டத்தைக் கையாளும் விதத்தை வருணித்திருப்பது தேவையான அணுகுமுறைதான். சட்டத்தை எதிர்க்குமுன் அமலில் இருக்கும் சட்டத்துக்கு நாம் கட்டுப்படுகிறோமா என்ற வினாவுக்கு விடை நாடுவது நலம் பயக்கும்.

தேசியச் சட்ட ஆணையம் மற்றும் தேசிய மகளிர் ஆணையம் ஆகியவை சாதியப் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று பரிந்துரை செய்தும், இன்னும் இந்த அரசாங்கம் அதை நிறைவேற்றாமல் கிடப்பில்போட்டு வைத்திருப்பது பிரதிநிதித்துவ மேலாண்மைக்கு, ஓர் இழுக்கு. ஏன்? தமிழ்நாட்டு அரசியலில் சாதீயம் தான் பல்லாண்டுகளாகப் பேயாட்டம் ஆடுகிறது. இந்தச் சூழ்நிலையில் நமக்கு நூற்றுக்கணக்கான எவிடென்ஸ் கதிர்கள் தேவை.

உச்ச நீதிமன்றத்தில் 22 மாநில அரசுகள் தங்களின் மாநிலங்களில் சாதியப் படுகொலையில் நிகழ்வதை ஒப்புக்கொண்டபோதும், கலப்புத் திருமணங்கள் அதிகம் நடக்காத மாநிலங்களில் நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் இருக்கும் அவலட்சணத்தில், தமிழகஅரசு தங்கள் மாநிலத்தில் சாதியப் படுகொலைகள் நிகழ்வதே இல்லை என்று கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது மட்டுமன்று; அவ்வாறு சாட்சியம் பதிவு செய்தவர் மீது ‘பொய்சாட்சி’ வழக்குப் பதிவுசெய்ய வேண்டும். பல்லாண்டுகளாக, எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், மலம் அள்ளுவது, துப்புரவு செய்வது ஆகியவற்றைப் பற்றியும் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் அரசு இயந்திரத்தால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 175 சாதியப் படுகொலைகள் இங்கு அரங்கேறி உள்ளன. அவற்றில் கொலையுண்டவர்களில் 80% பேர், தலித் இளைஞர்களைக் காதலித்து மணமுடித்தப் பெண்களே என்ற புள்ளி விவரம் தமிழ்ச் சமுதாயத்தை, நமது சங்க காலப் பண்பை, எள்ளல் செய்கிறது. ஓர் ஆறுதல் செய்தி: ஒரு பெண் ஓர் இளைஞனை அழைத்து வருகிறாள், காதலனாக. அவர் நசுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர். எதிர்நீச்சல் போட்டு முன்னுக்கு வந்த குடும்பம். அதனால் மேல்தட்டு தருமமிகு சென்னைச் சமுதாயம் அவர்களை ஏற்றுக்கொள்வதைக் கண்ணாரக் கண்டேன். பிறந்த வீட்டில் ஒத்துக்கொள்ளமாட்டார்கள்; அவர்களிடம் சொல்லப்போவதில்லை என்பதில் திடமாக இருந்தாள். என் செய்வது? என் தீர்மானத்தை ஒப்புக்கொள்வதிலும் தீர்மானமாக இருந்தார்கள், இருவரும். அதாவது என் சம்மதமில்லாமல் திருமணம் முடிப்பதில்லை என்ற தோற்றம். யாதொருவிதமான அசம்பாவிதம் இல்லாமல் திருமணம் நிறைவேறியது. பிறந்த வீட்டிலும் ஓரளவுக்கு சமாதானம் ஆகிவிட்டது, மேலும் மென்மையான செய்திகள் உண்டு. அவரவது தனிமை உரிமையை மதித்து (ப்ரைவசி) மேலதிக விவரங்களை கூறவில்லை. இந்த உண்மை வரலாறு ஒரு பாடம் போதிக்கிறது. அவரவரது குடும்பத்தில் முதியவர்கள் அறிவு முதிர்ச்சியையும், சங்கப்பாடல்களில் வரும் முக்கோல்பகவர்களைப் போல் இயல்பு வாழ்க்கையின் சுவாசத்தையும், தங்கள் மலர்ந்த நினைவுகளின் இன்பத்தையும் முன்னிறுத்திக் கலப்புமணமோ, சாதி மணமோ, மனம் ஒத்து நடக்கும் காதல் மணங்களை வரவேற்க வேண்டும்.

-#-

சித்திரத்துக்கு நன்றி:

http://discoverybookpalace.com/product_images/p/766/_சமுதாயம்__11579_zoom.JPG

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.