Featuredஇலக்கியம்கட்டுரைகள்பத்திகள்

திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 36

க. பாலசுப்பிரமணியன்

மனத்தின் மாசினை நீக்கிடுவாயோ இறைவா…

திருமூலர்-1-3

மனத்தைக் கட்டுப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. நமது  சிந்தனைகளே நமக்கு மகிழ்வையும் துயரத்தையும் தருகின்றன. இந்தத் துயரத்தில் வாடுகின்ற பட்டினத்தார் தன்னுடைய மனநிலையை விளக்கும் வண்ணம் பாடுகின்றார் :

நெஞ்ச முருகி நினைந்துனைத்தான்  போற்றிநெடு

வஞ்சகத்தைப் போக்க வகையறியேன் பூரணமே

எள்ளுக்கு ள்ளெண்ணெய்போ லெங்கு நிறைந்திருந்த

துள்ள மறியா  துருகினேன் பூரணமே

மனத்தைக் கட்டுப்படுத்திட்டுவிட்டால்; அங்கே இறைவனின் சோதி சுடர் விட்டுப் பிரகாசிக்கும். இறைவன்பால் சிந்தையை நிறுத்தி எங்கும் எதிலும் அவன் ஆதிக்கத்தைக் காணும் பொழுது நமக்கு சிந்தை சலனங்களிலிருந்து விடுபட்டு அமைதியில் அமைந்திடும். அது அன்பின் வடிவாகவும் எதிர்பார்ப்புகள் இல்லாத அன்பின் மையமாகவும்  மாறிவிடும்.

இந்த ஆனந்த நிலையைப் பெறுவதற்கு எந்த கோவிலுக்குச் செல்லலாம்? எந்த நதியில் நீராடலாம்? எந்த இறைவனின் பாதங்களைப் பற்றிக்கொள்ளலாம்?

கோடி தீர்த்தம் கலந்து குளித்து அவை

ஆடினாலும் அரனுக்கு அன்பு இல்லையேல்

ஓடும் நீரினை ஓட்டைக் குடத்து அட்டி

மூடி வைத்திட்ட  மூர்க்கனோடு ஒக்குமே 

என்று  தேவாரத்தில் அப்பர்  சொல்வது அன்பின் நிலையைத் தெளிவாக விளக்குகின்றது

இதே கருத்தை வலியுறுத்தும் திருமூலர் சொல்கின்றார்

ஓதம் ஒலிக்கும் உலகை வலம் வந்து

பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை

காதலில் அண்ணலைக் காண இனியவர்

நாதன் இருந்த நகரறி வாறே.

 இதுவே ஆனந்தமான உன்னத நிலை மனதில் நிற்கும் மாசுகளைக் களைந்து சிந்தையை இறைவனிடம் வைத்தால் கிடைக்கும் இன்பத்தை திருமூலர் தன்னுடைய எளிய சொற்கள் மூலம் விளக்குகின்றார்

கொலையே களவுகட்  காமம் பொய்கூறல்

மலையான பாதக மாம் அவை நீக்கித்

தலையாஞ் சிவனடி சார்ந்தோர்க்

கிலையாம் இவைஞானா னந்தத் திருத்தலே

 இவ்வாறு தன்னை ஏற்று ஆட்கொண்ட இறைவனின் கருணையை திருவாசகத்தில் மாணிக்கவாசகர் அழகாக எடுத்துரைக்கின்றார்

வெறுப்பனவே செய்யும்என் சிறுமையைநின் பெருமையினால்

பொறுப்பவனே அராப்பூண்  பவனேபொங்கு கங்கைச்சடைச்

செறுப்பவனேநின் திருவரு ளால்என் பிறவியைவேர்

அறுப்பவனே உடையாய் அடியேன்உன் அடைக்கலமே 

 தன்னுடைய மனது படுத்தும் பாட்டில் வருந்தி இறைவனுடைய தாள்களை மட்டும் நம்பி நிற்கின்ற நிலையை நாம் வள்ளலாரிடமும் காண்கின்றோம்

மையல் வாழ்க்கையில் நாள்தொறும் அடியேன்

வருந்தி நெஞ்சகம் மாழ்குவ தெல்லாம்

ஐய ஐயவோ கண்டிடா தவர்போல்

அடம்பி டிப்பதுன் அருளினுக் கழகோ

செய்ய மேல்ஒன்றும் அறிந்திலன் சிவனே

தில்லை மன்றிடைத் தென்முக நோக்கி

உய்ய வைத்ததாள் நம்பிநிற் கின்றேன்

உனைஅ லால்எனை உடையவர் எவரே

அடியார்கள் அனைவருமே இறைவனிடம் மனமுருகி வேண்டிக்கொண்டதெல்லாம்…. “மனத்தின் மாசினை நீக்கிடுவாயோ இறைவா.”

(தொடருவோம்)

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க