பாரதியின் பெண்மை வெல்க!
-முனைவர் க.ஆனந்தி
இன்று நாம் அனைவரும் ஒரு பெண்ணாய் பிறந்ததற்கு பெருமை கொள்வோம். சங்ககாலம் முதல் இன்று வரை என் இந்திய தேசத்தில் அதிலும் குறிப்பாகத் தமிழகத்தில் பல வீரமங்கைகள் வாழ்ந்ததற்கான சான்றுகளை இலக்கியங்களில்தான் நான் படித்துத் தெரிந்து கொண்டேன். ஆனால் இன்று என் கண்முன்னே தன்னை வளர்த்துக்கொண்டு, என் தாய்த்திரு நாட்டையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று எல்லோர் மனத்திலும் நிறைந்து காணப்பட்ட ஒரு பெண்ணைக் கண்டேன்.
எத்தனை எத்தனை ஆண்சிங்கங்கள் நடமாடும் அரசியல் காட்டுக்குள் ஒற்றைப் பெண்சிங்கமாய் உள்ளே நுழைந்து தனியொரு பெண்மணியாய் பல ஆண்டுகளாக ராஜதர்பார் செய்து தமிழகத்தின் முதல்வராக அரியணை ஏறியவர் புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள். அவர் இன்று நம்மோடு இல்லை.
பள்ளிப் படிப்பை முடித்து தங்கப் பதக்கத்தை வென்றவர். கல்லூரிப் படிப்பை தொடர இயலாது போனாலும், ஆறு மொழிகளை அழகுற பேசக்கூடியவர். விருப்பமில்லாமல் வந்தாலும் கலையைக் கடவுளுக்கு நிகராக நேசித்தவர். இன்றும் கலைத்துறையினரால் மதிக்கப்பட்டும், போற்றப்பட்டும் வாழ்ந்த கலையரசி.
தான் எடுத்துக் கொண்ட எந்த ஒரு செயலிலும் முழுமூச்சாய் ஈடுபட்டுச் செயல்படுபவர். அவரின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம். எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும்; முன்வைத்த காலைப் பின்வைக்கக் கூடாது என்று எத்தனை எத்தனையோ இடையூறுகளும், இன்னல்களும், வலிகளும், வேதனைகளும் எதிர்நின்றபோது சலிக்காது நேர் கொண்டு முன்னேறியவர்.
தமிழகத்தை நீண்டநாள் ஆண்ட தலைவர்களுள் ஆறுமுறைத் தமிழக முதல்வராகப் பதவி வகித்தவர். நெருப்பாற்றில் நீந்திவந்த இவரின் துணிவு, புவியில் யாருக்கும் அஞ்சாத செருக்கு, அனைத்துத் துறைகளிலும் தேர்ந்த ஞானம், அனைவரையும் வியக்க வைத்தது. ஆகச்சிறந்த பெண்மணி என்றால் அது மிகையாகாது.
ஒரு பெண் பல தோல்விகளையும், பல விமர்சனங்களையும் கண்டு பயங்கொள்ளாது தன்னிச்சையாகத் தான் எடுக்கும் முடிவு பலருக்கு நன்மையாகும்போது வெற்றியடைகின்றாள். அதுதான் இவரிடமும் நடந்தது.
இன்று சமுதாயத்தில் பெண்கள் அப்படி அல்லர்! தன் குடும்பத்தாரோடும், கணவனோடும் சிறு சிறு பிரச்சனைகள் என்றாலே உடைந்து போகின்றனர். உள்ளம் சிதைந்துபோகின்றனர். தன்னை மாய்த்துக் கொள்ள துணிந்து விடுகின்றனர். இப்படிப்பட்ட பெண்களுக்கு மத்தியில் கடைசிவரை யுத்தகளத்தில் நின்று, வென்றாலும் வீழ்ந்தாலும் மீண்டும் மீண்டும் எழுந்து நடந்து எல்லோரையும் அதிரவைத்த தைரியத்தை, தன்னம்பிக்கையை ஒவ்வொரு பெண்ணும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தன் வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகமாகவே வாழ்ந்து காட்டியவர்.
இலக்கியம், அறிவியல், வேளாண்மை, சட்டம் என்று எல்லாத் துறையினராலும் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றவர். 3 வயதில் தந்தையை இழந்தவர். 22 வயதில் தாயை இழந்தவர். உறவுகள் இன்றி தனியொரு மனுசியாய் வாழ்ந்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர்.
எத்துணைப் போர்க்குணம் இருந்திருந்தால் இன்று எல்லோரும் அவரை இரும்புப் பெண்மணி, வீரமங்கை, பெண்சிங்கம் என்றெல்லாம் அழைத்திருப்பார்கள். தமிழகம் இழந்தது ஒரு பெண்சிங்கத்தைத்தான். இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆகும் இவரைப் போன்ற ஒரு இரும்புப் பெண்மணி உருவாக என்று கேள்விகள் எழும்புகின்றன.
ஒரு பெண் இவ்வளவு ஆளுமையோடும், கம்பீரத்தோடும், உலக அறிவோடும், மொழித்திறனோடும், தைரியத்தோடும், திமிரோடும் வருவதற்கு இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆகும்?
ஒரு பெண், பெண் என்ற கர்வத்தோடு திமிரோடு, நடைபோட அவள் நடந்து வருகையில் அரங்கமே எழுந்து நின்று கைகூப்பி வணங்க இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆகும்?
சமுதாயத்தில் நிகழும் பல்வேறு கேடுகளுக்கு மத்தியில் ஒரு பெண்ணை அனுமதியில்லாமல் எதிர்க்கும் எவராலும், அவளின் விரல் நகத்தைக் கூடத் தீண்டமுடியாமல் போகும் நிலை வருவதற்கு இன்னும் எத்தனை நூற்றாண்டுகளாகும்? என்ற இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நமது தமிழக முதல்வர் வாழ்ந்து காட்டியுள்ளார்.
எந்த நூற்றாண்டில் இப்படி ஒரு பெண் வரப்போகிறார் என்று எதிர்பார்க்காமல் நாம் ஒவ்வொருவரும் இப்படித்தான் வாழ வேண்டும் என்று கற்றுக் கொடுத்து விட்டு சென்றிருக்கிறார் புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள்.
அவரின் கொள்கைகளைக் கைக்கொண்டு நாம் வாழ்ந்து காட்டுவோம். ஒரு பெண்ணாக நாம் பெருமைப்படுவோம். தோல்வியிலும் வெற்றி கண்டவர் அவர். எல்லாவற்றிலும் வெற்றி கண்டவர் எமனிடம் தோற்றுப் போனதால் மண்ணுலகை ஆண்ட மங்கை விண்ணுலகை ஆளச் சென்றிருக்கின்றார்.
அந்தத் தங்கத் தாரகைக்கு, பொன்மனச் செல்விக்கு, புரட்சித் தலைவிக்கு, போர்க் குணம் நிறைந்தவருக்கு ஆன்மா அமைதி பெற இறைவனை வேண்டிக் கொள்வோம். நாமும் ஒரு பெண் என்ற கர்வத்தோடு இவ்வுலகில் வலம் வருவோம். பாரதியின் பெண்மை வெல்க!
முனைவர் க.ஆனந்தி அவர்கள் தீவிரமான ஆழ்ந்த ஆய்வு நோக்கம் கொண்டவர் என்பது இக்கட்டுரை வாயிலாக அறியமுடிகிறது. தங்கள் தமிழ்ப்பணி தொடர வாழ்த்துக்கள்…