-சி. ஜெயபாரதன்

cleo1

அங்கம் -2 பாகம் -15

“எவனொருவன் உன்னதக் களிப்பினை கவிதையின் உணர்வுகளிலிருந்து  கவர்ச்சி செய்கின்றானோ,  அவனே உண்மையான கவிஞனாகக் கருதப் படுகிறான், ஒருவரிக் கவிதை எழாதா விட்டாலும் கூட!”

ஜியார்ஜ் ஸான்ட் பிரெஞ்ச் பெண் எழுத்தாளி [George Sand (1804-1876)]

ஒவ்வொரு பளிங்குப் பாறைத் துண்டிலும் எனக்கு நேர் எதிராகத் தோன்றும் வடிவம் ஒன்று உருவாகி முழுமையுடன் நடமாடுவதைக் காண்கிறேன். வெளிச்சுவரை உடைத்துச் சிறையினில் அடைபட்டிருக்கும் அந்த வடிவத்தை வெளியேற்ற, என் மனக்கண் கண்டு துடிப்பது போல் மற்றவரும் காணும்படிச் செய்வதே எனது படைப்புப் பணியாகும்.

மைக்கேலாஞ்சலோ [1474-1564]

இயற்கை படைத்துள்ளதைப் போன்று எளிமையாக, நளினமாக, நேரிடையாக எதிலும் ஒன்று குறையாமலும், ஒன்று கூடாமலும், கூரிய அறிவுள்ள மனிதன் ஒருபோதும் ஆக்க முடியாது!

லியானார்டோ டவின்ஸி [1452-1519]

எடுத்து வா எனது மஸ்லீன் அங்கியை!
சூட்டி விடு எனது கிரீடத்தை!
தெய்வீக வேட்கை எழுகிறது என்னுள்!
என் உதடுகளை நனைக்கா தினிமேல்,
எகிப்தின் இனிய திராட்சைப் பழரசம்!
அதோ! அதோ! அருமை ஐராஸ், சீக்கிரம்! …
விடை பெறுகிறேன், நீண்ட விடுமுறைக்கு! …

(கிளியோபாத்ரா)

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஆண்டனி & கிளியோபாத்ரா]

நேரம், இடம்:

அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. ·பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்:

ஜூலியஸ் சீஸர், மெய்க்காப்பாளி, கிளியோபாத்ரா, சேடியர். ரோமனியக் காவலர். அரசியாக அலங்கரிக்கப் பட்டு, ராஜ கிரீடத்தை அணிந்து கம்பீரமாக ஆசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அருகில் உள்ள ஆசனத்தில் சீஸர் ராணுவத் தளபதி உடுப்பணிந்து அவளுடன் பேசிக் கொண்டிருக்கிறார்.

cleo2

காட்சி அமைப்பு:  

[கிளியோபாத்ரா, டாலமியை அகற்றி விட்டுத் தன்னை எகிப்துக்கு ராணியாக்க சீஸரை வேண்டுகிறாள். சீஸர் கிளியோபத்ராவின் அறிவையும், திறமையையும் மெச்சி அவளை ராணியாக்க ஒப்புக் கொள்கிறார். சீஸரின் பகைவனும், மருமகனுமாகிய ரோமாபுரித் தளபதி பாம்ப்பியை டாலமியின் படையினர் இரகசியமாகக் கொன்றதை அறிந்து சீஸர் வேதனைப் பட்டுக் கோபம் அடைகிறார். டாலமியும் அவரது ஆலோசகரும் அதற்குத் தண்டனை அடைகிறார். மனம் மகிழ்ந்து, கிளியோபாத்ரா தன் உடற் கவர்ச்சியால் வசீகரிக்கையில் சீஸர் காக்காவலிப்பு நோயால் தாக்கப்பட்டு, துடிப்புடன் தரையில் விழுகிறார். மருத்துவர் பணிக்குப் பிறகு சீஸர் படுக்கையில் புத்துயிர் பெற்று எழுந்து அமர்கிறார். சீஸர் ரோமுக்கு மீள்வதை நிறுத்தி கிளியோபாத்ரா அவரைத் தன் கவர்ச்சியால் மயக்கி ஆண்மகவு பெற்றுத் தருவாய் உறுதி அளித்து மகிழ்ச்சி ஊட்டுகிறாள். வெளியே டாலமியின் படைவீரர் ரோமானியரைத் தாக்கி, அவரது கப்பல்களுக்குத் தீவைக்கிறார்! முடிவில் அலெக்ஸாண்டரியா நூலகம் எரிந்து, கிளியோபாத்ராவின் கோபத்தைத் தூண்டி விடுகிறது. டாலமியும், அவனது போர் அதிகாரிகளும் கொல்லப் பட்ட பிறகு சீஸரின் பாதுகாப்புடன், கிளியோபாத்ரா எகிப்தின் ஏக போக அரசியாய் முடிசூட்டிக் கொள்கிறாள்.]

ஜூலியஸ் சீஸர்: [கிளியோபாத்ராவின் வலது கையைப் பற்றி முத்தமிட்டு] கண்மணி கிளியோபாத்ரா! உனது முடிசூட்டு விழா சிறப்பாக முடிந்தது. நீ எகிப்தின் ஏகாந்த, இணையற்ற அரசி! உனக்குப் போட்டியான உன் தனையன் டாலமி நைல் நதியில் மூழ்கிப் போனான்! எதிரிகள் உனக்கில்லை இப்போது! உன்னை அரசியாக்க வேண்டும் என்ற எனது பொறுப்பு முடிந்தது. ரோம சாம்ராஜியத்துக்கு எகிப்து நாடு அடிமை நாடாயினும், ஆண் வாரிசை எனக்கு அளிக்கப் போகும் நீ ஓர் அடிமை அரசி யில்லை! ஜூலியஸ் சீஸரின் மனைவி மதிப்பைப் பெற்றவள் நீ! ஆம் எனது இரண்டாம் மனைவி நீ! கூடிய சீக்கிரம் ரோமுக்குப் போகும் நான் உன்னையும் கூட்டிச் செல்வேன்! எனக்குக் கிடைக்கும் மதிப்பும், சமூக உயர்வு நிலையும் உனக்கும் கிடைக்கும்.

கிளியோபாத்ரா: [முக மலர்ச்சியுடன்] மாண்புமிகு சீஸர் அவர்களே! கிளியோபாத்ராவின் கனவை நிறைவேற்றினீர்! எகிப்தின் வரலாற்றை மாற்றினீர்! உங்களுக்கு நான் என்றென்றும் கடமைப் பட்டவள்! உங்கள் எல்லையற்ற அன்புக்கும், ஆதரவுக்கும் கட்டுப் பட்டவள்! ·பாரோ மன்னர்களின் ராஜ பரம்பரைத் தகுதி எனக்குக் கிடைக்க வாய்ப்பளித்து, வல்லமை அளித்து, பக்கத்தில் பாதுகாப்பு அரணாக நிற்பவர். ஒப்பற்ற சீஸரை, எனக்கு உயிரளித்த சீஸரை, ஆட்சி உரிமை தந்த சீஸரை, என்னை ராணியாய் உயர்த்திய சீஸரை என்னுயிர் நீங்கும் வரை மறக்க மாட்டேன்! உங்களை என் உடமை ஆக்கி, என் உறவாளி ஆக்கி, என் ஆண்மகவுக்குத் தந்தை என்னும் வெகுமதி அளிக்கிறேன் என் கைமாறாக!

ஜூலியஸ் சீஸர்: [கிளியோபாத்ரா தோள்களைப் பற்றிக் கொண்டு கனிவுடன்] கிளியோபாத்ரா! உன்னைப் போன்ற அறிவும், வீரமும் கொண்ட பெண்ணை நான் எங்கும் கண்டதில்லை! உன்னைப் போன்ற எழில் மிக்க மங்கையை நான் எங்கும் சந்தித்த தில்லை! நெஞ்சு உறுதியும், எடுப்பான நடையும், மிடுக்கான சொல்லும், நாக்கில் நளினமும் பெற்ற நங்கையை என் கண்கள் எங்கும் கண்ட தில்லை! [கிளியோபாத்ரா சீஸரைப் பாசமுடன் அணைத்துக் கொள்கிறாள்]

கிளியோபாத்ரா: [சீஸரை ஊன்றி நோக்கி] உங்கள் மார்பு பரந்தது; அதை விட உங்கள் மனம் விரிந்தது! அந்த எ·கு மனத்தை நான் பற்ற முடிந்தது எனக்குப் பூரிப்பளிக்கிறது. உங்கள் தோள் உயர்ந்தது; அதை விட உங்கள் உள்ளம் உன்னத மானது! அந்த உள்ளத்தில் நான் குடியேறியது எனக்குக் குளிர்ச்சி அளிக்கிறது! .. ஆனால் உங்கள் ரோமானிப் போர்த் தளபதிகள் பொல்லாதவர்! எனது முடிசூட்டு விழாவின் போது விஜயம் செய்த எல்லா மன்னர்களும் மண்டி யிட்டபோது, அவர்கள் மட்டும் நின்று விழித்துக் கொண்டு என்னை அவமானப் படுத்தினர்! என்ன அகங்காரம் அவருக்கு? நீங்கள் கூட மண்டியிட்டு எனக்கு மதிப்பளித்தீர்; அது எனக்கு மனம் மகிழ்ச்சி தந்தது! ஆனால், உங்கள் கொடிய தளபதிகள் …!

cleo3

ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] நான் கடைசியில் அவர்களுக்குக் கையசைத்து மண்டியிட வைத்தேன்! ரோமாபுரியில் யாரும் எவருக்கும் மண்டியிட்டு மதிப்பளிப்ப தில்லை! அதுவும் ஒரு பெண்ணரசிக்கு ஆடவர் மண்டி யிடுவதில்லை! எங்கள் நாட்டுக்கு அரசரே கிடையாது! அதுவும் உன்னைப் போலொரு வாலிபப் பெண் அரசியாக முடியாது! அடுப்பூதும் எமது அணங்குகள் உன்னைப்போல் கையில் செங்கோல் ஏந்திக் கம்பீர நடை போடுபவ ரில்லை!

கிளியோபாத்ரா: [சீஸரைக் கூர்ந்து நோக்கி] ரோமாபுரி சாம்ராஜியத்தின் சர்வாதிகாரியான நீங்கள், ரோமின் சக்கரவர்த்தி அல்லவா? ரோமாபுரியின் வேந்தர் வேந்தன் என்று முடி சூடத்தானே, நீங்கள் சீக்கிரம் போவதாக உள்ளது!

ஜூலியஸ் சீஸர்: [சற்று வருத்தமுடன்] கிளியோபாத்ரா! ரோமாபுரிக்கு நான் அதிபதியாகச் சென்றாலும், என்னை வேந்தன் என்று ரோமானியர் ஏற்றுக் கொள்ள மாட்டார். ரோமாபுரியின் சக்கரவர்த்தி போல் ரோமானியர் எனக்கு மதிப்பளித்தாலும், என்னை அரசன் என்று ஒப்புக் கொள்ள மாட்டார்.

கிளியோபாத்ரா: [சற்று கவனமாக] அரசராகக் கருதப் படாமல், உங்களுக்கு என்ன விதமான ஆதிக்கமும், அதிகாரமும் உள்ளது? நீங்கள் அரசனில்லை என்றால், நாட்டை ஆட்சி புரிவது யார்? நாட்டுப் பிரச்சனைகளைத் தீர்ப்பது யார்? நாட்டைப் பகைவரிடமிருந்து பாதுகாப்பது யார்?

ஜூலியஸ் சீஸர்: கிளியோபாத்ரா! எகிப்த் ரோமின் அடிமை நாடுகளில் ஒன்று! ஆனால் எகிப்தில் உனக்கிருக்கும் அதிகாரம், உன்னை விட ஆற்றல் மிக்க எனக்கு ரோமில் கிடைக்காது! ரோமாதிபதிக்கு ஆலோசனை கூறி ரோமா புரியை முழுநேரமும் கண்காணித்து வருவது, குடியாட்சி மக்களின் பிரதிநிதிகளான வட்டாரச் செனட்டர்கள்! செனட்டரின் தீர்மானமே குடியாட்சியின் தெய்வ வாக்கு! முடியாட்சியில் நம்பிக்கை யில்லாத ரோமாபுரியில் நானோர் மன்னனாக ஆட்சி செய்ய முடியாது!

கிளியோபாத்ரா: அப்படி யானால் நீங்கள் வெறும் பொம்மை ராஜாவா? குடியாட்சி என்றால் என்ன? எனக்குப் புதிராக உள்ளது! புரிய வில்லை, குடியாட்சி என்றால்! செனட்டர் குடித்து விட்டு நடத்தும் ஆட்சியா? குடித்து விட்டுக் கொட்ட மடிக்கும் ஆட்சி எப்படிக் கோமாளித்தனமாக இருக்கும்? குடிக்காமல் அறிவோடு நடத்தும் ஆட்சியே குழப்பத்தையும், கொந்தளிப்பையும் தூண்டும் போது, குடியாட்சி மட்டும் எப்படிக் கோணத்தனமாய் இருக்காது என்பதை என்னால் கற்பனை செய்ய முடிய வில்லை!

ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] குடிக்கும், குடியாட்சிக்கும் எந்தச் சம்பந்தமு மில்லை! முடியாட்சி என்பது உன்னைப் போன்ற ஒரு மன்னன் ஆட்சி புரிவது! அது ஒற்றை மனிதன் செய்வது! மன்னருக்கு ஓரிரு மந்திரிகள் ஆலோசனை கூற அருகிலிருப்பார். குடியாட்சியில் தலைவன் என்னைப் போலொரு போர்த் தளபதி! ஆனால் அவன் முடிசூடா மன்னன்! அவனுக்கு ஆலோசனை சொல்பவர் ஓரிருவர் மட்டும் அல்லர்! நூறு அல்லது அல்லது இருநூறு செனட்டர்கள். நாட்டு வட்டாரங்களின் அதிபதிகள் அவர். செனட்டர் மூலமாகக் குடியாட்சியில் நாட்டின் மூலை முடுக்கிலுள்ள மக்களின் பிரச்சனைகள் கவனிக்கப் படுகின்றன. முடியாட்சியைக் கண்காணிப்பது இரண்டு கண்கள் என்றால், குடியாட்சியைக் கவனிப்பது ஆயிரம் கண்கள். தளபதி பொம்மை அரசன் அல்லன்! பிரச்சனையின் தீர்வை முடிவு செய்பவன் தளபதி. பிரச்சனையை எப்படி அணுகுவது என்று திசை காட்டுபவன் தளபதி. புரிகிறதா?

கிளியோபாத்ரா: [சற்று வெறுப்புடன்] என்ன இருந்தாலும் எனக்குள்ள ஆற்றலும், அதிகாரமும் உங்களுக் கில்லை. உலக சாம்ராஜியங்கள் எல்லாம் முடியாட்சியில்தான் உன்னதம் அடைந்தன! குடியாட்சி எதையும் சாதிக்குமா என்பது எனக்குத் தெரியவில்லை. அங்கே பல தலைகள் ஒரே சமயத்தில் எழுவதால் குழப்பம்தான் உண்டாகும்.

ஜூலியஸ் சீஸர்: அதை ஒப்புக் கொள்கிறேன். ரோமாபுரி ஆட்சி அரங்கில் இனவாரி ஆதிக்கம் தலைதூக்கி வருகிறது! என் பகைவன் பாம்ப்பியின் சகாக்கள் எண்ணிக்கையில் மிகுதி! அதாவது எனக்கு எதிரிகள் அதிகம். என் ஆணைகள் எதுவும் வாசலைத் தாண்டுமா என்பது ஐயம்தான்! என் கொள்கைகள் எதுவும் ஏற்றுக் கொள்ளப்படுமா என்பது ஐயம்தான்! நீண்ட காலம் ஆட்சிப் பீடத்தில் நான் அதிகாரம் செலுத்துவேனா என்பதும் ஐயம்தான்! ரோமாபுரியில் என் ஆணைக்கு மதிப்பில்லை! என் அதிகார மெல்லாம் நான் கைப்பற்றிய அன்னிய நாடுகளில்தான்!

கிளியோபாத்ரா: [வருத்தமுடன்] அப்படி யானால் உள்ளூரில் பொம்மை ராஜா! வெளி ஊரில் உண்மை ராஜா!

ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] அப்படியே வைத்துக்கொள். நான் ரோமுக்குச் சீக்கிரம் புறப்பட வேண்டும்! போனால்தான் என்னிலையே எனக்குத் தெரியும்!

கிளியோபாத்ரா: [கவலையுடன்] நான் உங்களைப் பிரிந்து எப்படி அரசாளுவேன்? என் மகன் பிறக்கும் போது, நீங்கள் என்னருகில் இருக்க வேண்டும்! ரோமுக்குப் போன பின்பு, எப்போது எகிப்துக்குத் திரும்புவீர்? நீங்களின்றித் தனிமையில் நான் வாழ முடியாது.

ஜூலியஸ் சீஸர்: ரோம் எனக்கு ஒருபோக்குப் பாதை! நானினி எகிப்துக்கு மீள மாட்டேன்! பாலை வனத்தின் தீக்கனலில் வெந்து நான் பல்லாண்டுக் காலம் பிழைத்திருக்க முடியாது! நீ எகிப்தை விட்டு ரோமுக்கு வந்துவிடு! நிரந்தரமாக வந்துவிடு! என்னோடு நீண்ட காலம் வாழலாம்!

cleo5

கிளியோபாத்ரா: [ஆங்காரமாக] அதெப்படி முடியும்? நான் எகிப்திய ராணி! நான் ரோமாபுரி ராணி யில்லை! ரோமாபுரிக்கு ஒருமுறை நான் விஜயம் செய்யலாம், என் மகவோடு! அத்துடன் சரி! நிரந்தரமாக அங்கே நான் எப்படித் தங்க முடியும்? ரோமில் தங்கிக் கொண்டு கிளியோபாத்ரா ஒருபோதும் எகிப்தை ஆள முடியாது! ஆனால் அதே சமயம் நான் உங்களைப் பிரிந்து ஒருபோதும் தனியாக வாழ முடியாது!

ஜூலியஸ் சீஸர்: [வெறுப்புடன்] கிளியோபாத்ரா! அது உன் பிரச்சனை! அதை என்னால் தீர்க்க முடியாது! நான் ரோமன்! எகிப்திலே உன் விருந்தினனாக என் வாழ்நாள் முழுதும் தங்க முடியுமா? சொல் கிளியோபாத்ரா! உன்னை எகிப்துக்கு ராணி ஆக்கியதும் என் கடமை முடிந்து விட்டது! நான் போக வேண்டும். நாமிருவரும் ஒரே நாட்டில் நீண்ட காலம் சேர்ந்து வாழ முடியாது! நீயும் நானும் நிரந்தரமாகப் பிரிந்துதான் வசிக்கப் போகிறோம்! நீயும், நானும் தனித்தனி உலகில் தனியாகத்தான் வாழ வேண்டும்!

கிளியோபாத்ரா: [ஏக்கமுடன்] அப்படியானால் பிறக்கப் போகும் ஆண்மகவின் கதி? அவன் உங்கள் புத்திரன்! அவன் உங்கள் வாரிசு. அவன் வாழப் போகுமிடம் ரோமாபுரியா? அல்லது எகிப்து நாடா?

ஜூலியஸ் சீஸர்: [வெறுப்புடன்] எனக்குத் தெரியாது கிளியோபாத்ரா! உன்னிடம் அவன் வாழ்வதுதான் சரியாகத் தெரிகிறது எனக்கு! ரோமாபுரியில் எனக்கு எதிரிகள் மிகுதி! அவரிடம் என் மகன் சிக்கிக் கொண்டால், அவனைக் கொன்று விடவும் அவர் தயங்க மாட்டார்! அவன் ரோமுக்கு வாரிசாக வந்து விடுவான் என்று வாளெடுத்துச் சிறுவன் தலையைச் சீவி விடுவார்! பாதுகாப்பாக என் மகன் உன்னிடம் இருப்பதே மேலானது!

[தொடரும்]

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *