கற்றல் ஒரு ஆற்றல் – 99
க. பாலசுப்பிரமணியன்
இருத்தலியல் நுண்ணறிவு (Existential Intelligence)
கற்றலிலும் கற்றல் சார்ந்த துறைகள் மற்றும் வல்லமைகளிலும் அதிகமாகப் பேசப்படாத நுண்ணறிவு இருத்தலியல் நுண்ணறிவு. பொதுவாக இந்த நுண்ணறிவு தத்துவங்கள் கொள்கைகள், வாழ்வு பற்றிய தேடல்கள் மற்றும் அக- புற வாழ்வுகளின் தொடர்புகள் பற்றிய சிந்தனைகளைத் தூண்டும் மற்றும் கேள்விக்கணைகளால் துளைக்கும் அறிவுடன் சம்பந்தப்பட்டதாக உள்ளது. இந்த நுண்ணறிவு பல்லாயிரம் ஆண்டுகள் தொட்டு மனித இன வளர்ச்சியுடனும் மனிதஅறிவின் தேடல்கள் மற்றும் மேம்பாட்டுடனும் இணைத்தே இருந்திருக்கின்றது. இந்தத் தேடல்கள் பல நேரங்களில் தத்துவ அறிவை வளர்ப்பதற்கு மட்டுமின்றி அதன் வாயிலாக அறிவியல் ஆர்வங்களையும் உண்மைகளைத் தேடியும் அலசியும் ஆராய்ந்தும் வெளிப்படுத்தியும் வருவதற்கு மிக்க துணையாக இருந்து வந்திருக்கின்றது.
இந்த அறிவின் சின்னங்கள் உலக அளவில் பல நாடுகளின் மதக் கோட்பாடுகள், இனப்பிரிவுகள், பழக்க வழக்கங்கள், மூட நம்பிக்கைகள், சமுதாயப் போக்குகள், நடைமுறைகள், மறைகள், இலக்கிய வளர்ச்சியின் திசைகள் ஆகியவற்றை நிர்ணயிப்பதற்கு காரணமாக இருந்துள்ளது. இந்த நுண்ணறிவின் தேடல்களிலும் வளர்ச்சியிலும் அந்த நாடுகளின் சிந்தனைகளின் சின்னங்களின் போக்கும் திசைகளும் அவற்றின் அளவுகளும் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன.
இந்திய கலாச்சாரத்தின் ஆணிவேராகக் கருதப்படும் பல மறைகளும், பல மொழிகளின் இலக்கியங்களும் இந்த நுண்ணறிவின் வெளிப்பாடாகக் கருதப்படலாம். இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக தமிழ் மறையாகக் கருதப்படும் திருக்குறள் ஆகும். அக-புற வாழ்வின் சிந்தனைகளுக்கு வழிகாட்டியாகவும் கலங்கரை விளக்கமாகவும் விளங்கும் இந்த அரிய நூல் இந்த நுண்ணறிவை விளக்குவதற்கு பல முன்னுதாரணங்களைத் தன்னுள் கொண்டதாக விளங்குகின்றது .
இந்த நுண்ணறிவில் சிறந்து விளங்கியவர்களாகக் கருதக்கூடிய சிலர்:
- புத்தர்
- சாக்ரடீஸ்
- கலீல் கிப்ரான்
- குரு நானக்
- கபீர்தாஸ்
- அரிஸ்டோடில்
- பிளாட்டோ
இது போன்ற பலரை நாம் மேற்கோளாகக் காட்ட முடியும் .இந்த நுண்ணறிவில் சிறப்புடையவர்களிடம் உள்ளத்தில் ஏற்படுகின்ற சில கேள்விகள்:
- நான் ஏன் பிறந்தேன்?
- எனக்கும் இந்த உலகிற்கும் என்ன உறவு ?
- எனது மற்றும் மனித இனத்தின் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன ?
- மரணம் என்பது என்ன?
- மரணத்திற்கு பிறகு பிறப்பு உண்டா?
- சொர்க்கம், நரகம் என்பது உண்மையா அல்லது கற்பனையின் வெளிப்பாடா?
- இறைவன் என்று ஒருவன் இருக்கின்றானா? அவனுக்கும் நமக்கும் என்ன தொடர்பு?
- மனித இனத்திற்க்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பு என்ன?
இது போன்ற பல கேள்விகளும் அதற்கான தேடல்களும் இவர்களின் கற்றலிலும் பேச்சுக்களிலும் வெளிப்படையாகத் தெரியும்
இந்த விதமான கற்றலில் சிறந்து விளங்குபவர்கள் பிற்காலங்களில் கீழ்கண்ட தொழில்களில் சிறப்படைய வாய்ப்புண்டு
- தத்துவம்
- மத வளர்ச்சி மற்றும் ஈடுபாடுகள்
- மன இயல்
- கவிதை, இலக்கியம்
- மனித நேயம்
- சேவைகள் .
இந்த நுண்ணறிவைச் சார்ந்தவர்கள் பொதுவாக அதிகமாக மற்றவர்களுடன் உறவாடாமல் தனிமையைப் போற்றக்கூடியவர்களாக இருப்பார்கள். தங்களுடைய சிந்தனைகளை அதிகமாக வெளிப்படையாகப் பரிமாறிக் கொள்ளாமல் அடக்கத்துடன் இருப்பார்கள். இவர்களின் சிந்தனை உள்நோக்கியதாக இருக்கும். தியானம், தடத்துவ சிந்தனை, உடல் பயிற்சி, யோகப் பயிற்சிகள் ஆகியவற்றில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள்.
ஹோவர்ட் கார்டனரால் கருதப்பட்ட ஒன்பது விதமான நுண்ணறிவுகளை முடிவானவை அல்ல காலப்போக்கில் இந்த நுண்ணறிவுகள் தவிர விதமான நுண்ணறிவுகளின் வளர்ச்சியும் ஏற்பட .வைப்புக்கள் உண்டு. உதாரணமாக தற்போதைய மனித வளர்ச்சி மற்றும கற்றல் சார்ந்த வளர்ச்சிகளில் டிஜிட்டல் நுண்ணறிவு ஒரு முக்கிய பங்காகக் கருதப்படுகின்றது தற்காலத்தில் ஏழு மட்டும் எட்டு வயது சிறுவர் மற்றும் சிறுமியர்கள் கணினிக்களையும் அதைச் சார்ந்த தொழில்நுட்பங்களையும் எளிதாகவும் திறனுடனும் வேகமாகவோ கையாளும் முறைகள் கண்டு நாம் வியந்து நிற்கின்றோம். அவர்களுடைய திறனுடனும் வேகத்துடனும் வயதில் முதிர்ந்த பலராலும் ஈடு கொடுக்க்க முடிவதில்லை. ஆகவே டிஜிட்டல் நுண்ணறிவு தற்காலத்தில் அவசியமாகி கருதப்படுகிறந்து.
இதுபோன்று டேனியல் கோலெமென் என்பவர் சமூக நுண்ணறிவின் முக்கியத்துவதைப் பற்றிய ஆராய்ச்சியின் காரணமாக அதை பத்தாவது அவசிய நுண்ணறிவாகக் கருதுகின்றனர். இதைப் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
தொடரும்