-கிரேஸி மோகன்

ganesha
சோமன்த னைச்சென்னி சூடும் சிவகுடும்ப
சீமந்த மைந்தன் சதுர்த்தியின்றுமாமன்தன்
சக்கரத்தை உண்டுமிழ்ந்த சித்தி வினாயகனை
வக்கிர துண்டனை வாழ்த்து….(1)

 தம்பிக்குக் காதல் துணைசென்ற தந்தியே
தும்பிக்கை வேழமே, தேவர்கள்ஸ்தம்பிக்க
ஆட்சி கயிலாயத்தை அவ்வைக்(கு) அளித்தவா
காட்சிக்(கு) இனியபிள்ளாய் காப்பு….(2)

தொந்தி குலுங்கிட தந்தி ஜொலித்திட
முந்தி முழுமுதல் மோதகன்முச்சந்தி
அரசடியில் வீற்று அருள்பாலிக் கின்றான்
முரசடித்தேன் தந்திக்கு முந்து….(3)

ஆனைக்கா அம்மையும் ஊனைக்கொள் ஊர்த்தவர்க்கும்
சேனைக்கா வேலன் சகோதரனாய் தீனர்க்காய்
தோன்றிய பிள்ளாய், தமிழாக அவ்வைக்கோல்
ஊன்றிய வேழா உதவு….(4)

அக்கினிக்கு முப்புரத்தை ஆட்படுத்தத் தேரேறி
உக்கிரமாய் சென்ற உருத்திரர்க்கேவிக்கினமாய்
அச்சொடித்து உன்னிருப்பை எச்சரிக்கை செய்தவரை
உச்சரிக்க வைத்தாய் ஒழுங்கு….(5)

கணபதி ராயா மனிதச காயா
பனிபதி கைலாசப் பையாதனபதி
மாலின் மருகோனே மயிலோனின் மூத்தோனே
கோல வினாயகனே காப்பு….(6)

கயிலாய சீதனம் கற்பகச் செல்லம்
மயிலாப்பூர் தோழன் மகோதரன்பயிலோரும்
பள்ளிப் பரிட்சையில் பெற்றிட வெற்றியை
அள்ளித் தருவான் அவன்….(7)

அறுகம்புல் தேங்காய் எருக்கம்பூ, மாலின்
மருகன்பால் வைக்க மகிழ்ந்துஒருகொம்பால்
நான்முகன் நம்தலையில் நட்ட விதையினை
ஆனைமுகம் ஆக்கும் அரசு….(8)

cowசுகள் பேணிடும் கண்ணன் மருகோனே
mouse
யிக வாகனா மோதகா – houseனுள்
வாராய் வினாயகா வேளை சதுர்த்தியில்
தாராய் அறிவில் தெளிவு….(9)

மூஷிக வாகனனை தோஷ விநாசகனை
பாஷைகள் போற்றும் ப்ரணவனைவேஷமாய்
வேழத்தோல் போர்த்திய தோழக் கடவுளை
ஏழைகள் ஈசனை ஏத்து….(10)

அரச மரத்தடியில் ஆகாசம் பார்த்து
உரசும் எலியோடு ஒண்டிப்பெருசாய்
எதிர்பார்ப்பு ஏதுமின்றி ஏழெட்டு தேங்காய்
சதிராக யாதுமருள் வான்….(11)

கமர்கட் கடலையுண்டை குச்சிஐஸ் மூன்றும்
சமர்ப்பிப்பேன் நானுனக்கு என்றும்அமர்ந்திட்டு
செங்கழுநீர்ப் பிள்ளையாரே சாப்பிட்டு த்ருப்தியாய்
சங்கத் தமிழ்மூன்றும் தா….(12)

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *