கலையால் இணைவோம்

நலம்-2-1-1

பாரம்பரிய இசை, நாட்டியம் எல்லாம் பக்தி மார்க்கமாக இருந்தவை. பிறர் பாராட்ட வேண்டும், பெரும்பொருள் ஈட்ட வேண்டும் என்று ஏதேதோ காரணங்களுக்காக இவைகளைக் கற்க நினைத்தால் ஓரளவுதான் வெற்றி பெற முடியும்.

சுயநலம் கொண்ட பெற்றோர்

எழுபது வயதுக்கு மேலான ஒரு பரதநாட்டிய ஆசிரியை என்னிடம் கூறினார்: “அந்தப் பெண் நன்றாக ஆடுவாள். ஆனால் அவளுடைய தாய் அவளையே நான் கவனித்துக்கொண்டிருக்க வேண்டும், பொது இடங்களில் ஆட அவளுக்குத்தான் நிறைய வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்று வற்புறுத்தினார். `இனி வராதே!’ என்று நான் அவளை நிறுத்திவிட்டேன்”. சொல்லும்போதே அவர் முகத்தில் அப்படி ஒரு கோபம்.

இதனால் பாதிப்படைந்தவர்கள் பலர். முன்னுக்கு வரவேண்டிய மாணவியை இழந்த ஆசிரியை, கலையார்வம் பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டதால் ஏமாற்றமடைந்த மாணவி. போதாத குறைக்கு, தாயின் கனவுகளும் பேராசையால் நொறுங்கிவிட்டன.

எத்தனை பாட்டுகள் தெரியும் என்று விரல்விட்டுக் கணக்குப் போடுவதைவிட, கற்ற சிலவற்றை ஒருவர் எவ்வளவு முழுமையாகக் கற்றிருக்கிறார் என்பதுதான் முக்கியம்.

திறமையைக் காட்ட அவசரம்

ஒரு முறை நான் மேடையில் பாடி முடிந்ததும், “சங்கீதம் படிச்சுக் குடுப்பீங்களா? எத்தனை மாசத்திலே மேடை ஏத்துவீங்க?” என்று தாய்மார்கள் கேட்டபோது திகைத்துப்போனேன்.

இவர்களைப்போன்ற பெற்றோர் ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்கிறோம், அதனால் அவர்கள் நாம் சொல்வதையெல்லாம் கேட்டாக வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இவர்களுக்கு இணங்கி சொல்லிக்கொடுத்தால், பாட்டுகூட ஏதோ பாடத்தை ஒப்பிப்பதுபோல் இருக்கும். அனுபவித்துப் பாடுவதுபோல் இருக்குமா? பாவம் எப்படி வரும்?

இப்படிச் செய்வது தவறான முறை என்று ஆசிரியர்களுக்குப் புரியாமல் இல்லை. ஆனாலும், வேறு வாத்தியார்களை நாடிப் போய்விட்டால், நம் வருமானத்திற்கு என்ன வழி?’ என்று, வாரத்துக்கு ஓர் உருப்படி என்று பெயருக்குச் சொல்லிக் கொடுப்பார்கள். அதனால் சொல்லிக் கொடுப்பவருக்கோ, கற்பவருக்கோ கிஞ்சித்தும் மனநிறைவு கிடைக்காது.

குழுவாகப் பங்கேற்பது

ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் நுண்கலை சம்பந்தப்பட்ட ஒரு காரியத்தில் ஈடுபடுகையில், போட்டி மனப்பான்மை எழக்கூடும். `பார்ப்பவர்கள் என்னையே பாராட்ட வேண்டும்!’ என்ற எண்ணத்துடன் செய்வார்கள். அவர்கள் எதிர்பார்த்த பாராட்டு பிறருக்குக் கிடைத்துவிட்டாலோ, ஆத்திரமும் பொறாமையும் கொள்வார்கள்.

இதைத் தவிர்க்க, ஆசிரியர் ஒரு மாணவன்மீது கூடுதலான அன்பையோ, கவனத்தையோ காட்டாமல் இருப்பது அவசியம். ஓர் அமைப்பின்கீழ் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கையில், பங்கு பெறுபவர்களின் பெயர்கள் தனித்தனியாகக் குறிப்பிடாமல் இருக்கும்போது, `நாம் எல்லாரும் இணைந்து இயங்கினால்தான் நிகழ்ச்சி வெற்றி பெற முடியும்!’ என்ற மனப்பக்குவம் அவர்களுக்கு வருகிறது. போட்டியோ, கர்வமோ எழ வாய்ப்பில்லை.

சமீபத்தில் இப்படி ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். பத்து மாணவிகள் ஒருவருக்கொருவர் ஒப்பனை செய்து, பிறர் ஏவாமலேயே மண்டபத்தை அலங்கரிப்பதிலிருந்து நாற்காலிகளைக் கொண்டுவந்து போடுவதுவரை எல்லா வேலைகளையும் தாமே முன்னின்று செய்தார்கள். `கடினமான வேலை’ என்று அஞ்சி நழுவாது, பார்த்துப் பார்த்து ஒவ்வொன்றையும் செய்கிறார்களே என்று ஆச்சரியமாக இருந்தது. இவர்கள்தாம் தலைமைப் பதவிக்கு ஏற்றவர்கள் என்று தோன்றிப்போயிற்று.

`பிற வகுப்புகளைச் சார்ந்த மாணவிகள் ஆடும்போது, கேலியாகச் சிரிக்கவோ, பேசவோ கூடாது,’ என்ற நியதியைப் பின்பற்றுகிறார்கள் இவர்கள். அப்படிச் செய்தால்தான், `நான்தான் உயர்த்தி!’ என்ற தலைக்கனம் கூடுகிறது. ஒருவரது திறமையும் ஆட்டங்கண்டு போகிறது.

இம்மாணவிகளின் குடும்பத்தினர் ஆசிரியையிடம் தம் பெண்களை ஒப்படைத்துவிட்டதைப்போன்று நடந்துகொண்டனர். குறுக்கே வரவில்லை. தாங்களும் சேர்ந்து உழைத்தார்கள். இவர்களுக்குள் மொழி வேறுபாடு இருந்தாலும், அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

பிறரது பார்வையில்

ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சியின்போது, தமிழரல்லாத ஒருவர் என்னைக் கேட்டார், “உங்கள் நாட்டியத்தில் ஒவ்வொரு விரலசைவுக்கும் அர்த்தம் இருக்கிறது போலிருக்கிறதே?” என்று.

“ஒவ்வாமைக்கும், அசுரனுக்கும் ஒரே முத்திரைதான்,” என்று நான் ஆரம்பித்து, சிலவற்றை விளக்கச் சிரித்தார்.

அவர் மேலும் துளைத்தார்: “யோகாசனம் செய்வது போல் சில சமயம் வருகிறதே!”

யோகா பயின்றால் நாட்டியம் ஆடுவது எளிது. குனியும்போது மூச்சை வெளிவிட வேண்டும், நிமிர்கையில் மூச்சை உள்ளுக்கிழுக்க வேண்டும். ஒரே காலில் நீண்ட காலம் நிற்க இவர்களால் முடியும். இந்த மாணவிகள் ஒவ்வொரு வகுப்பும் தொடங்குமுன் சில யோகாசனப் பயிற்சிகள் செய்கிறார்களாம்.

பாட்டில் உணர்ச்சி வேண்டாமா?

வாய்ப்புகள் அதிகமாக வேண்டும் என்ற எண்ணத்துடன், ஊடகத்தைச் சேர்ந்த புகைப்படக்காரர் இருந்தால், ஒரு கலைஞர் வலியப்போய் அவருடன் நட்பு கொண்டவர்போல் நடிப்பது பயனளிக்கலாம். ஆனால், அவர்தான் திறமை மிக்கவர் என்று எல்லாரும் ஒப்புக்கொள்வார்களா என்பது சந்தேகம்தான்.

நானே சகலம்(?)

தியாகராஜ ஆராதனையின்போது, நூற்றுக்கணக்கான இசை வல்லுனர்கள் தம் பக்தியைச் செலுத்த வருவதாகப் பெயர். ஆனால், ஒரு பாடகி முதல் வரிசையில் அமர்ந்துகொண்டு, தன்முன் மூன்று ஒலிபெருக்குகளை வைத்துக்கொண்டு பாடியதையும், முன்பொருமுறை ஒரு புகைப்படக்காரரைப் பார்த்து புன்னகை பூத்து, அச்சமயம் பாடாமல் இருந்ததையும் தொலைகாட்சியில் கண்டபோது மனம் நொந்தேன். தன்னையே நினைத்துக் கொண்டிருந்தால் பக்தி எப்படி வரும்? பாட்டிலும் உயிர் இருக்காது.

நல்ல வேளை, `இசையே இறைவனைத் துதிக்கும் வழி!’ என நம்பி வாழ்ந்த வாக்கேயக்கார்கள் இப்போது உயிருடன் இல்லை!

மேடைக் கச்சேரிகளின்போது, பாடகரும், வாத்தியக்காரர்களும் ஒருவரது திறமையை மற்றவர் `பேஷ்!, `பலே!’ என்று வாயாரப் பாராட்டினால் கச்சேரியும் சிறக்கும், இரு தரப்பினர் இடையே ஆழ்ந்த நட்பும் உண்டாகும்.

பல ஆண்டுகளுக்குமுன் பார்த்த சம்பவம் நினைவுக்கு வருகிறது. பார்வையற்ற ஒரு வாத்தியக்காரரை சபையோர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தியபோது பாடகர் முகத்தில் ஆத்திரம் கொப்புளித்தது.

ரசிகர்கள் தலையாட்டினால் அது அவருக்குத் தெரியும் என்று நினைத்து அவர்கள் வாத்திய இசையை மெச்சும்வண்ணமாக அப்படி ஆரவாரம் செய்தார்கள் என்பது அவருக்குப் புரியவில்லை!

அவர் முன்னணியில் இருந்த பாடகர். ஆனால், எல்லோருடைய கவனமும், `அவர் முகத்தில் எத்தனை கோபம், பாரேன்!’ என்று அவர் முகத்தில்தான் இருந்தது. இசையில் நிலைக்கவில்லை.

மனிதன் தீவா?

தீவுதான் தனியாக இருக்கும். எப்போதாவது, எதற்காகவாவது நாம் பிறரை நாடாமல் இருக்கிறோமா?

`இவரால் நம் காரியம் ஆகவேண்டும்,’ என்ற முன்யோசனையில்லாது பிறருடன் பழகுவதுகூட நன்மையைத்தான் விளைவிக்கும்.

அண்மையில் ஒரு கலைநிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். ஆங்கில இசையுடன் கூடிய `கோரஸ்’, குழுவாக வயலின், பியானோ, பரதநாட்டியம் என்று சகலமும் இருந்தன. அக்கலைஞர்களை ஒருங்கிணைத்தது இசை, வறுமை.

வசதி குறைந்த இளைஞர்கள் பல ஆசிய நாடுகளிலிருந்து வந்திருந்தனர். அவர்களுக்குப் போதிப்பவர்கள் பணம் சம்பாதிப்பதைப் பெரிதாகக் கருதாது, தாம் கற்றுத் தேர்ந்த கலைகளைப் பரப்புவதன்மூலம் சமூக சேவை செய்பவர்கள்.

நிகழ்ச்சி ஏற்பாட்டார்களுடைய குழந்தைகள் வசதி நிறைந்தவர்கள் ஆனாலும், தம்மைப்போல் இல்லாதவர்களுடன் கலந்து பழகி, அதனால் நன்மை பெற்றவர்கள். இவர்களுக்கு இயல்பான தாராள மனப்பான்மை வசதியற்றவர்களுக்கும் பழகிப்போக, அவர்களும் பிறருக்கு உதவி செய்வதிலும், தமக்குத் தெரிந்தவற்றைப் பகிர்ந்துகொள்வதிலும் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோடீஸ்வரரின் புதல்வியான ஒரு சீனப்பெண் புடவையும் பொட்டும் அணிந்து, அறிவிப்புகள் செய்தாள். அவளுக்குப் புடவை அணிவித்தது வசதியற்ற தமிழ்ப்பெண். ஆனால், கலைகளில் சிறந்தவள். பரோபகாரத்தால் இருவருக்குமிடையே நல்லுறவு ஏற்பட்டது.

செல்வச்செழிப்பு ஒருத்தியை கர்வியாகவும் ஆக்கவில்லை, `அப்படி நாமும் இல்லையே!’ என்ற ஏக்கமோ, பொறாமையோ இன்னொருத்திக்கு எழவுமில்லை. கலையிலிருந்த ஆர்வத்தால் இருவரும் ஒன்றாகிப்போனார்கள்.

கலை பேதங்களை விலக்கும் என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்!

சுயநலத்தையே பெரிதாகக் கருதி ஈடுபட்டால், நாமும் வளரமாட்டோம், நம் கலையும் வளராது.

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *