நவராத்திரி 05 (பாடல்)
இசைக்கவி ரமணன்
உச்ச மானத்துலே வச்ச நேரத்துலே
ஊருக்கெல்லாம் வெளக்கா உசுருக்கு உசுரா, அங்க
ஒய்யாரி ஆடுற ஓரத் தலப்பா
ஓடை நெளிகையிலே, துள்ளி
வெள்ளி மினுக்குற கெண்டை இடுப்புல
வெட்டும் மின்னல் அழகா?
நீ அம்பலத்து அழகா? இல்ல
அந்தரங்க நெசமா?
கள்ளிச் செடிப்பழமே! அடி காசிப் படித்துறையே!
முள்ளில் எழும் முனையே! அந்த முனையெழும் சுனையே! ஒரு
சொல்லுக்குள்ள வந்து கண்ணச் சிமிட்டி
சூனியம் ஆக்குறியே! அந்தச்
சூனியத்துக்குள்ள சோழி விசிறி
மானியங் கேக்குறியே, உசுர மானியங் கேக்குறியே!
நீ வாழ அழெக்கிறியா? இல்ல
வம்புக் கிழுக்குறியா?
காலத் திருவோடு, என் காலும் தெருவோடு
கரை ஒரு கோடு கல கலக்குது ஓடு, இங்க
பாலமுமில்லே படகுமில்லே பாயுது காட்டாறு, உயிர்
பதறுது காலோடு, அங்க
பட்டுன்னு வெட்டுற மின்னலிலே ஒரு
பட்டைத் திருநீறு, உசுரு
மொட்டை மரமாச்சு
இதில் எந்தக் கதை நெசமோ? அதில்
எந்த முடிவழகோ?