“ஸ்ரீராம தர்ம சரிதம்” (8)
மீ.விசுவநாதன்
பகுதி: எட்டு
பாலகாண்டம்
“ரிஷ்ய சிருங்கரும் சுமந்திரர் சொன்னதும்”
மன்னன் தயரதன் மந்திரி சுமந்திரர்
சொன்ன செய்தி மன்னனுக்கு மகிழ்ச்சியை
அள்ளித் தந்தது ; அதைநாம் அறிவோம்:-
புள்ளி விவரமாய்ப் புராணம் சொல்வதை
நெஞ்சுள் வைத்தே விபரமாய்ச் சொல்கிறேன்!
சஞ்சல மில்லா சனத்குமாரர் முனிவர்கள்
சபையில் கூறிய சத்திய வாக்கிது ;
சுபயோக வேளையில் சுந்தர ரூபனை
தயரதன் பிள்ளையாய்த் தான்பெறப் போகிறான் ;
அயற்சியே வேண்டாம் அத்தனையும் உண்மை !
காசியபர் பிள்ளை “விபாண்டக” யோகிக்கு
மாசிலா “ரிஷ்ய சிருங்கர்” மகனாவார் !
காட்டில் குடிலமைத்துக் கருத்தோடு ஒன்றி
நாட்ட மேதுமின்றி நாளெல்லாம் தவமிருப்பார் !
தந்தையைத் தவிர தவறியும் ஒருவரை
சிந்தைக் குள்ளே சிறைபிடிக் காதவர் !
அந்த மகானை “அங்க தேசத்து”
சொந்த மன்னன் “ரோமபாதர்” தன்னுடை
நாட்டு வறுமை நசித்திட வேண்டி
ஆட்களை அனுப்பி அழைத்து வருவார் !
மகளை அவர்க்கு மணம்முடித் திடுவார் !
அகத்தில் பூரணர் ரிஷ்ய சிருங்கரால்
மாமழை பெய்து வளமை தேசமாய்
ஆகிடும் அந்த அங்க பூமியே !
சத்தியம் தவறா தயரத னொருநாள்
நித்திய வேள்விசெய் ரிஷ்ய சிருங்கரை
தன்குல விருத்திக்குத் தகுதியாம் வேள்விசெய
இன்முக மனத்துடன் எதிர்வணங்கி அழைப்பார் !
முனியும் வருவார் முடிப்பார் வேள்வியை !
கனிபோல் நான்கு கண்வளர் குழந்தைகள்
பெற்றுத் தயரதன் பெரும்புகழ் கொள்வார் !”
பற்று நீக்கிய சனத்குமாரர் இதனையே
“கிருத யுகத்தில்” கீர்த்தியால் அறிந்து
திருடமாய்ச் சொன்னதை தெய்வீக பலத்தால்
சுமந்திரர் சொற்களில் சுகமாய்க் கேட்ட
எமபயம் இல்லா எதிரியிலா “தயரதன்”
தயரதன் ரிஷ்ய சிருங்கரை அழைத்தல்
தன்குரு வசிட்டரிடம் சங்கதி கூறி
வன்புலிக் கூட்ட மாபெருங் காடு
நதிகளைக் கடந்து நல்லங்க நாட்டுப்
பதியினை அடைந்து பக்தியுடன் முனிவர்
பாதம் பணிந்தார் ! பண்புடை அயோத்தி
தேசம் வந்து வேள்வி செய்திட
வேண்டு மென்று விரும்பி அழைத்தார் !
வேண்டுதலை ஏற்ற வேதநெறி முனிவரை
சங்கு, துந்துபி, சங்கீத அலைகள்
எங்கும் ஒலித்திட எதிர்கொண்ட ழைத்தார் !
அழகிய அயோத்தி ஆனந்தங் கொண்டு
குழந்தைகள் போலக் கொண்டாட்டம் போட்டது !
மறையறி அந்தணர் மந்திர மோதினர் !
நிறைகுண மாந்தர்கள் நெஞ்சு குளிர்ந்தனர் !
அசுவமேத யாகம் தொடங்கியது
வசந்த காலம் வந்த வேளையில்
இசைந்தனர் அசுவமேத வேள்வி செய்திட !
சரையூ நதியின் வடக்குக் கரையில்
விரைந்து அமைத்தனர் வேள்விக் கூடம் !
விபாண்டக யோகியின் பிள்ளையின் மூலம்
அவாவது தீரும்! அந்தணர் கூறும்
ஆசி பலிக்கும் ! ஐயம் இல்லை
நேசிக்கும் பிள்ளைகள் நிச்சயம் பிறப்பார் !
நம்பிக்கை கொண்ட நல்லசரன்
கும்பிட்டு நின்று குருவருள் பெற்றானே !
(தர்ம சரிதம் வளரும்)
(ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் ஒன்பதாவது, பத்தாவது , பதினொன்றாவது, பன்னிரெண்டாவது பகுதி நிறைந்தது)