குறளின் கதிர்களாய்…(188)
–செண்பக ஜெகதீசன்…
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
-திருக்குறள் -127(அடக்கமுடைமை)
புதுக் கவிதையில்…
ஐம்பொறி யதனில்
மனிதன்
எதைக் கட்டுப்படுத்தவில்லையெனிலும்,
எதையும் பேசும்
நாக்கைக் கட்டுப்படுத்தவேண்டும்..
இல்லையெனில்,
சொற்குற்றம் ஏற்பட்டு
துன்பம்தான்
தொடர்ந்து வரும்…!
குறும்பாவில்…
எதைக் கட்டுப்படுத்தவில்லையெனிலும், ஐம்பொறிகளில்
நாவை மட்டுமாவது கட்டுப்படுத்தவில்லையெனில்,
துன்பம்தான் வரும் சொற்குற்றத்தினால்…!
மரபுக் கவிதையில்…
மனிதன் தனது புலன்களிலே
மற்றதைக் காட்டிலும் நாவைமட்டும்
தனியே அடக்கி வாழ்ந்தால்தான்
தரணி வாழ்வில் நிலைபெறலாம்,
இனிதாய் இதனைக் கொள்ளாதே
எதையும் பேசிட நாவைவிட்டால்,
கனிவது வாழ்வில் இடரேதான்
காண்நீ சொல்லின் தவறாலே…!
லிமரைக்கூ..
ஐம்புலன்களில் அடக்கிவாழ் நாவை,
அடக்கிடாமல் அதன்போக்கில் பேசவிட்டால்
அதுகொணரும் வாழ்வினில் நோவை…!
கிராமிய பாணியில்…
அடக்கிவாழு அடக்கிவாழு
நாக்கத்தான் அடக்கிவாழு,
எதயடக்க முடியல்லண்ணாலும்
நாக்கமட்டும் அடக்கிவாழு..
நாக்கயடக்கி வாழல்லண்ணா
நட்டந்தான் வாழ்க்கயில,
சொல்லுஞ்சொல்லு பழுதாலே
சேந்துவரும் தும்பமெல்லாம்..
அதால,
அடக்கிவாழு அடக்கிவாழு
நாக்கத்தான் அடக்கிவாழு,
எதயடக்க முடியல்லண்ணாலும்
நாக்கமட்டும் அடக்கிவாழு…!