க. பாலசுப்பிரமணியன்

இயக்கம் (தசை) சார்ந்த நுண்ணறிவு (Bodily- Kinesthetic Intelligence)

education

“உங்க பையன் ஓரிடத்தில் அஞ்சு நிமிடம் உட்கார மாட்டேன் என்கிறான்”

“அவனை ஓரிடத்தில் கட்டுப்படுத்த முடியாது”

“அவனுக்கு எப்போதும் எதையாவது நோண்டிக் கொண்டே இருக்கணும்:ஒரு சாமானை உடைத்துப் போடுவது அவனுக்கு ரொம்பப் பிடிக்கும்”

“அவனுக்கு படிப்பிலே கவனமே இல்லை, எப்பப்பாருங்க விளையாட்டு, அது அவனுக்கு சோறு போடுமா”

“ஏண்டா குட்டி போட்ட பூனை மாதிரி இங்கும் அங்கும் ஓடிக்கொண்டு…. ஏதாவது ஓரிடத்தில்  உட்கார மாட்டாயா”

–  என்றெல்லாம் ஆசிரியர்களும் பெற்றோர்களும் குழந்தைகளைப் பார்த்து விமர்சிப்பது கண்டு நீங்கள் ஆச்சரியப்பட்டிருக்கலாம்.

இத்தகைய மாணவர்களில் பலரும் இந்த இயக்கம் சார்ந்த நுண்ணறிவில் (Bodily Kinesthetic intelligence) வல்லமையுள்ளவர்களாக இருக்க வாய்ப்புண்டு.  இவர்களை “Body Smart ” என்று அழைப்பார்கள்

பொதுவாக இந்த நுண்ணறிவில் வல்லமையுள்ள மாணவர்களின் சிறப்பு அம்சங்கள்:

  1. இவர்கள் ஓரிடத்தில் அமர்ந்து செய்யும் செயல்களில் ஆர்வம் காட்ட மாட்டார்கள்
  2. அருகில் உள்ளவர்களைத் தொட்டுப் பேசுதல், அதிகமான உடல் அசைவுகளைக் காட்டுதல் இவர்களிடம் வெளிப்படையாகத் தெரியும்.
  3. மற்றவர்களிடம் பேசும் பொழுது மிக அருகில் நிற்கும் பழக்கம் உடையவர்கள்.
  4. ஏதாவது ஒரு பொருளையோ அல்லது செயலையோ செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள்
  5. படிப்பதை விட எழுதுவதில் ஈடுபாடு அதிகம் இருக்க வாய்ப்புள்ளது.
  6. படிக்கும் பொழுது ஒரு இடத்தில அமர்ந்து படிக்காமல் நடந்துகொண்டே படிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள்.
  7. விளையாட்டு பரிசோதனை போன்றவற்றில் அதிக ஆர்வம் உள்ளவர்கள்.
  8. கூட்டங்களை ஒழுங்குபடுத்தல், சேவைகள் செய்தல், தன்னிச்சையாக உதவி செய்தல் போன்றவற்றில் முன்னிருப்பார்கள்
  9. தலைமைப் பொறுப்புக்கள் மற்றும் மேலாண்மை ஏற்பதில் தயங்க மாட்டார்கள்,
  10. இவர்கள் துடிப்புடனும் அதிக சக்தியுடனும் இருப்பது மட்டுமின்றி உடற்பயிற்சி, நீச்சல் போன்றவற்றில் அதிக ஆர்வம் உடையவர்கள்.

விளையாட்டு வீரர்கள், பொறியியல் வல்லுநர்கள், தொழிற்சாலைகளில் வேலைபார்ப்பவர்கள், ஓட்டுனர்கள், விற்பனையாளர்கள், நடிகர்கள், நாட்டிய வல்லுநர்கள் போன்றவர்கள் இந்த வகையைச் சார்ந்தவர்களாக இருக்க வாய்ப்புண்டு.

மாணவர்களை பொறுத்த வரையில் இந்த வகுப்பைச் சார்ந்த மாணவர்கலின் சில பொதுவான குறிப்பகள்:

  1. இவர்கள் வேகமாகவும் தாறுமாறாகவும் எழுதும் குணமுடையவர்கள்.
  2. இவர்களின் புத்தகங்கள் நோட்டுக்கள் மிகவும் கசக்கியும் கவனிப்பு இல்லாமலும் இருக்கும்
  3. புத்தகங்கள் நோட்டுக்களிலிருந்து அடிக்கடி காகிதங்களை கிழிக்கும் பழக்கம் இருக்கும்
  4. இவர்கள் தங்களுடைய புத்தகங்கள் நோட்டுக்களை அடிக்கடி புரட்டிப் பார்க்கும் பழக்கும் உள்ளவர்களாக இருப்பார்கள்
  5. வகுப்பறைகளிலிருந்து அடிக்கடி ஏதாவது ஒரு காரணத்திற்காக வெளியே செல்ல வாய்ப்புக்களை எதிர்பார்த்த வண்ணம் இருப்பார்கள்
  6. நாற்காலிகள் மேசைகள் ஆகியவற்றை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அடிக்கடி மாற்றும் பழக்கமுயுடையவர்களாக இருப்பார்கள்
  7. பள்ளிகளில் ஓடி விளையாடும் விளையாட்டுக்களில் அதிக ஆர்வம் காட்டுவர்.
  8. .அமர்ந்திருக்கும் நாற்காலிகளில் உட்கார்ந்தவண்ணம் ஆடுதல், அவைகளை நகர்த்துதல், மற்ற மேசைகளுடன் ஒட்டிப்போடுதல் போன்ற பல சில்மிஷங்களில் மனம் கொண்டவர்கள்.
  9. உடைந்த பொருள்களை சரி பார்த்தல், ஒட்டுதல் மற்றும் கைவேலைகள் சம்பந்தப்பட்டவற்றில் ஆர்வம் காட்டுவார்கள்
  10. இயங்கும் பொருள்களை வேகமாக ஓட்டுதல், இடர்களை சந்தித்தல், இடர் மேலாண்மை, தொழில் முனைவு ஆகியவற்றில் ஈடுபாடு காட்டுவார்கள்

ஆகவே பள்ளிகளில் இந்த வகையைச் சார்ந்த மாணவர்களுக்கு இவர்களுடைய தேவை மற்றும் ஈடுபாடுகளுக்குத் தேவையான பாட முறைகள், பயிற்சிகள், பரிசோதனைகள், கேள்விகள் ஆகியவற்றை அமைத்தல் மிக்க அவசியம். இவர்களை ஆசிரியர்கள் பொதுவாக :ஒழுங்கற்றவர்கள்’ என்றும் “கட்டுப்பாடற்றவர்கள் ” என்றும் ஒதுக்கிவிட வாய்ப்புக்கள் அதிகம். உண்மையில் அவர்கள் அப்படிப்பட்டவர்களல்ல. அவர்களுடைய ஈடுபாடுகளையும் திறன்களையும் வல்லமைகளை சரியாக நாம் அறிந்து அதற்குத் தேவையான உள்ளீடுகளைக் கொடுக்காமலிருப்பதே காரணம்.

அடுத்து நாம் காட்சிகள் மற்றும் வளி சார்ந்த நுண்ணறிவு பெற்ற மாணவர்களை பற்றி அறிந்திடுவோம்.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *