பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

23574003_1478743038846557_593520156_n

ராம்குமார் ராதாகிருஷ்ணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (25.11.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “படக்கவிதைப் போட்டி (136)

 1. பூரிப்பு

  ஆனந்த சிரிப்பு..அடடா
  ஆச்சரிய சிரிப்பு அக்காவின் முகத்தில்
  ஆவலில் சென்று கேட்டேன்..
  துயரங்களை உன்னுள் மறைத்து
  துளிர் விடும் இந்த புன்னகை போலிதானே?!
  புன்னகை மாறாமல் அழகாய்
  புரிய வைத்தாள் எனக்கு.
  கழுதை போல பொதி சுமந்தாலும்
  காகம் போல வெயிலில் அலைந்தாலும்
  கறித்துகள்களிலே கிடந்து கஷ்டப்பட்டாலும்
  கம்பீரமாய் நிற்கிறேன்.. பூரிக்கிறன்.. ஆம்
  கல்வி கற்கிறேனடா என் கண்ணே!
  ஔவை மொழி கேட்டிலையோ?
  அஃதே செய்கிறேன் புரியலையோ?
  நீயும்
  அடியெடுத்து வை இன்றே – புதிய
  அத்தியாயம் துவங்க..
  அடியெடுத்து வை இன்றே
  அடிமை சிறையை தகர்த்தெறிய..
  அடியெடுத்து வை இன்றே
  அடுத்த தலைமுறையை பாதுகாக்க..
  அடியெடுத்து வை இன்றே
  அழகிய வருங்காலம் வரைய..

  வெகு தொலைவில் இல்லை
  வெற்றிப் பாதை

 2. சிரிப்பிலே…

  வெடித்துச் சிதறும் வெடிகளுடன்
  வெடிக்கும் சிரிப்புடன் வேடிக்கையாய்த்
  துடிப்புடன் உழைக்கும் வனிதையரும்
  துயரைச் சிரிப்பில் தான்மறைத்தார்,
  குடிக்கும் தந்தை செயலாலே
  குடும்ப வறுமை தனைப்போக்க
  கொடிகள் காய்ந்தே பணிக்குவரும்
  காரணம் காட்ட வேண்டாமே…!

  -செண்பக ஜெகதீசன்…

 3. உயிருக்கும் உலகுக்கும் ஆபத்து பட்டாசு..!
  ==================================

  பாட்டெழுதிக் குவித்தார்கள் பாவலரும் கவிஞரும்..
  ……….பஞ்சம் பசிபட்டினி வறுமை கொடுமைபற்றியே.!
  நாட்டில் நடக்கும் அநியாயதையும் அவலத்தையும்..
  ……….நம்பிய மக்களுக்கு நயம்படப் புரியவைத்தார்கள்..!
  பட்டாசு வெடிப்பதாலே பயனென்ன என்பதையும்..
  ……….பலருக்கும் புரியும்படி பகலிரவாய் எழுதினார்கள்.!
  கேட்டவரால் புவிகொரு பயனுமில்லை இன்னும்..
  ……….கெடவைக்கிறார் ஓசோனையும் காற்றுவெளியையும்.!

  ஏட்டுக் கல்வியென்பது ஏழைக்கு எட்டாக்கனியாகும்..
  ……….இலவசக்கல்வி என்பது இன்னும் ஏட்டளவிலேதான்..!
  ஓட்டு கேட்கும்போது உங்களுக்கும் வழிபிறக்கும்..
  ……….என்பார்.! அதன்பிறகு அடுத்தமுறைதான் வருவார்.!
  வீட்டுத் திண்ணையிலே அமர்ந்து வெடிசுத்துகிறோம்..
  ……….விதியை நொந்து படிக்கமுடியாமல் போராடுகிறோம்.!
  பாட்டுகொரு புலவன் மாகவிபாரதியும் இதைத்தானா..
  ……….புண்ணியம்கோடி ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்றான்.?

  ஆட்டுக்குட்டி மாடுகன்னு வளர்த்தாலும் ஆயுளாவது..
  ……….அதிகரிக்கும் இத்தொழிலோ உயிருக்கே உலைவைக்குது.!
  ஓட்டுப்போட்ட மக்களால் மிகஉயர்வுக்குச் சென்ற..
  ……….அதிகாரியே முறையின்றியிதைச் செய்ய அனுமதிப்பது.!
  பட்டாசு ஆலைகளும் ஆவணமின்றி முளைக்கிது..
  ……….பசும்பிஞ்சுகளும் பட்டாசோடு சேர்ந்து சாம்பலாகுது.!
  அட்டபந்தன விழாவில் அனுமதியின்றி கொல்லத்தில்..
  ……….ஆயிரம்வாலா வெடித்ததில் ஐநூறுபேரையது கொன்றது.!

  குடிக்காதே புகைக்காதே எச்சரிக்கிறது அரசாங்கம்..
  ……….குடிபுகை இரண்டையும் மறந்துவிடு அவைநலமில்லை.!
  குடித்தலும் புகைத்தலும் உடல்நலத்துக்கு தான்கேடு..
  ……….வெடிக்கும் பட்டாசோ வேறுலகுக்கு அனுப்பிவிடும்.!
  வெடிதயாரிப்பதை உரிமமின்றிச் செய்கின்றார் பலர்..
  ……….விதிகள்பல இதற்குண்டு பின்பற்றுவோர் யாருமில்லை.!
  வெடித்து உயிர்கருகியபின் விபத்தென்பார் இதுகூட..
  ……….படித்த மாந்தர்களுக்கும் புரிவதில்லை..“இந்தமாயை”.!

 4. நீ சிரித்தால் தீபாவளி : நம் மகிழ்ச்சியை கொண்டாட வித விதமாய் வெடிகள்!
  செய்து தருவது எண்ணற்ற பிஞ்சுக் கரங்கள்!
  படிக்கும் வயதில், இவர்களுக்கேன் இந்தப் பாடு!
  வறுமையால் விளைந்தது இந்தக் கேடு!
  பூச்சரம் சூடி வாழத்தான் ஆசைகள்!
  வெடிச் சரம் செய்வது விதி வரைந்த கோலங்கள்!
  இவர்கள் கை வண்ணத்தில் மத்தாப்பின் ஒளிச் சிதறல்கள்!
  ஆனால் இவர்களின் வாழ்வில் என்றும் இருட்டின் சாயல்கள்!
  வானை முட்டும் இவர்கள் உழைப்பில் கிடைத்த வெடிகள்!
  மண்ணிலே புதைந்து போகும் இவர்களின் ஆசைகள்!
  ஆண்டவன் படைப்பினிலே ஏனிந்த பேதங்கள்!
  வசதிகள் சிலருக்கும், வறுமை பலருக்கும், ஏன் இங்கே?
  விடை தெரியா கேள்விகள்!
  இருந்தும் இப்பெண்கள் முகத்தில் புன்னகைப் பூக்கள்!
  போனதை எண்ணி சிறிதும் கலங்காத மாதர்கள்!
  வரும் காலம், நன்மை தரும் எனும் நேரிடை எண்ணங்கள்!
  நம்பினோர் கெடுவதில்லை! ஆன்றோரின் வார்த்தைகள்!
  நல்லகாலம் அமைவதற்கு நம் அனைவரின் வாழ்த்துக்கள்!

 5. கந்தகச் சிரிப்பு.
  ——
  மருந்துகளோடு பணிபுரிவதால்
  நீ மருத்துவச்சியும் அல்ல
  வெடிகளை உருவாக்குவதால்
  நீ தீவிரவாதியும் அல்ல.
  ஆபத்தென தெரிந்தாலும்
  உன்னை வேலைக்கு அனுப்பிய
  அன்னையும் இந்நேரம் ஏனோ
  அனல் மூட்டிய
  பட்டாசு திரியாய்
  பதறிக்கொண்டுதானே இருப்பாள்.?
  ஆமாதானே தோழி.?

  உன் கந்தகம் தோய்ந்த
  கரங்களில்
  முத்தம் பாய்ச்சும்
  உன்னவனுக்கு
  உன் மத்தாப்பு வெட்கம்
  பூக்கும் இந்த சிரிப்புதானே
  காதல் சங்கீதம்..?
  ஆமாதானே தோழி..?

  நீ திரிக்கும்
  இந்த பட்டாசு மட்டும்
  எங்கள் வீடுகளில் வெடித்தாலும்
  சிலசமயம்
  இதோ வெடிக்கும்
  உன் புன்னகை போலவெ
  சில புன்னகைப் பூக்களின்
  சில தொழிலாள சோதிரிகளின்
  யாக்கையும் வெடித்திடும் போது
  உள்ளம் ரணமாகி
  இருதயம் வெடித்து விடுகிறது
  தோழி..?

  என்றாலும் என்ன..
  ஆபத்தில்லா வாழ்வை
  நீ வாழ
  வாழ்த்துகிறேன்..
  உன் கந்தக புன்னகை
  கண்டு
  என் கண்களில்
  கந்தக கண்ணீர் தோழி
  ஆனந்தமாய்..
  ஆனந்தமாய்,,,!

  =
  -சொல்லின் செல்வி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *