திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 24

இரண்டறக் கலந்த நிலை

தன்னுள் இறைவனையும் இறைவனுள் தன்னையும் காண்பது அறிவின் மிக உயர்ந்த நிலை. ஆயின் இந்த இரண்டையும் ஒன்றாக அறிகின்ற நிலை எப்போது வரும்? நம்மைச் சுற்றி இருக்கின்ற மாயையை விலக்கியபின் தானே இந்த நிலைக்குச் செல்ல தானமாகவோ முடியும்? இந்த நுண்ணிய அறிவு நினைத்தவுடன் கிடைத்து விடுமா? இதை எங்காவது சென்ற வாங்கவோ அல்லது தானமாகவோ பெற முடியுமா? அல்லது இந்த அறிவு நமக்கு கிடைத்தபின் நாம் எந்த நிலையை அடைகின்றோம்? அதற்குப் பிறகு நாம் எதைத் தேடி அலைகின்றோம்? இப்படி பல கேள்விகள் நமது மனத்திலே அடிக்கடி தோன்ற வாய்ப்புண்டு. இவைகளுக்கு பதில் தேடித்தேடி நாம் அலுத்திருக்கின்றோம்.. இந்த நிலையைப் பற்றி திருமூலர் என்ன சொல்லுகின்றார்?

என்னை யறிந்திலேன் இத்தனை காலமும்

என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்

என்னை அறிந்திட்டு இருத்தலுங் கைவிடாது

என்னையிட் டென்னை உசாவுகின் றானே

தன்னுள் தன்னைத் தேடி அதன் மூலமாக எங்கும் உள்ள இறைவனைக் கண்டு ஆனந்திக்கின்ற உயிருக்கு பேச்சு எப்படி எழும்? அது வெறும் பேரானந்த நிலையன்றோ?

இந்த ஆனந்தத்தை தரும் அறிவு நிலைக்கு நம்மால் எப்படிச் செல்ல முடியும்? இந்தப் பயணத்தை தொடங்கி வைப்பவனும் இறைவனே. அதை நடத்துபவனையும் இறைவனே. அந்த அனுபவ நிலையில் நம்மை நிறுத்தி நம்மை ஆட்கொள்ளுபவனும் அவனே, அவனுடைய இந்த நாடகத்தை நாம் ரசிக்க வேண்டாமா? இந்தக் கருத்தை வலியுறுத்தும் வகையில் மாணிக்கவாசகர் திருவாசகத்தில் பாடுகின்றார் :

வான நாடாரும் அறி ஓணாத நீ

மறையில் ஈறும் முன் தொடர் ஓணாத நீ

ஏனை நாடரும் தேறி ஓணாத நீ

என்னை இனிதாய் ஆண்டுகொண்டவா

ஊனை நாடகம் ஆடுவித்தவா

உருகி நான் உனைப் பருக வைத்தவா

ஞான  நாடகம் ஆடுவித்தவா

நைய வையகத்துடையா விச்சையே.

சிந்தையில் இறைவனை நிறுத்தி அறிவால் மட்டுமே உணரக்குடிய நிலையில் நம்மையும் அவனையும் இரண்டற நிறுத்திப் பார்க்கின்ற நிலை மிக அரிதே.

உள்ளத்தின் உள்ளே அமர்ந்துவிட்ட இறைவனின் அனுபவம் நமக்கு கிடைக்கும்பொழுது புறத்திலே நாம் இறைவனின் எந்த வடிவைத்த தேட முடியும்? இறைவனின் மற்ற எந்த உருவம் தான் நமக்கு இனிக்கும்?

பட்டினத்தாரோ உள்ளத்தின் உள்ளே உனைக் கண்டபின் வேறெங்கும் உன்னைக் காண  மனமில்லை என்ற கருத்தை அழகாக முன் வைக்கின்றார்:

உளியிட்ட கல்லையு மொப்பிட்ட சாந்தையு மூற்றையறப்

புளியிட்ட செம்பையும் போற்றுகி லெனுயர் பொன்னவனே

ஒளியிட்ட தாளிரண் டுள்ளே யிருத்துவ துண்மையென்று

வெளியிட் டடைத்துவைத் தேனினி மேலொன்றும் வேண்டிலனே.

ஆகவே இறைவனை இலக்கை நோக்கி நாம் செல்லும் பயணத்திற்கு முதல் படியாகின்றது. கண்கள் கொண்டு பார்ப்பதை விட்டு அகக்கண்கள் கொண்டு பார்த்தல் அவசியமாகின்றது. அதனால்தான் திருமூலர் எளிதில் புரியும் வகையில் நமக்கு உணர்த்துகின்றார்

முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்

அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்

இவ்வாறு அகக்கண்கள் கொண்டும் பார்க்கும் பொழுது நமக்கு எவ்வளவு அறியாமை இருக்கின்றது என்று எளிதில் புலப்படும் அது மட்டுமல்ல, எதை நாம் அறிவு என்று நினைத்துக்கொண்டும் நம்பிக்கொண்டும் இருக்கின்றோமோ அதுவே நமது அறியாமையின் ஆணிவேராகவும் சின்னமாகவும் ஆகிவிடுகின்றது. ஆனால் இந்த அறியாமையை அறிவதே அறிவின் இலக்கை நோக்கி நாம் செல்லும் பயணத்திற்கு முதல் படியாகின்றது. திருமூலரின் கீழ்கண்ட பாடல் இந்தக் கருத்தை வலியுறுத்தும் வண்ணம் அமைந்துள்ளது மட்டுமின்றி, திருமூலரின் ஆழ்ந்த சிந்தனைக்கு ஒரு முன்னுறையாக அமைகின்றது.

அறிவறி  வென்றெங் கரற்றும் உலகம்

அறிவறி யாமை யாரும் அறியார்

அறிவறி யாமை கடந்தறி வானால்

அறிவறி யாமை யழகிய வாறே.

(தொடரும்)

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க