THODAR - 76

தமிழிசைப்பண்கள்
**************************************************
உலகின் முதல் இசை
தமிழிசையே!!
***********************************************
இசைத்தமிழின் தொன்மை – 76
***********************************************
 
பழந்தமிழிசையில் பண்கள்
**********************************

கர்நாடக இசையும் தமிழிசையும்
**************************************************

சாரங்கதேவர்-2

கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் சாரங்கதேவர் என்பவர் கஸ்மீர நாட்டிலிருந்து தென்னாடு வந்தார்.

தமிழிசையை ஆராய்ந்தார். ‘சங்கீதரத்னாகரம்’ என்ற நூலை எழுதினார்.

வடமொழிப் பெயர்கள் இராகங்களுக்கு இடப்பட்டு, முதல்முதல் வெளிவந்த கர்நாடக இசைநூல், கர்நாடக இசைக்கு முதல்நூல் அதுதான் என்று அறியப்படுகின்றது.

தேவாரங்களின் பண்களைப் பற்றியும் அந்நூலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தச் சாரங்கதேவர் தமிழில் இருந்த ஒலிக்குறியீடுகளுக்கு வடமொழிப் பெயர்களைப் புகுத்தியதோடல்லாமல், அவை வடமொழியிலிருந்தே தமிழுக்கு வந்தன என்ற தவறான கருத்தையும் பொய்யாக விதைத்தார்.

அக்காலத்தில் அரசியல் மாற்றங்களால் வடமொழியின் செல்வாக்கு தென்னாடெங்கும் வளரத் தொடங்கியது அதனால் இசை நூல்களில் வடமொழிப்பெயர்கள் இடம்பெறத் தொடங்கின.

வடமொழிப் பெயர்களோடு தமிழிசை கர்நாடக இசையாகத் தமிழ் நாட்டிலும் வழங்கத் தொடங்கியது.

அராகம் என்ற தமிழ்ச் சொல் – இராகமாயிற்று.
செம்பாலையை – அரிகாம்போதி என்றார்கள்.
படுமலைப்பாலையை – நடனபைரவி என்றார்கள்.
கோடிப்பாலையைக் – கரகரப்பிரியா என்றார்கள்.
விளரிப்பாலைக்குத் – தோடி என்றார்கள்.
செவ்வழிப்பாலை – இருமத்திமத் தோடியானது.
முல்லைத் தீம்பாணி – மோகனம் ஆனது.
செந்துருத்திக்கு – மத்தியமாவதி என்று பெயரிட்டார்கள்.
இந்தளம் – மாயாமாளவ கௌளை என்று மாற்றினார்கள்.
கொன்றையந் தீங்குழலை – சுத்தசாவேரி ஆக்கினார்கள்.
ஆம்பலந் தீங்குழலை – சுத்த தன்யாசி ஆக்கினார்கள்.
அரும்பாலைக்குச் – சங்கராபரணம் என்றார்கள்.
மேற்செம் பாலையைக் – கல்யாணி என்றார்கள்.
செவ்வழியை – யதுகுலகாம்போதி என்று மாற்றினார்கள்.
புறநீர்மைக்குப் – பூபாளம் என்றார்கள்.
தக்கேசிக்குக் – காம்போதி என்றார்கள்.

இவ்வாறு தமிழ் இசையின் பெயர்களையெல்லாம் மாற்றியமைத்துவிட்டு, அதிலிருந்தே இது வந்ததென்று ஆராய்ச்சிக் குறிப்பும் எழுதி வைத்திருக்கிறார்கள்.

திகட்டாத அந்தத் தீஞ்சுவைப் பாடல்களைக் கேட்டின்புற்று, அப்பரும், சுந்தரரும், ஆளுடைய பிள்ளையும் எப்படிப் பாடியிருக்கிறார்கள் என்பதைப் பார்த்து அப்படியே பின்பற்றி, கன்னட நாட்டுப் புரந்தர தாசரும், தெலுங்கு தேசத்து அன்னமாச்சாரியாரும் கீர்த்தனைகளை அமைத்தார்கள்.

அந்தக் கீர்த்தனைகளை தலையிலே தூக்கி வைத்துக்கொண்டு எமது தமிழ் வித்துவான்கள் என்று சொல்லப்படுவோர் ஆடுகின்றபோது வேடிக்கையாக இருக்கின்றது.

பதினாறாம் நூற்றாண்டு முதல் தெலுங்குமொழி பேசும் விஜயநகரத்து வேந்தர்கள் தமிழ் நாட்டைக் கைப்பற்றி ஆட்சி செய்தார்கள்.

தெலுங்குமொழிக்கும் தமிழர்கள் அடிமையாக வேண்டிய நிலை ஏற்பட்டது.

தியாகையரின் காலத்தில் அருணாசலக்கவிராயரின் தமிழிசைப் பாடல்கள் புகழ்பெற்று விளங்கின.

அந்தப் பாடல்களை நன்கு அறிந்திருந்த தியாகையர் அவற்றின் அடிப்படையிலே கீர்த்தனைகளைத் தெலுங்கில் எழுதினார் என்பதுதான் அறிஞர் கருத்து.

தியாகையரும், சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர் என் போரும் தெலுங்கு மொழியிலே கீர்த்தனைகளை எழுதினார்கள். பாடகர்கள் அவற்றை மேடைகளில் பாடினார்கள்.

தமிழ்ப் பாடல்கள் புறக்கணிக்கப்பட்டன.

தமிழ் இசை கர்நாடக இசை என்றபெயரில் வடமொழிச் சுரங்களோடு வளர்ந்து கொண்டிருந்தது.

தமிழ்ப் பாடல்களே பாடப்படாமையால் அந்த இசை தமிழ் இசைக்கு அந்நியமானது என்று மக்கள் எண்ணத் தொடங்கினர்.

இசையறிஞர்களே மக்களிடம் அந்தக்கருத்தை விதைத்தனர். செந்தமிழ் இசைக்குக் குந்தகம் செய்தனர்.

இன்றுவரை அந்தநிலை தொடர்கிறது.

வேற்று மொழிகளிலே பாடுவதில் நமக்கு வெறுப்பு இல்லை. பாடக்கூடாது என்பது நமது கொள்கையுமில்லை.

தமிழ்மொழிப் பாடல்களைப் புறக்கணிப்பது தகுமா என்பதுதான் நமது கேள்வி.

தமிழில் பாடுவதைத் தமிழர்களே தவிர்க்கிறார்களே என்பதுதான் நமது கவலை.

தமிழ்நாட்டிலே உள்ள திருவையாறு என்னுமிடத்தில் ஓருமுறை தியாகராசர் விழா நடைபெற்றிருக்கிறது.

அந்த விழாவிலே தண்டபாணி தேசிகர் அவர்கள்
‘தாமரை பூத்த தடாகத்திலே’ என்ற தமிழ்ப் பாடலைப் பாடியிருக்கிறார்கள்.

உடனேயே விழாவுக்கு வந்திருந்த வித்துவான்களும், பாகவதர்களும் வெகுண்டு எழுந்திருக்கிறார்கள்.

தமிழ்ப் பாடல்களைப் பாடியதால் தியாகராசர் வளாகமே தீட்டுப்பட்டுவிட்டதென்று சீறிப்பாய்ந்திருக்கிறார்கள்.

தீட்டுக் கழிக்கப்பட்டாலன்றி இனிமேல் அந்த மேடையில் பாடமாட்டோம் என்று வெளிநடப்புச் செய்திருக்கிறார்கள்.

தண்டபாணிதேசிகர் தெலுங்கிலோ, கன்னடத்திலோ பாடியிருந்தால் இந்தக்கண்டனம் எழுந்திருக்காது.

இது நடந்தது எங்கே? தெலுங்கு தேசத்திலா?
கர்நாடக மாநிலத்திலா? இல்லை.

தமிழ் நாட்டில்! எவ்வளவு கொடுமை இது! அந்த அளவுக்கு அந்நியர்களுக்கு தமிழர்கள் அடிமையாகிக் கிடக்கிறார்கள்.

தாங்களும் அடிமையாகித் தமிழ் மொழியையும் அடிமையாக்குகிறார்கள்.

தமிழ் இசையின் பெருமை
**************************************

இசையை ஏழுவகையாக பகுத்தவர்கள் தமிழர்களே.
குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்
என்பனவே அந்த ஏழுவகைகளாகும்.

இத்தகைய ஏழு சுரங்களும் பண்டைத் தமிழகத்தில் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்ற ஏழுகுறியீடுகளாலேயே வழங்கப்பட்டிருந்தன.

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்றேழும்
ஏழிசைக் கெய்தும் அக்கரங்கள்’ என்று பிங்கல நிகண்டு நூலில் குறிப்பிடப்படுவதிலிருந்து அதை நாம் அறிய முடிகிறது.

காலத்தினால் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக இசைக் குறியீடுகள் சரிகமபதநி என்று மாற்றப்பட்டன.

சூழலை அடிப்படையாகக் கொண்டு இசையின் ஒலிக்குறிப்புக்கள் தமிழில் சரிகமபதநி என்னும் எழுத்துக்களால் குறிக்கப்பட்டன என்பதை,

சரிகம பதநி யென்றேலெழுத் தாற்றானம்
வரிபந்த கண்ணினாய் வைத்துத் – தெரிவரிய
ஏழிசையுந் தோன்று மிவற்றுள்ளே பண்பிறக்கும்
சூழ்முதலாஞ் சுத்தத் துளை

சிகண்டி முனிவரின் பாடலின் மூலம் அறிய முடிகிறது.

;குரல்;’ என்பது வண்டின் ஓசை அதுவே ‘ச’
‘துத்தம்’ என்பது கிளியின் கொஞ்சல் ஓசை அதுவே ‘ரி’
‘கைக்கிளை’ என்பது குதிரையின் கனைத்தல் ஓசை அதுவே ‘க’
‘உழை’ என்பது யானையின் பிளிறல் ஓசை அதுவே ‘ம’
‘இளி’ என்பது தவளையின் கத்தல் ஓசை அதுவே ‘ப’
‘விளரி’ என்பது பசுவின் கதறல் ஓசை அதுவே ‘த’
‘தாரம்’ என்பது ஆட்டின் கத்தல் ஓசை அதுவே ‘நி’
(சூடாமணி 10-37)

ஒவ்வொரு வகை இசையும் அவை உடலின் எந்ததெந்தப் பாகத்திலே பிறக்கின்றன என்பதையும் நுணுகி ஆராய்ந்து சொல்லிவைத்திருக்கிறார்கள்.

மிடற்றிலே பிறப்பது குரல்,
நாவிலே பிறப்பது துத்தம்,
அண்ணத்திலே கைக்கிளை,
சிரசிலே உழை,
நெற்றியிலே இளி,
நெஞ்சிலே விளறி,
மூக்கிலே தாரம்
என்றிப்படிப் பிறக்கும் இசையைத்தான்
ஏழுசுரங்களுக்குள் அடக்கிவைத்தார்கள்.

குரலடு மிடற்றில் துத்தம் நாவில்
கைக்கிளை அண்ணத்தில் சிரத்தில் உழையே
இளி நெற்றியினில் விளரி நெஞ்சினில்
தாரம் நாசியில் தம்பிறப்பென்ப’

என்று பிங்கல நிகண்டு என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.

ஏழுவகைத் தமிழ் இசையினை ஒவ்வோர் இசையின் தகுதிக்கேற்பவும் நான்காகப் பாகுபாடு செய்துள்ளார்கள் நமது பண்டைத் தமிழறிஞர்கள்.

இடம், செய்யுள், குணம், காலம் என்பனவே அந்த நான்கு தகுதிகளாகும்.

இடம் என்பது நிலத்தைக் குறிப்பது.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஜவகை நிலங்களுக்கும் உரிய பண்களாக முறையே குறிஞ்சிப்பண், சாதாரி, செவ்வழி, மருதம், பாலை என்னும் ஜந்து பண்களும் இடத்துக்குரிய பண்கள் (இராகங்கள்) என்று வகுக்கப்பட்டுள்ளன.

செய்யுள் என்பது பாடல்பற்றிய இசையைக்குறிக்கிறது.
எந்தெந்த வகைப் பாடலுக்கு எந்தெந்த இசை பொருத்தமானது என்பதை ஆராய்ந்து அதற்கேற்ற வகையில் அமைத்துள்ளார்கள்.

வெண்பாவிற்கு சங்கராபரணம், அகவப்பாவிற்கும், தாழிசைக்கும் தோடி, கலிப்பாவிற்கு பந்துவராளி, கலித்துறைக்குப் பைரவி, விருத்தப்பாவிற்கு கல்யாணி, காம்போதி, மத்தியமாவதி என்பன,

உலாப் பாடலுக்கு சௌட்டிரம், பிள்ளைத்தமிழுக்கு கேதாரகௌளம், பரணிக்குக் கண்டாரவம் என்று பல்வகைச் செய்யுள்களுக்கும் இசைவகுத்துள்ளனர்.

இவ்வாறே குணம் பற்றிய இசையும் வகுக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக துன்பம் அல்லது தக்கத்திற்கு ஆகரீ, நீலாம்பரி, பியாகடம், வராளி, புன்னாகவராளி என்னும் பண்கள் உரியவையாகின்றன.

இன்பம் அல்லது மகிழ்ச்சிக்கு உரிய பண்கள் காம்போதி, சாவேரி, தன்னியாசி என்பவையாகும்.

நாட்டை என்பது போருக்குரிய பண்ணாகும்.

அடுத்ததாகக் காலம் பற்றிய இசை என்பது பல்வேறு காலங்களுக்கும் வேளைகளுக்கும் உரியதான பண்களைவகுக்கின்றது.

வசந்தகாலத்திற்கு காம்போதி, தன்னியாசி மாலைநேரத்திற்கு கல்யாணி, காபி, காம்போதி, நள்ளிரவுக்கு ஆகரி, அதிகாலையில் இந்தோளம், இராமகலி, நாட்டை, பூபாளம், நண்பகலுக்கு சாரங்கயம், தேசாட்சரி என்று வகுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு முத்தமிழுக்கும் இனிமைசேர்க்கும் இசைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்து, முறைப்படி பகுத்து, சிறப்புறத் தொகுத்து நம்முன்னோர் நமக்கு விட்டுச் சென்றிருக் கிறார்கள்.

பண்டைத் தமிழகத்தில் அவ்வாறு வகுத்தபொழுது தமிழ் இசைப் பெயர்களே ஒவ்வொரு பண்ணுக்கும் கொடுக்கப்பட்டிருந்தது.

தமிழிசையைத் தத்தெடுத்த வடவர்களால்
தமிழ்ப் பெயர்கள் மாற்றப்பட்டன.

மாற்றப்பட்ட பெயர்களையே தென்னிந்திய மொழிகளெல்லாம் வழக்கப்படுத்திக்கொண்டன.

அரசியல் செல்வாக்கினாலும், வடமொழி மோகங்கொண்ட தமிழர்களாலும் அந்தப் பெயர்களே தமிழ்மொழியிலும் இடம்பிடித்தன.

தமிழ் இசைப் பெயர்கள் வழக்கொழிந்தன.
அவற்றை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

தமிழ்மொழியிலேயிருந்து தத்து எடுத்துக்கொண்ட இசை நுணுக்கங்களை வைத்துக்கொண்டு வேற்று மொழியினர் இன்று வித்தை காட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.

அறிந்தவர்களும் அறியாதவர்களுமாக சில தமிழ் இசை வல்லுனர்களும், கலைஞர்களும் அவையெல்லாம் வடமொழியிலிருந்தும், தெலுங்கிலிருந்தும்
இறக்குமதியானவை என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆலாபனை செய்துகொண்டிருக்கிறார்கள்.
தமிழிசையில் தமிழ்ப்பாடல்களைப் பாடத் தயங்குகின்றார்கள்.
இந்த நிலை மாறவேண்டும்.

தமிழ் இசையின் மகத்துவத்தைத் தரணியெங்கும் பரப்பிடத் தமிழர்களாகிய நாம் முயற்சிசெய்யவேண்டும்.

***********************************************
சிறீ சிறீஸ்கந்தராஜா
22/08/2017

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *