Featuredஇலக்கியம்கட்டுரைகள்பத்திகள்

நலம் .. நலமறிய ஆவல் (70)

நிர்மலா ராகவன்

குறையும் நிறைவும்

நலம்-4-1-1

ஒரு பெண் கருவுற்றிருக்கும்போது அவளும் அவளது துணைவனும் பல இன்பக்கனவுகளைக் காண்பது சகஜம். பிறக்கப்போகும் குழந்தை யாரைப்போல இருக்கும்? தாயைப்போல துணியில் பூவேலை செய்வதிலும், தோட்ட வேலையிலும் நாட்டமிருக்குமா, இல்லை, தந்தையைப்போல விளையாட்டு வீரனாக வளருமா என்று ஏதேதோ எண்ணி மகிழ்வார்கள்.

பிறக்கும் குழந்தைக்கு உடலிலோ, மூளையிலோ ஏதோ குறைபாடு இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். அப்போது, அக்கனவுகள் நனவாகவே முடியாது என்ற கசப்பான உண்மையுடன் வேறு பல உணர்ச்சிகளும் எழும்.

நமக்கு எந்த நோய் வந்தாலும், `இதெல்லாம் எனக்கு வராது!’ என்று எதிர்மறையாகத்தானே சிந்தனை எழும்? அதேபோல்தான், முதலில் `டாக்டர் ஏதோ உளறிவிட்டார். என் குழந்தையாவது, குறையோடு பிறப்பதாவது!’ என்று ஆத்திரம் வரும். `அவரது சிகிச்சையில்தான் ஏதோ கோளாறு!’ என்று தமது குற்ற உணர்ச்சியை மறைக்க பழியை யார்மேலாவது போடத் தோன்றும் பெற்றோருக்கு.
ஓராண்டுக்குப்பின், குழந்தை உண்மையிலேயே குறைபாட்டுடன்தான் பிறந்திருக்கிறது, இனி அதை மாற்ற ஒன்றுமே செய்ய முடியாது என்ற நிலையில் தள்ளப்பட்டவுடன், ஆழ்ந்த வருத்தம் எழும். `எவ்வளவு பெரிய பொறுப்பு, ஆயுள் முழுவதும்!’ என்ற அயர்ச்சியுடன், குடும்பச் செலவுவேறு அதிகரிக்கும்.

இப்படிப்பட்ட பெற்றோர்கள் எல்லாருமே ஒரேமாதிரி நடப்பதில்லை.

கதை

என் சக ஆசிரியை ரஃபிடா எப்போதும் தன் ஒரே மகளைப்பற்றி எல்லாரிடமும் பெருமையாகப் பேசுவாள். `என் மகள் வயதுக்கு மீறிய அறிவுக்கூர்மை படைத்தவள்!’ என்று நிலைநாட்டுவது போலிருக்கும் அவளது பேச்சு.

ஒரு முறை, பேரங்காடி ஒன்றில் ரஃபிடாவைப் பார்த்தேன். அவளும் என்னைப் பார்த்தாள். என்னை அறியாதவள்போல், வேகமாக வேறு திசையில் விரைந்தாள். அப்போதுதான் அவளுடைய மகளைக் கவனித்தேன்.

எட்டு வயதிருக்கும் அப்பெண்ணுக்கு. MONGOLOID என்ற குறைபாடு அப்பட்டமாகத் தெரிந்தது அவளது பரந்த முகத்தில். தலை பெரிதாக, அந்த குறைபாட்டுக்கே உரிய, மங்கோலியர்களைப்போன்ற மேல்நோக்கிய கண்களுடன் காணப்பட்டாள். தலைமுடியில் அடர்த்தி கம்மி.

`இந்தப் பெண்ணைப்பற்றியா அவ்வளவு கதைகள் சொன்னாள்!’ என்ற ஆச்சரியம் எழுந்தது எனக்குள்.

(எங்கள் பள்ளியில் மன் யீ என்று அப்படி ஒரு மாணவி இருந்தாள். படிக்கவோ, எழுதவோ தெரியாது. தன் வயதொத்தவருடன் பழகிவிட்டுப்போகட்டுமே என்று அனுப்பியிருந்தார்கள். கரும்பலகையை அழிப்பது, அழிப்பானைச் சுத்தப்படுத்துவது – இவை மட்டும்தான் அவளால் செய்யமுடியும். எப்போதும் வகுப்புக்கு வெளியே chalk duster-ஐ தட்டிச் சுத்தப்படுத்திக் கொண்டிருப்பாள். பதினைந்து வயதாகியும் உடலைப்பற்றிய பிரக்ஞை அற்றவளாக, குட்டைப்பாவாடை மேலே ஏற, உள்ளாடை தெரிய உட்கார்ந்திருப்பாள். எனக்கு `குட்மார்னிங்’ சொல்வதற்காக, பள்ளியின் வெளிக்கதவினருகே தினமும் காத்திருப்பாள். குரல் குழறி இருக்கும்).

மறுநாள், நான் வேறு சில தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்தபோது, `ரஃபிடா என்னைத் தெரியாதவள்போல் வேகமாகப் போய்விட்டாள்!’ என்று நான் ஆச்சரியப்பட்டேன். இன்னும் சிலருக்கும் அதே அனுபவம் நிகழ்ந்தது என்று தெரியவந்தது.

தன் மகள் குறையோடு பிறந்தவள் என்று தெரிந்தால் தன்னைப் பிறர் மதிக்கமாட்டார்கள் என்று நினைத்து அப்படி நடந்திருக்கிறாள்! அப்பெண்ணால் தனக்கு அவமானம் என்ற எண்ணம் கொண்டதால் அவளுடைய தன்னம்பிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது. அதற்கெல்லாம் ஈடு செய்வதுபோல் பேசிவருகிறாள், பாவம். தான் ஒரு மகளைப் பெற்றால் எப்படியெல்லாம் இருப்பாள் என்று கற்பனை செய்ததுபோல் இருப்பதாகப் பிறரிடம் சொல்லி, தன்னையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறாள்! உண்மை பிறருக்குத் தெரியவரும்போது, காரணமின்றி அவர்களுடன் சண்டை போடுவது அவள் வழக்கமாக இருந்தது.

ஆனால், மன் யீயிடம் அவள் மிகுந்த பரிவு காட்டியது இப்போது ஆச்சரியம் அளிக்கவில்லை. ஒரு நாள் ரஃபிடா பள்ளிக்கு வராவிட்டால், அந்தப் பெண் துடித்துப்போய்விடுவாள்.

கதை

யாராவது தங்கள் குழந்தைகளைப்பற்றிப் பேசினால், மிஸஸ் ஹோ அவர்களை வெறுப்புடன் பார்ப்பது எனக்கு அதிசயமாக இருந்தது. மற்றபடி, அவள் பரம சாது. மிக பொறுப்பானவள். (ஆனால், அதைப்பற்றி மற்ற ஆசிரியைகளைப்போல் பெருமை பேசிக்கொண்டிருக்க மாட்டாள்).

எங்கள் இருவருக்குமே ஆங்கில நாவல்கள் படிக்கப் பிடிக்கும் என்பதால் சற்று நெருங்கிப்போனோம். ஒரு முறை, தானே கூறினாள், “என் மகனுக்கு ஆடிசம்,” என்று.
“அப்படியென்றால் என்ன? படிக்க முடியாதா?” என்று கேட்டேன்.

குற்றத்துக்கான தண்டனையா?

நமக்கு ஏதாவது கெடுதல் நடந்தால், உடனே எப்போது என்ன தவறிழைத்ததற்கு இந்த தண்டனை என்று யோசிக்க ஆரம்பிக்கிறோம்.

திருமணம் ஆகுமுன்னரே உடலுறவு கொண்ட தம்பதிகள் அவர்கள். அடுத்த ஏழாவது மாதத்திலேயே குழந்தை பிறந்தது, ஏதோ குறையுடன். `நாங்கள் பாவம் செய்துவிட்டோம்!’ என்று கதறினார்கள் இருவரும்.

குடும்பத்தில் விரிசல்

சில தம்பதியர், `உன் குடும்பத்தில் யாருக்கோ இந்த நிலை இருந்திருக்கிறது. ஏமாற்றிக் கல்யாணம் செய்து வைத்துவிட்டார்கள்!’ என்று ஒருவரை ஒருவர் சாடிக்கொள்வார்கள்.

ஊனமாக இருக்கும் குழந்தையைப் பார்த்துக்கொள்வது அனேகமாக பெற்றவளின் பொறுப்பாகிவிடுகிறது. அது தவிர்க்க முடியாதது என்று புரிந்தாலும், தந்தைக்கு மனைவி தனக்காக முன்போல் அதிக நேரத்தைச்செலவிடுவதில்லை என்ற குறை ஏற்பட்டுவிடும்.

குறையுள்ளவர்களை எப்படி நடத்துவது?

`உன்னால் எதுவும் செய்ய முடியாது!’ என்று தனது மனக்கலக்கத்தை தான் பெற்ற பிள்ளையிடமே திருப்புவது தகாது.
எந்தக் குழந்தையாலும் ஏதாவது செய்ய முடியும். தகுதி பாராட்டப்பட்டால், அவனுக்குத் தன்மேல் இரக்கம் பிறப்பதைத் தவிர்க்கலாம். தன்மேல் அன்பு செலுத்துபவர்களும் இருக்கிறார்கள், தானும் ஏற்கப்படுகிறோம் என்பது புரிந்து, கூடியவரை பிறருக்குப் பாரமாக இருக்கமாட்டான்.

சமீபத்தில் ஆடிசம் வந்த ஒரு பதின்மூன்று வயதுச் சிறுவனைப்பற்றி அறிந்தேன். வயலின் வாசிப்பதில் நிபுணன். தன்னை மறந்து, பிறரையும் மீறி வாசித்துக்கொண்டே போவான். குழுவில் வாசிக்க நேரிடும்போது, அவனுடைய இந்தக் குணம் பிறருக்குத் தொந்தரவாகிவிடும். அதனால், அவன் எப்போது தன் தனி உலகத்தில் சஞ்சரிக்கப்போகிறான் என்றுணர்ந்து, அப்போது அவனுடைய தோளுக்குக்கீழ் லேசாகத் தட்டினால், உடனே நிகழ்காலத்துக்கு வந்துவிடுவான். இப்போது பல ஆசிய நாடுகளிலுள்ள வசதிகுறைந்த மாணவ மாணவிகள் கோலாலம்பூரில் ஒன்றாக இணைந்து, பல்வகையான பாடலும் ஆடலும் படைக்கப்போகும் நிகழ்ச்சியில் அவனும் இடம்பெற்றிருக்கிறான்.

பீட்டர் என்ற இன்னொரு ஆடிச சிறுவனை கிளப்பில் நீச்சலுக்குப் போனபோது பார்த்தேன். அடிக்கடி அவன் தாய் அவனது தலையைத் தடவுவாள். தனியாக இருந்தால், அர்த்தமில்லாமல் கத்திக்கொண்டிருப்பான். வாய் நிறைய தண்ணீரை வைத்துக்கொண்டு, யார்மேலாவது உமிழ்வான். அப்படித்தான் எங்களுக்குள் அறிமுகம் ஏற்பட்டது.

அவனுடைய நிலை புரிந்து, யாரும் கோபிக்கவில்லை. பிறர் பிடித்துக்கொள்ளாமல் நடக்க முடியாது இருந்தவனது உடலுக்குப் பலம் வருவதற்காக தாய் அவனை நீச்சல் குளத்திற்கும் கடலுக்கும் விடாது அழைத்துப்போவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகச் சொன்னாள். அங்கே பலரும் அவனுக்கு குளிக்கவும், நடக்கவும் உதவி செய்தார்கள்.

பல ஆண்டுகளுக்குப்பின் பீட்டரை ஒரு பேரங்காடியில் சந்தித்தேன். தனியாக நடந்துவந்தான்.

மகிழ்வுடன், “ஹலோ பீட்டர்!” என்று நான் முகமன் கூற, ஒரு வினாடி தாமதம்கூட இல்லாது, “ஹலோ ஆன்ட்டி நிர்மலா,” என்று இயந்திரம்போன்று உணர்ச்சியற்ற குரலில், என் முகத்தைப் பாராது, சொல்லியபடி நடந்துபோனான். அவனுடைய திறமை நீச்சலில்.

இவனுடைய தந்தை, `இந்த மகன் வித்தியாசமானவன்!’ என்று பெருமையாகப் பிறருக்கு அறிமுகப்படுத்துவார். தன்னுடன் எல்லா இடங்களுக்கும் அழைத்துப்போவார்.

ஊனமுள்ளவரின் சகோதர சகோதரிகளும் பாதிப்படைகிறார்கள். `பெற்றோர் தன்னைச் சரியாக கவனிப்பதில்லை,’ என்று சிலர் எண்ணுவார்கள். பெற்றோருடன் சேர்ந்து, அவர்களும் குறையுள்ள சகோதரரைப் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் வேறு. வயதுக்குமீறிய பொறுப்புகளால் மன இறுக்கம்.

ஒரு பெண், “என் பெற்றோர், பாவம், ரொம்ப கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் முகத்தில் சிரிப்பே இல்லை. நான் மிக மிக நன்றாகப்படித்து, அவர்களுக்கு என்னால் ஒரு தொந்தரவும் இல்லாதபடி நடக்க முயற்சிக்கிறேன். ஆனால், அது எனக்கே பாரமாக இருக்கிறது!” என்று தோழிகளிடம் அரற்றுவதைக் கேட்டிருக்கிறேன்.
சிலருக்கு இப்படி ஒரு சகோதரர் இருப்பது தம் சிநேகிதர்களுக்குத் தெரிந்தால் அவமானம் என்ற எண்ணம் எழும். `இப்படி நினைக்கிறோமே!’ என்று குற்ற உணர்ச்சியும் கூடவே உண்டாகும்.

“எங்கள் மூத்த மகன் இவனுக்கு ஈடு செய்வதுபோல், எல்லாவற்றிலும் சிறந்து விளங்குகிறான்,” என்று பீட்டரின் தாய் என்னிடம் தெரிவித்தாள். பெற்றோரின் மனப்பளுவைக் குறைக்கவே கஷ்டப்பட்டு அப்படி நடக்கிறான் என்று நான் எடுத்துக்கூற, அவள் அதிர்ந்தாள். “இது அவன் தப்பில்லையே!” என்றாள் சிறு குரலில்.
குறைபாட்டுடன் இருப்பவர்களை வேண்டாத ஆர்வத்துடன் வெறித்துப் பார்ப்பதும் ஒதுக்கிவைப்பதும் கேவலம்.

அங்கக் குறைவுடன் பிறப்பது மரபணுக்களாலோ, சுற்றுச்சூழலாலோ, அல்லது புரியாத எந்தக் காரணத்தாலும் இருக்கலாம். இதில் அவர் செய்த தவறு என்ன?
தொடருவோம்

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க