ஆய்வுக் கட்டுரைகள்இலக்கியம்கட்டுரைகள்

சிலப்பதிகாரத்தில் தெய்வ ஆக்கமும் பொருள் பங்கீடும்

-முனைவர் ரா. மூர்த்தி 

சிலப்பதிகாரம் தமிழின் முதல் காப்பியம்; ஒரு முதன்மைக் காப்பியம்; முத்தமிழ்க் காப்பியம்; மூவேந்தர்களின் வரலாற்றை எடுத்தியம்பும் காப்பியம்; நெஞ்சையள்ளும் காப்பியம்; இலக்கிய உன்னதம் நிரம்பிய காப்பியம்; கி.பி. இரண்டாம் நூற்றாண்டையொட்டி எழுந்த காப்பியம் என்றெல்லாம் புகழப்படுகிறது.

காப்பியத் தன்மையோடு கதைகளாகச் சொல்லப்பட்ட இப்பனுவல் முழுக்க முழுக்க இனவரைவியல் தன்மையில் கோவலன் கண்ணகி ஆகியோர்களின் வாழ்வின் குடிச்சிறப்பினை எடுத்துரைக்கிறது. இதில்  “தமிழர்களின் தொல்குடி முதல் முன்னேறிய வணிகச் சமூகம் வரையிலான பன்முகப்பட்ட சமூகப் பண்பாட்டு முறைகள், வாழ்வியல் நெறிகள், இசைக்கூத்து மரபுகள், பன்மைச் சமய மரபுகள் அவற்றின் விழாக்கள், வழிபாட்டு முறைகள், கலைகள், அரசுமுறை,  நீதிநிர்வாகம்,  பெண்களின் சமுதாய நிலை,  வரலாறு1 ” எனப் பல விரிந்து பட்ட வாழ்வியல் முறைகளையெல்லாம் எடுத்தியம்புகிறது.

சிலப்பதிகாரம் அடிப்படையில் மீவியல் தன்மை கொண்ட காப்பியம்.  இதன் நிகழ்வுகள் யாவும் அவை நிகழ்ந்தேறிய காலம், இடம் இவை இரண்டையும் கடந்து பிரதிபலித்து வருகிறது. கண்ணகி வேங்கை மரத்தின் அடியில் நின்று தன்னுடைய கணவனான கோவலனை அடைந்த கோலம்,  அக்காட்சினைக் கண்ட குறவர்கள் அப்பெண்ணைத் தெய்வமாக உருவகித்துக்கொண்டு தெய்வநிலைக்கு உயர்த்தியது. ஆகிய அனைத்தும் மீவியல் தன்மையில் வெளிப்பட்டு நிற்கின்றன.

ஒரு முதன்மையான இனவரைவியல் விளக்கத்தை முன்வைக்க மீவியல்பு தன்மைகள் அதன் உன்னதத்திற்குக் காரணமாக அமைகிறது. இங்கு ‘மீவியல்பு’ என்பதை அசாதாரணமானது என்ற பொருளில் கொள்ளுதல் இல்லாமல் அனைத்தையும் உள்ளடக்கியது என்ற கருத்துருவாக்கத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது2” ஏனென்றால் குறவர்களின் கண்முன்னே கண்ணகி வானுலகம் அடைந்த காட்சி உயிருடன் இருந்த ஒரு பெண் தெய்வநிலையை அடையும் தன்மையை வெளிக்காட்டுகிறது. மீவியல்பு என்பது இயல்பு நிலையிலிருந்து மாறி வேறொரு புதிய உலகத்தில் தோன்றச் செய்வது. அச்சூழலில் உடலின் தோற்றத்தில், குரலின் வெளிப்பாட்டில், உடல் அசைவுகளில் தங்களை வெளிப்படுத்திக் காட்டுவதற்கு அடையாளப்படுத்துவதற்கு மீவியல்பு தன்மை உறுதுணை புரிகிறது. கண்ணகியின் தோற்ற வெளிப்பாடும் இவ்வாறே இருந்தன. இதனை,

மலைவேங்கை நறுநிழலின்
வள்ளி போல்வீர் மனம் நடுங்க
முலை இழந்து வந்து நின்றீர்
மண மதுரையோடு அரசுகேடுற வல்வினை வந்து வருத்த காலைக்
கணவனை அங்கு இழந்து போந்த கடுவினையேன் யான் என்றாள்
என்றலும் இறைஞ்சி அஞ்சி இணைவளைக்கை எதிர்கூப்பி
நின்ற எல்லையுள் வானவரும் நெடுமாரி மலர்பொழிந்து
குன்றவரும் கண்டு நிற்பக் கொழுநனொடு கொண்டு போயினார் 3

என்ற பாடல் வரிகள் இதனைச் சுட்டுகிறது. இப்பாடலின் மீவியல்பு வெளிப்பாடு இயல்பு நிலையிலிருந்து ‘மனம் நடுங்க’ கண்ணகி கோபமுற்று உயிருடன் தனது கணவனான கோவலனுடன் வானுலக்கத்திற்குச் சென்று தெய்வநிலை அடைந்ததை வெளிக்காட்டுகிறது.

                கண்ணகி தெய்வநிலை அடைவதற்கு முன்பு அவளின் உடல் தோற்றம் மனஒழுங்கமைவு மாறி மாறியே தென்பட்டன. கணவனைக் காணப்பெறாத துன்பத்தில் உள்ளம் கொதித்து, உலைக்களத்துத் துருத்திபோலச் சுடுமூச்சு விட்டாள். வீதிகளில் சுழன்று திரிந்தாள். குறுந்தெருக்களில் கவலையுடன் நின்றாள். அங்குமிங்குமாக எவ்வித நோக்கமுமின்றி நடந்தாள். மயங்கி நின்றாள் இவை மீவியல் நிலைக்கு மாறுவதற்கான தொடக்கமாகும். இதனை,

                காதலன் கெடுத்த நோயோடு உளம் கனன்று
                 ஊதுஉலைக் குருகின் உயிர்த்தனள் உயிர்த்து
                 மறுகுஇடை மறுகும் கவலையிற் கவலும்
                 இயங்கலும் இயங்கும் மயங்கலும் மயங்கும்
                 ஆர் அஞர் உற்ற வீரபத் தினி”4

என்று சுட்டுகிறது. தெய்வநிலை குறித்து மானிடவியலாளர்கள் கூறும்போது ஷாமானிசத்தின் மூலம் நிகழும் தெய்வமுறுதலை பிரெஞ்சு மானிடவியலர் லூயிதூய்மோன் (அதீத உணர்வு சார்ந்த பக்தி) என்கிறார். இந்து சயத்தில் காணப்படும் இவ்வாறான கூறுகளை மிக விரிவாக ஆராய்ந்த மேலை நாட்டு வல்லுநர்கள் அருள்நிலையடைந்து ஆடுவதில் இரண்டு வகையுண்டு என்கின்றனர். முதல்வகை: ‘தெய்வமுற்று ஆடுதல்’ அல்லது ‘சாமியாட்டம்’ ஆகும்.  இரண்டாம் வகை: ‘ஆவியேறி ஆடுதல்’ அல்லது ‘பேயாட்டம்’ ஆகும்.”5 கண்ணகியின் தெய்வநிலை  முதல்வகை நிலையில் தெய்வமாக மாறி விண்ணுலகை அடைதலாகும். மனித நிலையிலிருந்து தெய்மாக வணக்கப்பட்ட பெண்ணையே பின்பு கடவுளாக வழிபடத் தொடங்கினர். காலம் கடந்தும் இவை தொடர்ந்து பண்பாட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

 தொல்குடியினரின் தெய்வ ஆக்கம்

                குறவர்கள் தமிழகத்தின் பூர்வ குடிகளாவர். தொடக்க காலத்தில் இயற்கையைத் தெய்வமாக வழிபட்ட மக்கள் தமது கண்முன்னே ஒரு பெண் ஏழு நாட்கள் தனித்து கணவன் இறந்த துன்பச் செய்கையை எண்ணி மனமுற்று பின்பு கணவனோடு சேர்ந்த காட்சியைக் கண்ட குறவர்கள் இயற்கை வழிபாட்டை, விலங்கு வழிபாட்டை,  முருக வாழிபாட்டை,   காற்று வழிபாட்டைக் கடந்து ஒரு பெண்ணை தெய்வமாக ஏற்று வணங்கி வழிபடும் முறையை அறிமுகம் செய்து வைக்கின்றனர். இவை இனம் சார்ந்த ஒரு சமூக மரபிற்குள் இருப்பினும் உயிரோடு இருக்கும் பெண்ணைத் தெய்வ நிலைக்கு மாற்றி வழிபடும் கருத்தாக்கத்தை வழிபாடாகக் கொணர்ந்தவர்கள் தொல்குடியான குறவர்களாவர். இதனை பின்வரும் பாடல் உறுதி செய்கிறது.

சிறுகுடியீரே! சிறுகுடி யீரே!
தெய்வம் கொள்ளுமின் சிறுகுடியீரே!
நிறம்கிளர் அருவிப் பறம்பின் தாழ்வரை
நறுஞ்சினை வேங்கை நல்நிழல் கீழ்ஓர்
தெய்வம் கொள்ளுமின் சிறுகுடி யீரே!
தொண்டகம் தொடுமின் சிறுபறை தொடுமின்
கோடுவாய் வைம்மின் கொடுமணி இயக்குமின்
குறிஞ்சி பாடுமின் நறும்புகை எடுமின்
பூப்பலி செய்ம்மின் காப்புக்கடை நிறுமின்
பரவலும் பரவுமின் விரவுமலர் தூவுமின்
ஒருமுலை இழந்த நங்கைக்குப்
பெருமலை துஞ்சாது வளம் சுரக்க”6

என்று கூறுகிறது. பாடலின் பொருள் பின்வருமாறு கூறுகிறது.

                வேட்டுவக் குடியில் உள்ள மக்கள் இக்கற்புடையாளை நம் தெய்வமாக ஏற்றுக் கொள்ளுங்கள். இப்பெண் வெண்மையானதும் மனத்தைக் கிளர்ச்சியுறச் செய்கின்ற அருவி  வீழும் இந்நெடிய குன்றின் அடிவாரத்தில்,  நறுமணங்கமழும் மலர்களையுடைய வேங்கை மர நிழலில் துயருடன் வந்து,  நின்ற இப்பெண்ணை ஒப்பற்ற தெய்வமாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்று வேட்டுவ குலத்தின் குடித்தலைவர்களால் முன்மொழியப்படுகிறது. அவை ஏற்றுக் கொள்ளப்பட்டு அத்தெய்வத்திற்கு வேட்டுவர்கள் குறிஞ்சிப் பறையினைக் கொட்டுங்கள். சிறுபறையை முழங்குங்கள்,  கடமாக் கொம்புகளை வாயில் வைத்து ஊதுங்கள். ஓசைமிக்க மணிகளை ஒலிக்கச் செய்யுங்கள். குறிஞ்சிப்பண்ணைப் பாடுங்கள். மணமிக்க அகிற்புகையினை ஏந்துங்கள். மலரினைக்கொண்டு அருச்சனை செய்யுங்கள் என்று அறிவுறுத்தப்படுகின்றது. அத்தோடு அத்தெய்வத்திற்குக் கோவில் அமைத்துச் சுற்றும் மதில் எழுப்பி அதன் புகழைப் புகழ்ந்துபாடி பரவச் செய்யுங்கள். மலர்தூவி வழிபாடு செய்யவும் செய்யுங்கள் என்று வேட்டுவக் குடிக்குக் குலத்தலைவர்கள் வாயிலாகச் சொல்லப்படுகிறது. மேலும் இப்பெருமலை நாடு என்றும் வற்றாது வளஞ்சுரக்க வேண்டுமென்று அருள் புரிக என்று வேண்டிக் கொள்ளவும் செய்யுங்கள் என்று சொல்லப்படுகிறது.

                இப்பாடலின் வாயிலாக பார்க்கும்போது,  வேட்டுவர்கள் பெண் தெய்வத்தை உருவாக்கியவர்கள். வழிபாட்டில் இசைக்கருவிகள்,  வழிபாடு செய்யும்முறை,  கோவில் கட்டிடங்கள் கட்டுதல் முதலிய தேவை சார்ந்த கொள்கைகளையும் உருவாக்குகின்றனர். இங்கு வேட்டுவர்களின் தேவை ‘பெருமலை நாடு’வளம் சுரக்க வேண்டும் என்ற முடிவேயாகும். பெருமலைநாடு வளம் சுரக்காமலும் சிலகாலங்களில்  பாலையாக வறட்சியுற்று காணப்பட்டுள்ளது. நிலம் வறட்சியுற்றுப் பாலையாக இருந்ததிற்கான தொடக்கச் சான்று சிலப்பதிகாரத்திலே கிடைக்கிறது. அத்தகைய சூழலில் இருந்து மாறி வளமையோடு இருக்க வேண்டும். திங்கள் மும்மாரி மழைபொழிய வேண்டும் என்ற கருத்தமைவு வேட்டுவர்களிடம் இருந்துள்ளது. “மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்7 சிலப்பதிகாரத்தில் தொடக்கத்திலே மழையைப் போற்றும் மரபு அரசர்களிடத்தில்,  மக்களிடத்தில் இருந்துள்ளது.

அதனால் தனது கண்முன் நிகழ்ந்த கண்ணகியின் கோலத்தையும் அவள் கணவனோடு தெய்வக்கோலம் அடைந்த காட்சியை வேட்டுவர்கள் பார்த்ததால் கண்ணகியைத் தெய்வமாக வழிபடத் தொடங்குகின்றனர். இக்காட்சியால் தங்களது பெருமலை நாடும் வளம் பெற்றுச் சிறக்கும் என்ற எண்ணப் போக்கும் மக்களிடத்தில் உருவாகத் தொடங்குகிறது. அதனால் இச்செயலை முன்னெடுத்துச் செய்கின்றனர். பெண் வழிபாட்டைக் கையிலெடுத்துக் கொண்ட வேட்டுவர்களைப் போன்று வேந்தர்களுக்குக் காணிக்கைப் பொருட்களை வழங்கி வாழ்த்தும் மரபையும் முதலில் தொடங்கி வைத்தவர்கள் தொல்குடியினரான குறவர்களாவர்.

பொருள் பங்கீடு செய்தல்

                தொல்குடியினரின் இனக்குழு வாழ்க்கை ஒரு கூட்டத்திற்குள்ளே ஒரு குழுவுக்குள்ளே அகமணத் தன்மையில் இணைந்து பயணிப்பது ஆகும். இதில் உணவுப் பரிமாற்றம், கரணமுறை (திருமணமுறை), பொருள் பங்கீடு, தொழில்சார்ந்த செயல்பாடு அனைத்தும் ஒரு குழுவுக்குள்ளே நிகழும். வேற்றுப் பண்பாட்டு நிலை, புறமணம் கடைபிடிக்கப்படுவதில்லை. இந்நிலை தொல்குடி மாந்தர்களிடம் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டது.

                அகமணத் தன்மை பெரும்பாலும் சடங்கு வயமான வளமைச்சடங்கு, இறப்புச் சடங்கு,  கடவுள் வழிபாட்டுச்சடங்கு, திருமணச்சடங்கு இவைகளிலே அதிகம் கடைப்பிடிக்கப்பட்டன. இதில் பிற குழுமரபைப் பேணுவதில்லை. பொருட்களும் நிலவயத்தில் கிடைத்ததையே (தினை, நெல், வாசனைப்பொருட்கள்) பங்கிட்டுக் கொண்டனர். சடங்கு வயத்தில் ஊர் சார்பாக ஒருவர் முன்னிறுத்தப்பட்டு  இச்செயல்களைச் செய்வர்;. அவரே பாதுகாவலனாகவும்,  குழுத்தலைவனாகவும் அங்கீகரிக்கப்பட்டான்.

                இந்நிலை அரசுருவாக்கம் நிகழ்ந்த பின்பு மாற்றத்தைச் சந்தித்துள்ளது. தொல்குடிகளும் அரசின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு வாழும் முறைமைக்கு மாற்றப்பட்டுள்ளனர். பண்பாடு சார்ந்த வாழ்க்கைமுறை, வழிபாடு, உணவுமுறை, குலமரபு அனைத்தும் மரபு வயத்தளத்தில் இருக்கலாம். ஆனால் வேந்தர்களின் உணவு,  உடல்சார்ந்த தேவைகள்,  மருத்துவக் குணமுள்ள பொருட்கள், வாசனை திரவியங்கள்,  விலங்குகள், விலங்குகளின் பொருட்கள், நிலம் அனைத்தும் வேந்தர்களின் தேவைக்கு ஏற்ப பங்கீடு கொடுக்கும் தன்மை வேந்தனுக்கே உரித்தானதாக மாறின. இதன் மூலம் வேந்தன் தனது படையை வலிமை கொள்வதற்கும்,   உயர்த்துவதற்கும்,  விலங்குகளைப் போரிடுவதற்கும் பழக்கப்படுத்திக் கொண்டனர். இத்தேவைகளுக்கு மூலதாரமாக இருப்பவர்கள் தொல்குடியினராவர்.

                சேரன் செங்குட்டுவனின் ஆட்சிக் காலத்தில் அவனது எல்லைக்குட்பட்டு மலைகளில் வாழ்ந்த குறவர்கள் உணவுப்பொருட்கள், விலங்குகள், பல்வேறு விதமான பொருட்கள் ஆகியவற்றை பங்கீடு செய்து கொடுத்து தனது கட்டுப்பாட்டில் வாழ்ந்தனர். இதனை,

அளந்து அறியா அருங்கலம் சுமந்து
வளம்தலை மயங்கிய வஞ்சி முற்றத்து
திறைசுமந்து நிற்கும் தெவ்வர் போல
யானைவெண் கோடும் அகிலின் குப்பையும்
மான்மயிர்க் கவரியும் மதுவின் குடங்களும்
சந்தனக் குறையும் சிந்துரக் கட்டியும்
அஞ்சனத் திரளும் அணிஅரி தாரமும்
ஏல வல்லியும்; இருங்கறி வல்லியும்
கூவை நூறும் கொழுங்கொடிக் கவலையும்
தெங்கின் பழனும் தேமாங் கனியும்
பைங்கொடிப் படலையம் பலவின் பழங்களும்
காயமும் கரும்பும் பூமலி கொடியும்
கொழுந்தாள் கமுகின் செழுங்குலைத் தாறும்
பெருங்குலை வாழையின் இருங்கனித் தாறும்
ஆளியின் அணங்கும் அரியின்; குருளையும்
வாள்வரிப் பறழும் மதகரிக் களபமும்
குரங்கின் குட்டியும் குடாஅடி உளியமும்
வரையாடு வருடையும் மடமான் மறியும்
காசறைக் கருவும் ஆசுஅறு நகுலமும்
பீலி மஞ்ஞையும் நாவியின் பிள்ளையும்
கானக் கோழியும் தேன்மொழிக் கிள்ளையும்
மலைமிசை மாக்கள் தலைமிசைக் கொண்டு ஆங்கு
ஏழ்பிறப்பு அடியேம் வாழ்க நின் கொற்றம்”8

என்று வாழ்த்திப் பாடுகின்றனர். இதன் பொருளானது. குறவர்கள் இவ்வளவு என்று அளந்து அறுதியிட்டுக் கூறமுடியாத அளவிற்கு அருமையான அணிகலன்களைக் காணிக்கைப் பொருளாகச் சுமந்து வந்து வளம்பல நிறைந்த வஞ்சி மாநகரின் முற்றத்திலே சேர அரசனைக்காணும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்து நிற்கும் பகை மன்னர்போல மலைக்குறவர்கள் அரசனுக்குரிய காணிக்கைப் பொருள்களுடன் நின்றனர்.

                குறவர்கள் கொண்டாந்த காணிக்கைப் பொருட்களாவன: யானையின் வெண்மையான தந்தங்கள், அகிற் கட்டைகளின் குவியல்கள், மான் மயிரால் கட்டப்பட்ட வெண்சாமரம், தேன்குடங்கள், சந்தனக் கட்டைகள், சிந்துரக் கட்டைகள்,  நீலக்கற்கள், அழகிய கத்தூரி, ஏலக்கொடி, கரிய மிளகுகொடி, கூவைக் கிழங்கின் மா, கவலைக் கிழங்கு,  தென்னை நெற்றுக்கள்,  இனிய மாங்கனிகள், பச்சிலை மாலைகள்,  பலாப் பழங்கள்,  வெள்ளுள்ளி,  கரும்பு,  பூங்கொடிகள்,  வளம் மிகுந்த கமுகிலிருந்து வெட்டியெடுக்கபட்ட செழுமையான பாக்குக் குலைகள், பெரிய குலைகளை ஈனும் பழம் நிறைந்த வாழைத் தாறுகள், ஆளிக்குட்டி,  சிங்கக்குட்டி,  புலிக்குட்டி,  யானைக் கன்று,  குரங்குக்குட்டி, வளைந்த அடியையுடைய கரடிக்குட்டி, மலையில் துள்ளி விளையாடும் மலையாட்டுக்குட்டி,  இளைய மான்குட்டி,  கத்தூரி மான் குட்டி, குற்ற மற்ற கீரிப்பிள்ளை,  தோகை மயில்,  புனுகு,  பூனைக்குட்டி,  காட்டுக்கோழி,  தேன் போன்று பேசும் கிளி ஆகியவற்றை குறவர்கள் தம் தலைமேல் வைத்து சுமந்து வந்து அரசனுக்குக் கொடுப்பதற்காக நின்றனர்.

                குறவர்கள் தங்களது குலக்குழுவுக்குள்ளே தங்களது உபரிப் பொருட்களைப் பங்கீடு செய்து கொண்ட மக்களாவர். அத்தகையோர்,  ஒரு நிலையிலிருந்து மாறி அரசனுக்குக் கொடுக்கும் காலச்சூழலுக்கு மாறியுள்ளனர். ஆனால் சங்கப்பாடல்களில் குறவர்கள் விருந்து உபசரிப்பு செய்ததிற்கான சான்றுகள் உள்ளன. குறவரினக் கொடிச்சியர் விருந்து உபசரிப்பில் விருந்து வேண்டி வரக்கூடிய விருந்தினர்களுக்கு கொடுப்பதற்கு உணவு இன்றி வெயிலில் காய வைத்த விதைத் தினையை சந்தன மரத்தாலான உரலில்,  யானையின் கொம்பைக் கொண்டு குற்றி சமைத்து வந்திருந்த விருந்தினர்களுக்கு உணவு பரிமாறி பின்பு அனுப்பியுள்ளனர்.

                இங்கு வருகின்றவர்களுக்கு மட்டும் உணவுப் பங்கீடு செய்தனர். இவை பெரும்பாலும் திணைக்குடிகளுக்குள்ளே நிகழ்ந்தன. இந்நிலையிலிருந்து மாறி தலைமீது சுமந்து சென்று அரசனுக்குப் பல்வேறு வகையான உணவுப்பொருட்கள் கொடுக்கும் குறவர்களின் வாழ்வினை பின்னோக்கிக் கொண்டு செல்கிறது. ஒரு புறம் குறவர்களின் காலமாற்றம்,  மறுபுறம் அரசு உருவாக்க வளர்ச்சி இனக்குழு, குலமுறை வாழ்க்கை ஒழிந்து பொருள் பங்கீடு செய்யும் வழக்கமுறை சமூகத்தில் நிலவியுள்ளது.

                பொருள் பங்கீடு செய்யும்முறை மட்டுமில்லாமல் அரசனை வாழ்த்தி வணங்கி வழி அனுப்பும் நிலையாகவும் மாறியுள்ளது. தொல்குடியிரான குறவர்கள் அரசனை வாழ்த்தும்போது “ஏழ் பிறப்பும் உமக்கு அடியவராய் இருப்போம்” வாழ்க நின் அற நீதி எனப் போற்றினர். அத்தோடு “பன்னூறு ஆயிரம் ஆண்டுகள் நீ வாழ்வாயாக”  என வாழ்த்தும் மரபினையும் சொல்லும் மரபிற்கு குறவர்கள் உள்ளாக்கப்பட்டனர்.

                இக்காலச் சூழலிலிருந்து பார்க்கும்போது தொல்குடியினரான மலைக்குறவர்கள் அரசர்களுக்குத் தேவையான உணவுகள், போரில் பயன்படுத்தப்படும் விலங்குகள்,  செல்வச் செழிப்புடைய உயர்ந்த ஆபரணங்கள் எல்லாம் கொடுத்து அறிமுகம் செய்து வைத்ததும் இத்தொல்குடியினராவர். குறவர்கள் பொருட்களைக் கொடுப்பதற்கான காரணம் என்ன? ஆட்சி – அதிகாரம் –  வரி (பங்கீடு) என்று கொண்டால் அரசர்கள் தொல்குடியினரையும் அடிமையாகத் தங்களது ஆளுகைக்குள் உட்படுத்திக் கொண்டது தெரிய வருகிறது.

                இல்லையேல் அரசன் காணிக்கையாக அரசனுக்கு கொடுப்பதென்றால் அரசன் வாயிலாகத் தொல்குடியினருக்கு கிடைத்த பங்கீடு எத்தகையது? என்ற வினாக்கள் எழுகிறது. இது குறித்த வழக்காறு சார்ந்த தரவுகளை நோக்கும்போது இன்றும் கிராமப்புறங்களில்  காணிக்காரர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களது தொழில் வயல் வெளிகளைக் காவலிடுவது. மடை திறந்து விடுவது. அடைப்பது. இரவு நேரங்களில் காவல் காப்பது. அறுவடைக் காலங்களில் நெல், தானியங்களுக்குக் குறியீடு செய்து வருமுடி (காணிக்கை) வாங்குவது ஆகியனவாகும். அத்தகைய செயல்களுக்காக நெல்,  கம்பு,  சோளம் முதலிய தானியங்கள் அளவிடப்படுகிறது. இது ஒவ்வொரு கண்மாய் மடையைப் பொறுத்தும் இப்பங்கீடு கொடுக்கப்படுகிறது. இதற்காகப் பட்டயமும் கொடுக்கப்பட்டுள்ளன.  இப்பங்கீடுகள் அனைத்தும் சோழர்கள்  காலத்தில் அதிகமாக வழக்கில் இருந்துள்ளன. நிலம் சார்ந்த குடிகளுக்கு இப்பங்கீடு வழங்கப்பட்டுள்ளன. இதே செயல்பாடு குறவர்களுக்கும் இருந்திருக்கிறதென்றால் இல்லை. அவர்களிடம் இருந்த பூர்வீகம் பறிக்கப்பட்டு இன்று நடோடி வாழ்க்கையாகத் தங்களது வாழ்கையை அமைத்துக்கொண்டு வாழ்கின்றனர். அரசர்களுடைய (சேரன்) காலத்தில் தொல்குடியினரிடம் இருந்து பொருட்களைக் கைப்பற்றும்முறை,  அவர்களை வழிநடத்தும் பொறுப்பு ஆகியன மட்டுமே வேந்தர்களிடத்தில்  இருந்துள்ளன.

முடிவுகள்

                தொல்குடி மாந்தர்கள் இனக்குழு,  குலக்குடி முறையில் வாழ்ந்த வாழ்வில்,  தாங்கள் வணங்கப்பட்ட தெய்வத்திலிருந்து சற்று மாற்றம் பெற்று உயிரோடு வானுலகம் செல்லும் பெண்ணின் சக்தியைக் கண்டு பார்த்து உணர்ந்து அப்பெண்ணைத் தெய்வமாக ஏற்று வழிபடும் பெண்தெய்வ வழிபாட்டை தமிழ்ச் சமூகத்தில் உருவாக்கியவர்கள் தொல்குடியினரான குறவர்கள் ஆவர். பின்பு வருகின்ற காலகட்டங்களில் மனிதனாக இருந்து தெய்வமாக்கப்பட்ட பல்வேறு பெயர்களைக் கொண்ட பெண் தெய்வங்கள் (மாரியம்மன்,  பட்டத்தரசி,  பண்ணாரி,  வனபத்திரகாளி, செல்லாண்டியம்மன்) அனைத்தும் குறவர்களின் வழித்தோன்றல்களே ஆகும். அவர்கள் மரபில் பல்வேறு மக்கள் பெண் தெய்வ வழிபாட்டை தொடங்கி வழிபட்டு வந்தவர்களாவர்.

                அதுமட்டுமில்லாமல் அரசனுடைய தாட்டிமை இல்லாமல் வாழ்ந்த தொல்குடியினர் வாழ்க்கையில் அரசுருவாக்கம் என்ற முறையில்  மன்னர்களின் ஆளுகைக்கு உட்படும்போது தனக்கிருந்த உணவுகளையோ? விலங்குகளையோ? முன்னின்று கொடுக்கும்  நிலைக்கு மாறியுள்ளனர். அத்தோடு தொடர்ந்து அரசனை வாழ்த்தும் மரபும் ஓர் ஆளுகைக்கு ஆட்படும் அடிமை நிலைக்கும் தொல்குடியினர் மாறியுள்ளனர். ஆக, தொல்குடியினரின் வாழ்வு பெண்தெய்வ வழிபாடுகளைத் தொடங்கி வைத்தல்,  அரசனுக்குத் தேவையான போர்க்கருவி,  படை,  விலங்குகள், உணவுப் பொருட்கள் ஆகியவைகளை உருவாக்கி கொடுப்பதில் முன்னோடியாக இருந்துள்ளது தெரிய வருகிறது.

அடிக்குறிப்புகள்

  1. பக்தவத்சல பாரதி – சாலினி வாக்குரைத்தல் இனவரைவியல் நோக்கு, (கட்டுரை) புதிய பனுவல் (பன்னாட்டு இணையவழி ஆய்விதழ்) ப.28
  2. மேலது. ப.28
  3. சிலப்.வஞ்சி.குன்றக்:5-12
  4. சிலப். மதுரை.அழற்படுகாதை.151-155
  5. மேலது. நூ. ப.38
  6. சிலப்.வஞ்சி.குன்றக்:11-20
  7. சிலப்.புகார்.மங்க.8
  8. சிலப்.வஞ்சி.குன்றக்:33-45

 

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க