-முனைவர் .வே.மணிகண்டன்

தமிழ்க்கவிதை இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட  வரலாற்றினை  உடையது.  காலந்தோறும் சமூகம், பொருளாதாரம்,  அரசியல் ஆகியவற்றில்  ஏற்படும் மாற்றங்களால் கவிதை இலக்கியமானது புதுப்புது வடிவங்களையும் பொருண்மைகளையும் தன்னகத்தே பெற்றுவந்துள்ளது. தொன்மையான  தமிழ் இலக்கியக் கவிதைகள் யாப்பிலக்கணங்களைப் பின்பற்றி படைக்கப்பட்டன. ஆங்கிலேயர்களின் வருகையினால் இந்தியாவில் கல்வி முறையில் மாபெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. ஆகையினால், மேனாட்டு இலக்கிய வடிவங்கள் பல இந்திய மொழிகளில் தோற்றம் பெற்றன. அவற்றில், புதுக்கவிதை வடிவமும் ஒன்றாகும். ’வால்ட் விட்மன்’ எனும் மேனாட்டுக் கவியின் புதுக்கவிதைப் படைப்பான ’புல்லின் இதழ்கள்’ எனும் கவிதைத்தொகுப்பின் மீது கொண்ட ஈடுபாட்டினால், பாரதியார் வசன கவிதைகளைப் படைக்கத் தொடங்கினார். பாரதியாரின் வசன கவிதை முயற்சிகள்  தமிழில் புதுக்கவிதையின் தோற்றத்திற்கு வித்திட்டன. புதுக்கவிதை இலக்கியம் தமிழில் மாபெரும் வளர்ச்சி நிலையை அடைந்தது. சப்பான் நாட்டுக் கவிதையான ஹைக்கூவை  பாரதியார் தமிழில் அறிமுகப்படுத்தினார். சென் தத்துவம், இயற்கை சார்ந்த பாடுபொருள் ஆகியவற்றைப் பொருண்மையாகவும் மூன்றடிகளை அடிவரையறையாகவும் கொண்ட ஹைக்கூ கவிதைகள் தமிழில் மாபெரும் செல்வாக்கினைப் பெற்றன.

சப்பானின் பிற கவிதை வடிவங்களான லிமரைக்கூ, சென்ரியு, ஹைபுன் ஆகிய கவிதை இலக்கியங்களும் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டு வளர்ச்சி நிலையை அடைந்து வருகின்றன. இவற்றில், சென்ரியு கவிதைகள் ஹைக்கூ கவிதைகளுக்கு அடுத்து தமிழில் மிகுந்த செல்வாக்கினை பெற்றுத் திகழ்கின்றன. சென்ரியு கவிதைகள் ஹைக்கூ கவிதைகளைப் போன்று மூன்றடி வடிவத்தை பெற்றுத்திகழ்ந்தாலும், பொருண்மை அடிப்படையில் வேறுபடுகின்றன. ஏனெனில், சென்ரியு  கவிதைகள் மானுடத்தைப் பற்றி பாடுகின்றன. சென்ரியு கவிதைகள் தமிழில் வளர்ச்சிநிலையை அடைந்து வரும் நவீன கவிதை இலக்கிய வடிவமாகும். எனவே, சென்ரியு கவிதைகளின் தனித்தன்மைகளை ஆராய்ந்து அறியும் அடிப்படையில் இக்கட்டுரை அமைகின்றது.

மனித நடத்தைகளை  நகைதோன்ற வெளிப்படுத்துவது சென்ரியு. இக்கவிதை வடிவம் தமிழில் ’நகைப்பா’ எனும் பெயரில் வழங்கப் பெறுகின்றது. சென்ரியு கவிதைகள் மனித வாழ்வை அங்கதப் படுத்துவதுடன் மானுடப் புலனுணர்வையும் மிகுதியாக சார்ந்திருக்கின்றன. சென்ரியு கவிதைகள் பொருண்மை நிலையில் அறிவுரை, பொதுத்தன்மை, முரண், பொன்மொழி, அங்கதம், வேடிக்கை, விடுகதை, நகைச்சுவை  ஆகிய பல நிலைகளில் விரிந்து வெளிப்படுகின்றன.

அறிவுரை வழங்கும் தன்மை

நன்மை பயக்கும் என்ற நோக்கத்தில் வழங்கப்படும் புத்திமதி, கருத்து, ஆலோசனை ஆகியவை அறிவுரை என வரையறுக்கப்படுகின்றது. அறிவுரை கூறும் பாங்கு படைப்பிலக்கியப் பொருண்மைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்கிறது. இப்பொருண்மையானது தமிழ்க் கவிதை இலக்கியங்களில் விரவிக்காணப்படுகின்றது. அத்தன்மையானது, சென்ரியு என்கின்ற நகைப்பா கவிதைகளிலும் குறிப்பிடத்தக்க அளவில் பதிவுசெய்யப்படுகின்றது. இத்தகைய கவிதைகளில் கவித்துவம் மிகக்குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன.

ஏழ்மையும் வறுமையும் மிகுந்த இந்தியத் திருநாட்டில், மக்கள்தொகை பன்மடங்கு மிகுந்துள்ள நிலையில் குடும்பக்கட்டுப்பாட்டின் அவசியத்தை அறிவுரையாக வலியுறுத்தும் வே.மணிகண்டனின் இக்கவிதை,

கடமை கண்ணியம் கட்டுப்பாடு
தெரிந்தவனுக்கோ
தெரியவில்லை
குடும்பகட்டுப்பாடு”

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு தெரிந்தால் மட்டும் போதாது. நூறு கோடிக்கு மேல் மக்கள் தொகை மிகுந்துள்ள இத்திருநாட்டில் மக்கள் தொகை பெருகாமல் இருக்க குடும்பக்கட்டுப்பாட்டினை அறிந்திருக்க வேண்டும் என மென்மையான நகையுடன் அறிவுறுத்துகிறது.

பொதுத்தன்மை உடையன

சென்ரியு கவிதைகள் தமிழ் நாட்டில் தற்காலத்தில் பெரும்பான்மையான கவிஞர்களால் படைக்கப்பட்டுவருகின்றன. சென்ரியு கவிதைகளின் தனித்தன்மைகளில் ஒன்றான பொதுத்தன்மை உடையதாகத்தான் பெரும்பான்மையான சென்ரியு கவிதைகள் படைக்கப்படுகின்றன.

சென்ரியு கவிதைகளில் பொதுத்தன்மையை உள்ளடக்கத் தனித்தன்மையாகக் கொண்ட கவிதைகள் பெரும்பாலும்  வார்த்தைகளை வைத்து விளையாடும் வார்த்தை விளையாட்டுகள் போலவே படைக்கப்படுக்கின்றன. எடுத்துக்காட்டாக,

பட்டாம்பூச்சி
பிடிக்கும்
சிறுவன் பாட்டிலும்
பட்டாம்
பூச்சி”

இக்கவிதை கவித்துவத்தையும் கருத்துச்செறிவையும் மிகவும் குறைந்த அளவே  பெற்றுள்ளது. மேலும், வார்த்தைகளால் மட்டுமே இக்கவிதை கட்டமைக்கப்பட்டுள்ளது. எனினும், பொதுத்தன்மை எனும் பொருண்மை அடிப்படையில் இச்சென்ரியு கவிதை சிறப்புத்தன்மை வாய்ந்ததாகத் திகழ்கின்றது.

முரண்

ஒன்றுக்கு ஒன்று எதிரானவைகளைக் கொண்டு அமைப்பது முரண் என்னும் உத்தியாகும். மரபுக் கவிதைகளில் முரண்தொடை எனக் கூறப்படும். மாறுபட்ட இரு பொருள்களை அடுத்தடுத்து இணைத்துப் பார்ப்பதில் புதுத்தன்மையுடன் கவித்துவம் கூடும். முரணானது சென்ரியு கவிதைகளில் மூன்று வகையாக பயின்று வருகின்றன. அவை,

  1. சொல் முரண்: முரண்பாடான சொற்களின் இணையடுக்கைச் சொல் முரண் என்பர்
  2. பொருள் முரண்: கவிதையில் சொல்லளவில் மட்டுமல்லாது கருத்தளவில் மாறுபட்டிருப்பது பொருள்முரண் எனப்படும்.
  3. நிகழ்ச்சி முரண்: கவிதையில் இருவேறு கூறான நிகழ்ச்சிகளை விவரிப்பது நிகழ்ச்சி முரண் தோன்றுகிறது, முன்னுக்குப்பின் மாறுபட்ட செயல்கள் நிகழ்ச்சி முரணாக அமைகின்றன.

சென்ரியு கவிதைகளில் முரணைத் தனித்தன்மையாகக் கொண்டு படைக் கப்படும் கவிதைகள் கவித்துவம், நகைப்புத்தன்மை ஆகிய கூறுகளை உள்ளடக்கமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் முரண்களால் அமைக்கப்படும் கவிதைகள் கருத்துக்கு முன்னுரிமை தருவதில்லை நகைப்புத்தன்மைக்கே முக்கியத்துவம் தருகின்றன.

மாமதயானையின் கடவுளின் கடைசிக் கவிதை தொகுப்பில் உள்ள நிகழ்ச்சி முரண் கவிதைகள்,

ஆசிரியர் பாடத்தில் அசோகன்
மாணவனின்
மனதில்
மரம்
வெட்டும் தந்தை”

இக்கவிதையானது இரு மாறுபட்ட செயல்களை விவரிக்கின்றது. ஆசிரியர் பாடத்தில் வரும் அசோகச் சக்கரவர்த்தி தம்முடைய நாட்டில் மரங்களை வளர்த்தவர். ஆனால், மாணவனின் மனதில் வரும் அவனுடைய தந்தை மரங்களை வெட்டுபவர். எனினும், இரு வேறுபட்ட பாத்திரங்களை உள்ளடக்கமாக கொண்டு முரணாக இக்கவிதை படைக்கப்பட்டுள்ளது. இக்கவிதையில் காருமி என்கின்ற மெல்லிய நகையுணர்வும் பிறக்கிறது.

பொன்மொழிப் போன்றவை

சான்றோர்களின் அறிவுரைகளில் முத்தாய்ப்பாய் விளங்கக்கூடிய வார்த்தைகளே பொன்மொழிகள் என்கின்றோம். பொன்மொழிகள் மனிதனின் மனத்தில் பெறும் மாற்றத்தையும் புதுஉத்வேகத்தினையும் ஏற்படுத்துபவை. சென்ரியு கவிதைகளில் பொன்மொழி போன்ற உள்ளடக்கங்களில் மிகவும் குறைந்த அளவே கவிதைகள் படைக்கப்படுகின்றன.

பணம் பத்தும் செய்யும் என்னும் பொன்மொழியினை மீட்டுருவாக்கம் செய்து ஈரோடு தமிழன்பன் படைத்துள்ள சென்ரியு,

பணம்
எதையும்
செய்யும் தெரிந்தவர்கள்
பணம்
செய்தார்கள்”

இக்கவிதையானது பணம் எதையும் செய்யும் எனத் தெரிந்தவர்கள் பணத்தை செய்வதாகக் கவிஞர் கவிநயத்துடன் நகைப்புத்தன்மைமிக்க கவிதை படைத்துள்ளார்.

அங்கதத்தன்மை உடையன

அங்கதம் என்பது பிறருடைய குறைகளைச் சுட்டிக்காட்டித் திருத்தும் நோக்கமுடையது. அங்கதம் தமிழ்க் கவிதை மரபில் புதிதல்ல. தொல்காப்பியக் காலம் முதலே இருந்து வருகின்றது. அங்கதம் பிறருடைய தவறுகளை எள்ளி நகையாடும் தன்மையுடையது.

அங்கதத்தன்மையுடன் படைக்கப்படும் சென்ரியுக்களில் மனிதச் சமுதாயத்தில் நிலவுகின்ற சாதி, மதம், இனம், பொருளாதாரம் சார்ந்த ஏற்றத்தாழ்வுகளையும் அதனால் ஏற்படும் சிக்கல்களையும் வெளிப்படையாகப் பதிவுசெய்கின்றன. மாமதயானையின் கடவுளின் கடைசிக் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள இத்தகைய தன்மையை உடைய கவிதைகள்,

ஆதிக்க வர்க்கத்தின்
ஆட்டத்தை
அடக்கவே
அதிர்கிறது
பறை”

வெட்டியான் மரணம்
திடீர்
குழப்பம்
எரிப்பதா?
புதைப்பதா?”85

இக்கவிதைகளில் பெரும்பாலும் யுகாச்சி என்கின்ற சொல்ல வந்த செய்தியை நேரடியாக வெளிப்படையாக சொல்லும் தன்மையுடையன. மேலும், இக்கவிதைகளில் எள்ளல், நையாண்டி செய்யும் பண்புகள் மிகுதியாக இருக்க காண்கின்றோம். கவித்துவமும் கருத்தாழமும் பெற்ற இக்கவிதைகள் சமுதாயத்தில் நிலவுகின்ற ஏற்றத்தாழ்வுகளையும், அரசியல்வாதிகள் தலித்துகளை ஓட்டு வங்கியாக மட்டுமே பயன்படுத்தும் நிலையினையும் வெளிப்படையாக எடுத்துரைக்கின்றன.

விடுகதைத்தன்மை

ஒரு பொருளை மறை பொருளாக (நேரடியாக விவரிக்காமல்) விவரித்து தொடுக்கப்படும் ஒரு புதிரே விடுகதை ஆகும். இதைப்  பழந்தமிழில் ’பிசி’ என்றும் கூறலாம். விடுகதையைப் பொதுமக்கள் இலக்கிய வடிவமாகவும் வாய்மொழி இலக்கியமாகவும் சிலர் அடையாளப்படுத்துவர்.

விடுகதைத் தன்மையுடையதாக சென்ரியு கவிதைகள் தமிழில் மிகவும் குறைந்த அளவிலேயே படைக்கப்படுகின்றன. எனினும், சென்ரியு கவிதைகள் மூன்றடிகளை மட்டுமே பெற்றுள்ளதால் பெரும்பாலான கவிதைகள் விடுகதை அமைப்பை பெற்றுள்ளதாக தோன்றும். விடுகதை அமைப்புடைய சென்ரியுக்கள் பெரும்பாலும் வினா விடை அமைப்பில் படைக்கப்பட்டிருக்கும். இத்தகைய கவிதைகளில் காருமி என்கின்ற மென்மையான நகைச்சுவையும் சமுதாயக் கருத்தும் மிகுந்து காணப்பெறும்.

ஈரோடு தமிழன்பனின் விடுகதைத் தன்மையுடைய நகைப்பாக்கள்,

எறியப்பட்ட
கல்மனத்தில்
கலவரம்
எது
காயப்படுமோ?

இக்கவிதையானது வெளிப்படையாக விடுகதைத்தன்மையுடையதாகத் தம்மை நிலைநிறுத்துகின்றது. இக்கவிதையில் நகைப்புத்தன்மை இல்லையெனினும் கருத்துச்செறிவும் கவித்துவமும் கவிதையினைச் சிறக்கச் செய்துள்ளன.

வேடிக்கைத்தன்மை

சென்ரியு கவிதைகளின் தனித்தன்மைகளில் வேடிக்கை  இன்றியமையாத ஒன்றாகும். தமிழில் கவிஞர்கள் வேடிக்கையான சம்பவங்களை சென்ரியு கவிதைகளின் பாடுபொருளாக நகைஉணர்வும் கவித்துவமும் மிளிரப் படைக்கின்றனர். இக்கவிதைகள் முரண்களால் உருவாக்கப்பட்டாலும் வேடிக்கையே முதன்மையான இடத்தினைப் பெறுகின்றது. இத்தனித்தன்மையில் அமைந்த கவிதைகளில் பெரும்பான்மையாக எவ்விதப் பொருளழமும் இன்றி கவிதைகள் படைக்கப்பட்டிருக்கும்.

பதவி ஆசையில்  திரியும் மனிதர்களுக்கு உலக நிலையாமையின் தத்துவத்தினை நகைச்சுவையுடன் வேடிக்கையாகச் சொல்லும் சென்ரியு,

எப்பதவியும்
கிடைக்காதவருக்குக்
கிடைத்தது
சிவலோகப் பதவி”

இக்கவிதையில் சிவலோகப் பதவி என்னும் வார்த்தையைப் பயன்படுத்திய விதம்  இக்கவிதையினை நகைப்பண்பும் வேடிக்கைத் தன்மையையும் அதி சிறப்பாக அமைய காரணமாக திகழ்கின்றது.

நகைச்சுவைத்தன்மை

சென்ரியு தமிழில் நகைப்பா என்னும் பெயரில் வழங்கப்படுகின்றது. சென்ரியு கவிதைகளின் முதன்மையான தனித்தன்மை நகைச்சுவை உணர்வு ஆகும். தமிழில் பெரும்பான்மையான சென்ரியு கவிதைகள் நகைச்சுவை உணர்விற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக படைக்கப்படுகின்றன.

ஈரோடு தமிழன்பனின் ஒருவண்டி சென்ரியு எனும் கவிதை நூலில் இடம்பெற்றுள்ள,

சண்டைக் கோழி
வென்றாலும்
தோற்றாலும்
பிரியாணி”

எனும் இக்கவிதையானது யுகாச்சி என்கின்ற உண்மையை வெளிப்படை யாகக் கூறும் தன்மையுடையதாகப் படைக்கப்பட்டுள்ளது. கருத்துச்செறிவை விட நகைச்சுவை உணர்விற்கே முக்கியத்துவம் அளிப்பதாக திகழ்கின்றது.

சென்ரியு கவிதைகள் மனித வாழ்வை அங்கதப்படுத்துவதுடன் மானுடப் புலனுணர்வையும் மிகுதியாகச் சார்ந்திருக்கின்றன. சென்ரியு கவிதைகள் பொருண்மை நிலைசார்ந்த தனித்தன்மைகளில் அறிவுரை, பொதுத்தன்மை, முரண், பொன்மொழி, அங்கதம், வேடிக்கை, விடுகதை, நகைச்சுவை ஆகிய பல நிலைகளில் விரிந்து வெளிப்படுகின்றன.

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *