“ஸ்ரீராம தர்ம சரிதம்” (9)
மீ.விசுவநாதன்
பகுதி: ஒன்பது
பாலகாண்டம்
வசிட்டரிடம் மன்னன் வேண்டினான்
வசந்த காலம் வந்தபோது
வசிட்ட முனியைத் தயரதன்போய்
உசந்த வேள்வி அச்வமேதம்
உடனே துவங்க வேண்டுமென்று
நயந்த பக்திப் பணிவுடனே
ஞானி முன்னே நிற்பதுபோல்
புயங்கள் கட்டிக் கேட்டவுடன்
புனித குருவும் பதிலுரைத்தார் ! (1)
“நன்றே நடக்கும் கவலைதீரும் !
நாட்டில் உள்ள வேதியர்கள்,
நன்றாய்ப் படித்த கல்விமான்கள்,
நல்ல கலைஞர், கவிஞருடன்
தொன்று தொட்ட தச்சர்கள்,
தூய தர்ம நெறியோர்கள்
என்று தேடி அனைவரையும்
இதயம் திறந்தே அழையுங்கள் ! (2)
சக்ர வர்த்தி விருப்பத்தை
தரணி ஆளும் பிறமன்னர்
திக்கு முழுதும் கூறுங்கள் !
தேடி வருவோர் அனைவர்க்கும்
தக்க மதிப்புக் காட்டுங்கள் !
தவத்தோர் மகிழச் செய்யுங்கள் !
துக்கச் சாதிப் பிரிவின்றி
தொண்டு ளத்தால் அணையுங்கள் !” (3)
இந்த வழியைச் சொல்லிப்பின்
இனிய மனிதர் சுமந்திரரை
“முந்திச் சென்று சனகரையும்
முக்தி காசி அரசனையும்,
அந்தக் கேகய மன்னருடன்
அன்பு “ரோம பாதரையும்”
வந்து கலந்து கொள்வதற்கு
வகையாய் நேரில் அழையென்றார் !” (4)
வெற்றிக் குதிரையும் வேள்வித் துவக்கமும்
பரியும் வெற்றி முகத்துடனே
பாரைச் சுற்றி வந்தவுடன்
சரியாய் ஆண்டு ஒன்றாச்சு !
தவத்தோன் ரிஷ்ய சிருங்கருடன்
பெரிய வேதப் பண்டிதரும்
வேள்வி செய்யத் தொடங்கினரே !
உரிய தேவர் யாவருமே
உவந்து நேரில் வந்தனரே ! (5)
யாக விதியின் படியேதான்
அறத்து வழியின் முறையேதான்
ஆக அனைத்துத் தானமுமே
அந்த வேள்வித் தீயினிலே
ஏக இறைவன் ஒருவனுக்காய்
ஈந்த சக்ர வர்த்தியினை
ஆக மொத்த அனைவருமே
ஆசி தந்து வாழ்த்தினரே ! (6)
தேவர்கள் விஷ்ணுவை வேண்டுதல்
தேவர் குலத்து யாவருமே
பிரும்ம வரத்தின் பலத்தாலே
நோகச் செய்கிற இராவணனால்
நொடிக்கு நொடி அஞ்சினரே !
மூவர் நடுவர் விஷ்ணுவிடம்
முடிவை எடுக்க வேண்டுமென
வாகாய்ச் சொல்லி வேண்டியதால்
மண்ணில் பிறக்க முடிவெடுத்தார் ! (7)
தன்னின் கூறு நான்காகத்
தயரதன் வம்சப் பிள்ளையென
இன்னும் சிலவாம் பொழுதினிலே
எடுப்போம் மனிதப் பிறவியென்றார் !
முன்னே தேவர் நீங்களெலாம்
போவீர் வானர சேனைகளாய் !
என்னால் அசுர இராவணனும்
இன்னல் செய்யும் அனைவருமே (8)
போரில் கொல்லப் படுவார்கள் !
புண்யம் செய்த மற்றவர்கள்
பாரில் மிஞ்சி வாழ்வார்கள் !
பயமே இன்றி மக்களுமே
வேரில் பழுத்த பலாவாக
“இராம ராஜ்யம்” காண்பார்கள் !
தாரின் மலராய் புதுமணமாய்
பதினோ ராயிர(ம்) ஆண்டிருப்பேன் ! (9)
கவலை விடுக என்றுரைத்த
கடவுள் விஷ்ணு சென்றிட்டார் !
அவலைப் பசிக்கும் வேளையிலே
அரியே அள்ளித் தந்ததுபோல்
அகமே குளிர்ந்து தேவர்களும்
அரியைத் துதித்தே பூமியிலே
சுகமாய்ப் பிறவி எடுப்பதற்கு
சொடக்குப் பொழுதில் மறைந்தார்கள் ! (10)
வேள்வியில் வந்த தேவதை
வேள்வித் தீயின் நடுவினிலே
வேத ஒளியின் உருவொன்று
தோளை நிமிர்த்திக் கையிரண்டில்
சுத்த பாயசம் வைத்தபடி
வாளின் கூர்ய அறிவுநிகர்
மன்னன் தயர தனிடத்தில்
வேளை பார்த்துத் தந்துவிட்டு,
“வேந்தே இந்தப் பாயசத்தை (11)
உந்தன் மூன்று மனைவியர்க்கும்
உடனே தந்து மகப்பேற்றை
முந்திப் பெறுவீர்” எனக்கூறி
முகிலைப் போல மறைந்ததுவே !
விந்தை இந்தக் காட்சியினை
வேத முணர்ந்தோர் கண்டனரே !
முந்தைப் பயனைப் பெற்றிட்ட
முகத்தால் மன்னன் பொலிவுற்றான் ! (12)
தேவப் பிரசாதத்தைத் தருதல்
மூத்த மனைவி கோசலைக்கு
மொத்த அளவில் பாதிதந்து
சேத்த மனைவி சுமித்திரைக்கு
சிறிது பாதி தந்துவிட்டுக்
காத்த மனிவி கைகேயி
கையில் தந்து அதில்பாதி
பாத்துக் குடித்த பின்னாலே
தந்தார் மீண்டும் சுமித்திரைக்கே ! (13)
மூன்று பேரின் முகத்தினிலே
முன்னோர் சூர்யக் குலவழகு
தோன்றி நிறைந்து ஒளிர்கிறது !
தோன்றாப் பொருளைக் கருசுமந்து
ஆன்றோர் அகமாய்க் குளிர்கிறது !
அதனால் அறத்தின் நாயகனைப்
போன்றோர் பிறக்கும் காரணமாய்
புனித வேள்வி ஆக்கியது! (14)
(ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் பதிமூன்று, பதினான்கு, பதினைந்து, பதினாறாவது பகுதி நிறைந்தது)

