செண்பக ஜெகதீசன்

 

 

உழவினார் கைம்மடங்கி னில்லை விழைவதூஉம்

விட்டேமென் பார்க்கு நிலை.

-திருக்குறள் -1031(உழவு)

 

புதுக் கவிதையில்…

 

உழவுத் தொழிலைச் செய்யாது

உழவர்

கைகட்டி அமர்ந்துவிட்டால்,

ஆசை விட்டு

முற்றும் துறந்தோம் என்பவர்க்கும்

வாழ்க்கையில்லை வையத்திலே…!

 

குறும்பாவில்…

 

உழவர் உழைக்காது போனால்,

வையத்தில் வாழ்வில்லை

உலகாசை விட்டோம் என்பார்க்கும்…!

 

மரபுக் கவிதையில்…

 

வயலில் உழைத்திடும் உழவரவர்

வேலை யேதும் செய்யாமல்

பயனே யின்றி கைகட்டிப்

படுத்துக் கிடந்தால் பாரினிலே,

உயர்ந்த நிலையைப் பெற்றிடவே

உலகின் ஆசை விட்டோமெனும்

உயரிய துறவைக் கொண்டோரும்

உய்ய வழியே இருக்காதே…!

 

லிமரைக்கூ..

 

உழைக்காதே உழவரிருந்தால் வீட்டில்,

உலகாசை விட்டோமெனும் துறவியர்க்கும் கூட

வாழ்வென்பது ஏதுமில்லை நாட்டில்…!

 

கிராமிய பாணியில்…

 

ஒசந்தது ஒசந்தது

ஒலகத்தில ஒசந்தது

ஒழவுவேல ஒசந்தது..

 

வயலுல எறங்கி வேலசெய்யாம

உழுறவன் ஊட்டுல ஒறங்கிக்கெடந்தா

ஒண்ணுமே நடக்காது ஒலகத்துல..

 

ஒலக ஆசய உட்டோமுங்கிற

சாமியாருங்க கூட

ஒலகத்தில வாழ வழியிருக்காதே..

 

அதால,

ஒசந்தது ஒசந்தது

ஒலகத்தில ஒசந்தது

ஒழவுவேலயே ஒசந்தது…!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *