நிர்மலா ராகவன்

பண்டிகை என்றாலே கொண்டாட்டம்தான்!

நலம்

தீபாவளிக்குச் சில நாட்களே இருந்தன. பல வருடங்களுக்குமுன், என்னுடன் வேலை பார்த்த ஒரு பெண்மணி கேட்டாள், “பண்டிகைக்கான ஆயத்தங்களை ஆரம்பித்துவிட்டாயா?”

“என் மாமியார் வீட்டில் அழைத்திருக்கிறார்கள். அதனால் நான் ஒன்றும் செய்யப்போவதில்லை!” என்றேன்.

“அப்படியானால், குழந்தைகளுக்கு பண்டிகை வரும் மகிழ்ச்சியே இருக்காதே!”

பண்டிகை என்றாலே கொண்டாட்டம்தான். பெரியவர்களுக்கு வேலை அதிகம் என்றாலும், பழைய கதைகளைப் பேசிக்கொண்டு, ஒன்றாக இணைந்து வேலை செய்வதில் ஒரு தனி மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. குழந்தைகளுக்கும் (ரவை உருண்டை பிடிக்கச் செய்வதுபோல்) சிறு சிறு வேலைகளைப் பகிர்ந்து கொடுப்பதன்மூலம் அவர்களது பொறுப்புணர்ச்சியை அதிகரிக்கச் செய்ய இதுதான் தக்க சமயம்.

மலேசியாவில் தீபாவளிக்குப் பொது விடுமுறை. (தைப்பூசத்திற்கு சில மாநிலங்களில் விடுமுறை உண்டு). அதனால் எல்லா மக்களுக்குமே குதூகலம்.

பேரங்காடிகளில் இச்சமயத்தில்தான் வருடத்திலேயே மிக மலிவாக துணிமணிகள கிடைக்கும். அதனால், இந்துக்கள் மட்டுமின்றி, பலரும் கடைகளில் மொய்த்துக்கொண்டிருப்பதைக் காணலாம்.

`தீபாவளி சிறப்பு விற்பனை!’ என்று நடைபாதையை அடைத்துக் கடைகள் போட்டிருப்பார்கள். எங்கும் தமிழ் ஒலிக்கும். சூடிதார், வளையல், வீட்டுக்கு அலங்காரமாக பிளாஸ்டிக் தோரணங்கள் என்று தடபுடல் படும்.

“`தோரணம் ஏன் கட்டுகிறீர்கள்?’ என்று பலரைக் கேட்டுவிட்டேன். சம்பிரதாயம் என்கிறார்கள்,” என்று எங்கள் இல்லத்திற்கு ஒரு சீன விருந்தினர் குறைப்பட்டுக்கொண்டார். “விஞ்ஞான ரீதியாக ஏதாவது காரணம் இருக்குமே!”

நல்ல வேளையாக, நான் அவ்வருடம்தான் ஏதோ ஆன்மிக பத்திரிகையில் அதைப்பற்றிப் படித்திருந்தேன். விருந்தினர் பலர் நம் வீட்டுக்கு வருகை புரியும்போது அவர்கள் விடும் மூச்சுக்காற்றிலுள்ள கரியமில வாயுவை உள்வாங்கிக்கொண்டு விடுகிறது மாவிலை என்று விளக்கி, என் `அறிவுத் திறமையை’ அவரிடம் காட்டிக்கொண்டேன்.

கோலாலம்பூரிலுள்ள ஒரு பாலர் பள்ளியில் குத்துவிளக்கு, தோரணம், பாவாடை, புடவை என்று எல்லாவற்றையும் வைத்துச் சொல்லிக் கொடுக்கிறார்கள். தீபாவளியை ஒட்டி அவர்கள் நடத்தும் விழாவில் — எல்லாக் குழந்தைகளும் (பலர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்), அவர்களுடைய பெற்றோர்களும் — வித்தியாசமின்றி, இந்திய ஆடைகள் அணிகிறார்கள். அங்கு வழங்கப்படும் தோசை, சப்பாத்தி வகைகளை சட்னி, சாம்பாருடன் சாப்பிடுகிறார்கள். பிரபலமான தமிழ், இந்தி படப் பாடல்கள் ஒலிக்கும். ஓர் ஆசிரியை, தெரியாத்தனமாக `கொலவெறி’ பாட்டைப் போட்டுவிட்டு, அவசரமாக நிறுத்தினாள்!

சீன ஆசிரியை குழந்தைகளுக்கு பாலிவுட் படங்களில் வருவதுபோல் நடனம் ஆடச் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு கற்பனை வற்றிவிட்டபோது, நான் என் பங்குக்கு டப்பாங்குத்து ஆடச் சொல்லிக்கொடுத்தேன்!

அரசியல் பிரமுகர்கள் அவரவர் மதப் பண்டிகைகளை ஒட்டி OPEN HOUSE என்று கொண்டாடுவார்கள். அரண்மனையிலோ, ஸ்டேடியத்திலோ அல்லது ஒருவரது வீட்டிலோ நடைபெறும் இந்த `திறந்த வீட்டிற்குள்’ நுழைய மைல் கணக்கில் வரிசை பிடித்து நிற்பார்கள் பொதுமக்கள்.

மலேசிய கின்னஸ் ரெகார்டில் “திறந்த வெளியில் நடைபெறும் மிகப் பெரிய சந்தை” என்று பெயர் வாங்கிய சந்தைக்குப் போயிருந்தேன். கோலாலம்பூர் புக்கிட் ஜலில் (BUKIT JALIL) என்ற இடத்திலிருக்கும் ஸ்டேடியத்தின் வெளிப்புறத்தில் கார் நிறுத்துமிடத்தில் தீபாவளிக்கு பத்து நாட்கள் முன்னதாக நடைபெறும். தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக நடைபெறுகிறது. இது ஒன்பதாம் ஆண்டு. இந்தியாவிலிருந்து இதற்காகவே வரும் வியாபாரிகள் கூட்டத்தை மனதில் கொண்டு, பொருட்களை பாதி விலையில் விற்பார்கள், `வாங்கே! வாங்கே!’ என்று கூவி அழைத்தபடி. அந்த வட இந்தியர்களுக்குத் தமிழ் சொல்லிக்கொடுத்தவர் ஆரவாரமான அந்த வரவேற்பைச் சரியாகச் சொல்லிக் கொடுத்திருக்கலாம். ஆனால் அதுவும் வேடிக்கையாகத்தான் இருந்தது.

பெரும்பாலும், பெண்களுக்கான பொருட்கள்தாம். தெரியாத்தனமாக, மனைவிகளுடனோ, காதலியோடோ வரும் ஆண்களின் முழி பிதுங்குவது ரசிக்கும்படியாக இருந்தது.

`எல்லாக் கடைளையும் சுற்றிப் பார்க்கப்போகிறாயா!” என்று ஆயாசத்துடன் கேட்கும் காதலன், `உனக்குப் பார்ப்பதை எல்லாம் வாங்கிவிட வேண்டும்!’ என்று பலர் கேட்க கடிந்துகொள்ளும் கணவனாக சில வருடங்களில் மாறிவிடுகிறான். அனேகமாக, எல்லா பெரிய கடைகளிலும் யாராவது தமிழர் இப்படிக் கத்திக்கொண்டிருப்பார். எவரும் அதிர்ந்து, திரும்பிப் பார்ப்பதெல்லாம் கிடையாது. பழகிவிட்டது.

`மகிழ்ச்சியாகச் சுற்றிப் பார்க்கும்போது எதற்கு இப்படி ஒரு அவதி!’ என்று தெளிந்து, பல இளம்பெண்கள் ஒன்றுசேர்ந்து வருகிறார்கள். சற்று வயதானவர்களை அவர்களுடைய மகள் அழைத்து வருகிறாள். சாமான்களைத் தூக்கிச் செல்ல வசதியாக பதின்ம வயது மகனை அழைத்து வந்திருந்தார்கள் சில தாய்மார்கள். அந்தப் பையன்கள், `தெரியாமல் மாட்டிக்கொண்டோமே!’ என்று எந்த நிமிடமும் அழுதுவிடுவார்கள்போல் இருந்தார்கள்.

சலிப்படைந்த ஆண்களின் மனப்போக்கு புரிந்து ஒரு பஞ்சாபி நான்கு இடங்களில் பால்கோவா போன்ற இனிப்புவகைகள் விற்கும் கடை போட்டிருந்தார். `மசாலா டீ!’ என்று அவர் கூவிக் கூவி விற்க, தம் ஆயாசத்தைச் சற்றே குறைத்துக்கொள்ள ஆண்கள் அக்கடைகளை மொய்த்திருந்தனர்.

எல்லா தரப்பினரும் வாங்குவதற்கு ஏற்ப கண்ணாடிக் கற்கள், அல்லது ஜெய்ப்பூர் மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்ட கம்மல், நெக்லஸ் முதலியவை கண்களைப் பறித்தன. பெண்கள் திரளும் இடத்திற்கு பாத்திரங்கள், கைப்பை விற்கும் கடைகளும் இல்லாமலா!

`என் மகள் மறுக்கு வாங்கி வரச்சொன்னாள்!’ என்ற மலாய்க்குரல் கேட்டது. (தேன்குழல் போன்ற பொரித்தவைகளின் பெயர் முறுக்கு). எவ்வளவு திருத்தினாலும், `முறுக்கு’ என்ற வார்த்தை அப்படித்தான் மருவிவிட்டது.

பழங்காலத்துச் சித்திரங்கள், மரச்சாமான்கள் என்று ஓரிரு கடைகள். பல்லாயிரக்கணக்கான ரிங்கிட் விலையில், அவைகளை வேடிக்கைதான் பார்க்க முடியும் என்ற நிலை அனேகருக்கும்.

ஒரு மூதாட்டியை சக்கர வண்டியில் ஒரு பெண்மணி அழைத்து வந்திருந்தாள். வாங்குகிறோமோ, இல்லையோ, ஜொலிக்கும் பொருட்களையும், அவைகளை பெருமகிழ்ச்சியுடன் வாங்கிப்போகிறவர்களையும் பார்த்தாலே அவர்களது மகிழ்ச்சி நம்மையும் தொத்திக்கொண்டு விடுகிறது.

இதைப் படிப்பவர்களுக்கும், படிக்காதவர்களுக்கும் என் மனங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.