மாணவி அனிதாவின் மரணம்…
*********************************************************************************************************************
மாணவி அனிதாவின் மரணம்…
ஆழ்ந்த கவலையையும் உரத்த சிந்தனையையும் ஒருசேர உருவாக்கியுள்ளது…
மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் அறிக்கை
*********************************************************************************************************************
மாணவி அனிதாவின் மரணம் பத்தோடு பதினொன்றாகக் கருதி கடந்து விடமுடியாத ஒன்றாகிவிட்டது. மனசாட்சியை உலுக்கும் வீச்சும் வீரியமும் மாணவி அனிதாவின் மரணத்திற்கு உண்டு.
இது ‘ தற்கொலை தானே ’ என்று பகுத்தறவு பேசித் தள்ளிவிட முடியாத நிகழ்வுதான் அனிதாவின் மரணம்.
ஏழைக் கூலித்தொழிலாளியின் குடும்பத்தில் பிறந்துள்ளார்… தாழ்த்தப்பட்ட சாதிப் பிரிவைச் சார்ந்தவராகத் திகழ்ந்துள்ளார். சிறுவயதிலேயே தாயை இழந்துள்ளார். சிறிதும் வளர்ச்சியடையாத குக்கிராமத்தில் வளர்ந்துள்ளார்.
இத்தனை இன்னல்களையும் இடையூறுகளையும் சந்தித்தபோதும் அரிதின் முயன்று கல்வியில் மிகச் சிறந்தவராக விளங்கியுள்ளார்.
நீட் தேர்வு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அனிதா இன்று மருத்துவக் கல்லூரி மாணவியாக நம்மோடு மகிழ்வுடன் வாழ்ந்திருப்பார்.
அனிதாவின் மரணம் ‘ ஏழைகளுக்கு கல்வி எட்டாக்கனி ’ என்ற கூற்றை உறுதி செய்துள்ளது.
‘ வாய்ப்புள்ளவர்களுக்கு மட்டும்தான் அடுத்தடுத்த வாய்ப்புகளா ? ’ என்ற அடிப்படையான கேள்வியையும் எழுப்பியுள்ளது.
‘ தரமான கல்வி வேண்டும் ’ என்பதிலும் ‘ அனைவருக்கும் சமமான கல்வி வேண்டும் ’ என்பதிலும் இருவேறு கருத்துகளுக்கு இடமிருக்க முடியாது.
அத்தகைய நிலையை அடைய மத்திய, மாநில அரசுகள் செய்ய வேண்டியது என்ன ? சமூகத்தின் பங்களிப்பு என்னவாக இருக்க வேண்டும் ? கல்வித் துறையில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் யாவை ? நீதித்துறையின் பார்வை எத்தகையதாக இருக்க வேண்டும் ? போன்ற எண்ணற்ற கேள்விகள் முறையாக பதிலளிக்கப்படாமல் கிடப்பில் கிடக்கின்றன.
இவை போன்ற அடிப்படையான அம்சங்களில் அரசும் சமூகமும் கவனம் செலுத்தத் தவறியதை இடித்துச் சொல்வதுபோல் அனிதாவின் மரணம் அமைந்துவிட்டது.
கல்வி வளர்ச்சியை மேலோட்டமாகவோ எந்திரகதியாகவோ பார்க்காமல் தரத்தை, வளர்ச்சியை சமூகக் கண்ணோட்டத்தோடு இணைத்துப் பார்க்கின்ற ஆழ்ந்த அக்கறையுள்ள சமூக நோக்கம் இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது.
இந்த செய்திகயைத்தான் அனிதா தனது மரணத்தின் மூலம் இச்சமூகத்திற்கு விட்டுச் சென்றுள்ளார்.
திறமை – திறமை என்கிறார்களே, மதிப்பெண் – மதிப்பெண் என்கிறார்களே அந்தத் திறமையும் மதிப்பெண்களும் இருந்தும் அனிதா ஏன் தான் நினைத்ததைப் படிக்க முடியவில்லை என்ற கேள்வி எழுகிறதல்லவா ?
திறமையிருக்கிற அனிதாவுக்கு மேலும் தரமான கல்வி வாய்ப்பளிக்காதது யார் குற்றம் ? குற்றம் இழைக்காத ஒருவர் தனக்குத்தானே தண்டனையளித்துக் கொண்டதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாதல்லவா ?
அதுதான் அனிதாவின் மரணத்தில் நிகழ்ந்திருக்கிறது.
அனிதாவின் மரணத்திற்கு மக்கள் சிந்தனைப் பேரவை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
கல்வி சிலருக்கானதோ பலருக்கானதோ அல்ல… அது மகத்தானது மட்டுமல்ல… மக்களுக்கானது. அனிதாவின் மரணம் ஆழ்ந்த கவலையளிப்பதோடு உரத்த சிந்தனையையும் ஒவ்வொருவருக்குள்ளும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
————————————————X————————————————