சிறீசிறீஸ்கந்தராஜா

**************************************************

உலகின் முதல் இசை

தமிழிசையே!!

***********************************************

இசைத்தமிழின் தொன்மை – 74

***********************************************

 20733166_1468717456500351_41761712_n

பழந்தமிழிசையில் பண்கள்

**********************************

**************************************************

தமிழ்க்கீர்த்தனைக் காலம் : கி.பி.1550 – 1800

*******************************************

 

கீர்த்தனை என்பது இசைப்பாடல் வகைகளுள் ஒன்றாகும்.

 

பெரும்பாலும் இறை புகழ் பாடும் இசைப்பாடல்களாக உள்ளன.

 

பல்லவி, அனுபல்லவி, சரணம் ஆகிய நிலையில்

எடுப்பு, தொடுப்பு, முடிப்பு எனும் நிலையில்

இவை அமைந்துள.

 

கலித்தொகைப்பாடலில் உள்ள தரவு, தாழிசை, சுரிதகம்

இவ்வகை முன்னோடிகளாக உள்ளன.

 

இவ்வகையில் தமிழில் கீர்த்தனைப் பாடல்கள்

சீகாழி முத்துத்தாண்டவர் கி.பி.1525 – 1605 காலம் முதல் தொடங்கிற்று.

 

முத்துத்தாண்டவர் திருஞான சம்பந்தரைப் போல்

சீகாழியில் பிறந்தவர்.

 

இவர் பாடிய 60 கீர்த்தனைகள் இன்று கிடைத்துள.

 

இவர் தமிழ்க் கீர்த்தனையின் தந்தையாக விளங்குகிறார்.

 

நாட்டியத்திற்குரிய பதம் என்கிற இலக்கிய வகையையும்

இவர் படைத்துள்ளார்.

 

தமிழ்நாட்டியப் பதத்தின் தந்தையாகவும்

இவர் போற்றப்படுகிறார்.

 

இவர் பாடிய நாட்டியப் பதங்கள் 25 கிடைத்துள.

 

இவர் தமிழ்க் கீர்த்தனை பாடிய காலம் கீர்த்தனைக்

காலமாகக் கணக்கிடப் பெற்றுள்ளது.

 

முத்துத் தாண்டவரைத் தொடர்ந்து

பாபநாச முதலியார் (கி.பி.1640-1740)

மிகச் சிறந்த இயலிசைப் புலவராக உள்ளார்.

 

இவர் படைத்த கும்பேசாக் குறவஞ்சி எனும்  நூலைப் பாடியுள்ளார்.

 

குறவஞ்சி நூலின் முதல் நூலாக இந்நூல் திகழ்கிறது.

 

இவரைத் தொடர்ந்து இராமநாடகக் கீர்த்னை பாடிய

சீகாழி அருணாசலக் கவிராயர் உள்ளார்.

 

கம்பராமாணயத்தை இசை நாடகக் கீர்த்தனையாக

இவர் இயற்றியுள்ளார்.

 

இவர் இசை நாடகக் கீர்த்தனை பாடிய முதன்மையராக

உள்ளார்.

 

இவரைத் தொடர்ந்து தில்லைவிடங்கன்

மாரிமுத்தாப்பிள்ளை (1712 – 1787) உள்ளார்.

 

பழிப்பதுபோல் புகழ்ந்து பாடும் நிந்தாஸ்துதியில் அமைந்த தமிழ்க் கீர்த்தனை பாடிய முன்னோடியாக இவர் உள்ளார்.

 

இவர் பாடிய 25 கீர்த்தனைகள் இன்று கிடைத்துள.

 

முத்துத்தாண்டவர்,  

அருணாசலக் கவிராயர்,

மாரிமுத்தாப்பிள்ளை

மூவரையும் சீர்காழி மூவர் என்றும்

தமிழ்க் கீர்த்தனை பாடிய மூவர்

என்றும் அழைப்பர்.

 

இவர்கள் பெயரால் சீர்காழியில் மணிமண்டபம் அமைக்கப்பெற்றுள்ளது.

 

தமிழக அரசு சீர்காழி மூவர் விழாவையும்

ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றது.

 

இம்மூவர்களையும் தொடர்ந்து தாயே யசோதாஎன்று தொடங்கும் தோடி இராகக் கீர்த்தனை பாடிய

ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் (1715 – 1775) உள்ளார்.

 

இவர் பாடிய 11 க்கும் மேற்பட்ட கீர்த்தனைகள்

இன்று வழக்கில் உள்ளன.

 

இவரைத் தொடர்ந்து திருவண்ணாமலை இறைவன் மீது அருணாசலக் கீர்த்தனை பாடிய வீரணப் புலவர் (1720 – 1810) உள்ளார்.

 

இவர் பாடிய 398 இசைப்பாடல்கள் உள.

 

இக்காலத்தில் பள்ளு நாடகம், நொண்டி நாடகம், குறவஞ்சி என்கிற இசை நாடக இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.

 

குறவஞ்சியில் மட்டும் சுமார் 130 நூற்கள் உள.

 

கும்பேசர் குறவஞ்சி, குற்றாலக் குறவஞ்சி,

சரபேந்திர பூபாலக் குறவஞ்சி, விராலிமலைக்குறவஞ்சி, தியாகேசர்குறவஞ்சி என்கிற நாட்டிய நாடகங்கள் தோற்றம் பெற்றன.

 

குமரகுருபரர் (1615 – 1688),

பரஞ்சோதி முனிவர் (1675 – 1725),

அவிநாசி நாதர் (1725 – 1785),

தொட்டியக்கலை சுப்பிரமணிய முனிவர் (கி.பி.1740-1810) போன்றோர் தோன்றி  நூற்களைப் படைத்துள்ளனர்.

இந்நூற்களில் இசைபற்றிய செய்திகள் உள.

நந்தனார் சரித்திரக் கீர்த்தனையும்

இதர கீர்த்தனைகளையும்

பாடிய கோபால கிருஷ்ணபாரதியார் (1790-1885)

இசைத்தமிழ் உலகிற்குப் பெரிதும்

சேவை புரிந்தவராக உள்ளார்.

இவரின் நந்தன் சரித்திரக் கீர்த்தனை மிகச் சிறந்த

இசை நாடக நூலாகும்.

 

இவரின் ஏனைய கீர்த்தனைகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மூலம் பதிப்பிக்கப் பெற்றுள்ளன.

 

இவரையும் சேர்த்து தமிழ்க் கீர்த்தனை நால்வர் என்று கூறும் வழக்காறும் நிலவுகிறது.

 

18, 19 நூற்றாண்டுகளில் இசைத்தமிழுக்கு வளம் சேர்க்கும் படைப்புகளைத் பலர் தந்துள்ளனர்.

 

இராமகவி (1750-1810) என்பார் தஞ்சையிலிருந்து

சென்னைக்குச் சென்றவர்.

 

இவர் பாடிய 9 பதங்கள் அச்சில் வந்துள.

 

பாலகவி செண்பக மன்னார் (1789 – 1840)

பார்வதி திருக்கல்யாண நாடகம்,

சிவராத்திரி நாடகங்களை எழுதியுள்ளார்.

 

ஆனைஐயா (1798 – 1824) தஞ்சை இரண்டாம் சரபோஜி

அவையில் இருந்தார்.

 

இவரும் இவரின் சகோதரர் ஐயாவையர் சிறந்த இசைவிற்பன்னர்களாக இருந்தனர்.

 

தெலுங்கு, தமிழ் மொழிகளில் இசைப் பாடல்களைப்

பாடியுள்ளனர்.

 

26 தமிழ்க் கீர்த்தனங்கள் வழக்கில் உள.

வைத்தீசுவரன் கோயில் சுப்பராமையர் (1800-1850)

வைத்தீசுவரன் கோயில் முத்துக்குமாரசாமி மீது

76 பதங்கள் பாடியுள்ளார்.

 

இவை குஜ்லி பதிப்பில் வெளிவந்துள்ளன.

 

கனம் கிருஷ்ணய்யர் (1825-1880) கன இராகங்களில்

பாடுவதில் வல்லவர்.

 

இவர் கவித்தலம் இராமபத்திர மூப்பனார் மீது குறவஞ்சி பாடியுள்ளார்.

 

இவர் பாடிய 57 கீர்த்தனைகளை உ.வே.சாமிநாதய்யர் பதிப்பித்துள்ளார்.

 

இசைத்தமிழ் அறிஞர்களுள்

நீலகண்ட சிவனும் (1839-1900) ஒருவராவார்.

 

இவர் பாடிய இசைப் பாடல்கள் திருநீலகண்ட போதம்

என்கிற பெயரால் 1895 இல் அச்சில் வந்துள.

 

தேவாரம், திருவாசகம், தாயுமானவர்  பாடல்கள் போல்

இவை உள.

இவர்4446 பாடல்கள் வெளிவந்துள்ளன.

 

தஞ்சை கரந்தையைச் சார்ந்த ஆறுமுக உபாத்தியாயர் (1820-1890) பாடிய கீர்த்தனங்கள் சிவ சுப்பிரமணிய சுவாமி கீர்த்தனம்

என்கிற பெயரில் அச்சில் வந்துள.

 

மரக்கத்தூர் ஆறுமுக சுவாமிகள் (1827-1888)

போலீஸ்காரராக இருந்தவர்.

கிளிக் கண்ணி பாடியுள்ளார்.

 

தஞ்சை வாசுதேவ கவிபாடிய 76 பதங்கள்

தஞ்சை சரசுவதி மகால் நூல்நிலையம் மூலம்

வெளிவந்துள்ளன.

 

இவர்களைப் போல் பலர் இசைத்தமிழ்ப் பாடல்களைப் படைத்துள்ளனர்.

அருட்பிரகாச இராமலிங்க அடிகளார்,

வேதநாயகம் பிள்ளை,

கிளிக்கண்ணி சுப்பராய சுவாமிகள்,

மாம்பழக் கவி,

காவடிச்சிந்து அண்ணாமலை ரெட்டியார்,

குணங்குடி மசுதான் சாகிப்

போன்றோர் இசைத்தமிழ் வளர்த்த

சான்றோர்களாக உள்ளனர்.

 

இராமலிங்க அடிகளார் (1823 – 1874) படைத்த

திருவருட்பா பாடல்கள் ஆறு திருமுறைகளாக வகுக்கப் பெற்றுள்ளன.

 

இவை 5818 பாடல்களைக் கொண்டுள.

இவைகளில் 1011 பாடல்கள் இசைப் பாடல்களாக உள்ளன.

 

இவை இன்றைய இசை அரங்குகளில்

பாடப் பெற்று வருகின்றன.

 

மாயூரம் வேத நாயகம் பிள்ளை (1826 – 1889) பாடிய

சர்வ சமய சமரசக் கீர்த்தனை என்கிற இசைப்பாடல்கள்

இன்றைய இசை அரங்குகளில் பாடப்பெற்று வருகின்றன.

 

192 இசை உருப்படிகள் உள.

 

கிளிக்கண்ணி என்கிற இசை வகை உருப்படிகளைப் பாடிய கிளிக்கண்ணி சுப்பராய சுவாமிகள் (1820 – 1890) காவல்துறையில் தலைமைக் காவலராக இருந்தவர்.

 

இவர் பாடிய 102 கிளிக்கண்ணிப் பாடல்கள் உள.

இவரைப் பின்பற்றி பாரதியார் கிளிக் கண்ணிப் பாடல்களைப் பாடியுள்ளார் பலரும் பாடி வருகின்றனர்.

 

மாம்பழச் சிங்க நாவலர் (1836 – 1884) பழனியில் பிறந்தவர் மூன்றாவது வயதில் ஏற்பட்ட அம்மை நோயால் கண்பார்வையை இழந்தார்.

 

இவர் பாடிய பாடல்கள் கீதாமிர்தசாரம் என்கிற பெயரில் வெளிவந்துள்ளது. இந்நூலில் 56 கீர்த்தனைகள் உள.

 

காவடிச்சிந்து அண்ணாமலை ரெட்டியார் (1865 – 1891) பாடிய காவடிச்சிந்துப் பாடல்கள் கிளிக் கண்ணியைப் போல்

இசைத்தமிழ் உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி உளது.

 

இப்பாடல்களில் அமைந்துள்ள இசையமைதி அப்துல்காதர்

என்கிற இசுலாமியரையும் பாரதியாரையும் ஈர்த்தது.

 

இவர்களைப் போல் பலரும் காவடிச் சிந்துப் பாடல்களைப் பாடியுள்ளனர்.

 

குணங்குடி மஸ்தான் சாகிபு (1825 – 1875) பாடிய பாடல்கள் இசைத்தமிழுக்கு வளம் சேர்த்துள்ளன.

 

இவைகளைத் தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள்

கண்டு கொள்வதில்லை என்பதும் மிகவும் வருந்துதற்குரிய ஒன்றாகும்.

 

இசைத்தமிழ் வளர்ச்சிக்கு தொண்டாற்றியோர்:

 1. திருவாரூர் இராமசாமி பிள்ளை
 2. பெரிய திருக்குன்றம் சுப்பராமையர்
 3. இராமகவி
 4. ஆனை ஐயா
 5. பட்டாபிராமய்யர்
 6. கனம் கிருஷ்ண ஐயர்
 7. பராங்குசதாசர்
 8. நீலகண்ட சிவம்
 9. பட்டணம் சுப்ரமணிய ஐயர்
 10. செவற்குளம் கந்தசாமிப் புலவர்
 11. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
 12. சுந்தர முதலியார்
 13. ஆறுமுக உபாத்தியாயர்
 14. முருகேச கவிராயர்
 15. சுப்பிரமணிய பண்டிதர்
 16. செய்யூர் செங்கல்வராய சாஸ்திரி
 17. அகத்தியலிங்க கவிராயர்
 18. இராசப்ப முதலியார்
 19. சின்னசாமி நாயுடு
 20. சரவணபவ தாசர்
 21. வ. த. சுப்ரமணிய பிள்ளை
 22. நமச்சிவாய நாவலர்
 23. குப்புசாமி கிராமணி
 24. காஞ்சி சபாபதி முதலியார்
 25. கிருஷ்ணசாமி ஐயா
 26. வேலாயுதக் கவிராயர்
 27. கோவிந்தராச தேசிகர்
 28. சண்முக முதலியார்
 29. சாமிநாத தாசர்
 30. பாலசுப்ரமணிய முதலியார்
 31. காமியப்பக் கவிராயர்
 32. முத்துசாமிக் கவிராயர்
 33. வடலூர் வள்ளலார் இராமலிங்கர் (கீர்த்தனைகள்)
 34. சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் (காவடிச் சிந்து)
 35. குணங்குடி மஸ்தான் சாகிபு
 36. கோட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்
 37. கவி குஞ்சரபாரதி
 38. முத்துத் தாண்டவர்
 39. பாபநாசம் சிவன்
 40. மாயூரம் வேதநாயகம் பிள்ளை
 41. பாரதியார்
 42. தேசிக விநாயகம் பிள்ளைபல கீர்த்தனைகளை இயற்றினார்.
 43. பாரதிதாசன்
 44. சுத்தானந்த பாரதியார்
 45. பெரியசாமித்தூரன்தமிழிசைப் பாடல்களை மிகுதியாக இயற்றினர்.

 

 

 

***********************************************

சிறீ சிறீஸ்கந்தராஜா

08/08/2017

 

 

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *