கொழிஞ்சாம்பாறை வட்டாரத்தில் நிகழ்த்தப்படும் மூவரசர் நாடகம் – 1

0

-முனைவர் பா. உமாராணி

     ஆதிகாலம் தொடங்கி இன்றுவரை மனிதன் நம்பிக்கைகளின் மீது தன் வாழ்வியல் பண்பாடுகளைக் கட்டமைத்து வருகின்றான். திருவிழாக்கள், பண்டிகைகள் போன்றவை இதன் அடிப்படையில் தோன்றியவையாகும். மனித சமூகம் தேடலில் முடிவு விடைகிடைக்காத செய்திகளுக்குத் தமக்கே உரிய பாணியில் ஒரு நம்பிக்கையை உருவாக்கிக் கொள்கிறது. தாங்கள் உருவாக்கிக் கொண்ட நம்பிக்கைகள் மற்றோரால் பின்பற்றப்படும் பொழுதும் ஏற்றுக்கொள்ளப்படும் போதும் அது சமூக அங்கீகாரத்துடன் செயலாற்றத் தொடங்குகிறது. அத்தகு நம்பிக்கைகள் காலம், இடம், எல்லைகடந்து விரிந்து செயலாற்றுபவையாக உள்ளன. அவ்வகையில் கேரள மாநிலத்தின் எல்லையோரத்தில் அமைந்துள்ள கொழிஞ்சாம்பாறை வட்டாரத்தில் உள்ள  அத்திக்கோடு பகுதியில் நடைபெறும் மூவரசர் நாடகம் (மூன்று ராஜாக்கூத்து) என்ற நாடகம் கிறித்துவ மக்களின் நம்பிக்கைகள் சார்ந்து அமைந்துள்ளது.

பண்டைய கேரளம்  

      பண்டைய காலத்தில் கேரளம் என்பது தமிழகத்தின் ஒரு பகுதியாகவே இருந்துள்ளது. அதனைச் சேரநாடு என்று வழங்கி வந்ததுடன், அந்நிலத்தை ஆண்டவர்களும் தமிழர்களாகவே இருந்துள்ளனா். கால மாற்றத்தின் விளைவாக மொழிவாரியாகப் பிரிந்த கேரளம், பின்பு தனக்கென்ற ஒரு அடையாளத்தை நிலைநிறுத்திக் கொண்டபோதும் சமூகப் பண்பாட்டு அடிப்படையிலும், மொழி, இன அடிப்படையிலும் பெரிதும் வேறுபாடு இல்லாமல் தமிழகத்தின் சாயலைப் பெற்றே விளங்குகின்றது. அதுவும் எல்லையோரம் அமைந்துள்ள தமிழா் வாழ்பகுதிகளில் பழைய தமிழ்ப் பண்பாட்டின் எச்சங்கள் நிறைந்து காணப்படுகின்றன என்றால் அது மிகையில்லை.

     இந்திய எல்லையின் மேற்குக் கடலோரத்தை ஒட்டிய பகுதியாக கேரளம் விளங்குகின்றது. கேரளத்தின் கிழக்கே மேற்குத் தொடா்ச்சி மலையும், மேற்கே அரபிக்கடலும், moondruதெற்கே இந்துமகா சமுத்திரமும், வடக்கே கா்நாடகப் பகுதியும் அமைந்துள்ளது. இந்தியாவின் மேற்கு அரப்பிக்கடலோரத்தை ஒட்டித் தெற்கு வடக்காகப் பரந்து கிடக்கும் பகுதி கேரளப்பகுதியாகும். இதில் “மலையை ஒட்டிய பகுதிகளை மலைநாடு என்றும், கடலை ஒட்டிய பகுதிகளை கடல் நாடு என்றும், மத்தியப் பகுதியை இடைநாடு என்றும் அழைப்பார்கள்” (பாலக்காடு – சித்தூர் தமிழா் வாழ்வியல், மா. பேச்சிமுத்து) என்றும் குறிப்பிடுவா்.

     ”சேரளம்” என்ற சொல் மருவி கேரளம் (சேர் + அளம்) என்று வழங்கப்படுகிறது.  கடல் உள்வாங்கியதால் அதிகமாகச் சோ்ந்த நிலப்பகுதி ‘சேரளம்’ என்று அழைக்கப்பட்டது. வடமொழி அறிஞா்கள் சேரளத்தைக் ‘கேரளம்’ என்றே அழைத்தனா்.

கேரளம் – புனைகதை வரலாறு

     திருமாலின் பத்து அவதாரங்களில் ஆறாவது அவதாரமாகக் கருதப்படும்  பரசுராமன் அவதாரத்தில் (பரசு என்ற வடசொல்லின் பொருள் மழு) பரசுராமன்  சத்திரியா்கள் மீது சினம்கொண்டு உலகத்திலுள்ள சத்திரியா்களில் ஆண்களை மட்டும் கொன்று அவா்களின் குருதியை ஐந்து பெரிய குளங்களில் தேக்கிவைத்தான். சினம் தணிந்து பரசுராமன் வருணன் பூமாதேவியோடு கன்னியாகுமரிக்குச் செல்கிறான். குமரி முனையிலிருந்து தன் கை மழுவை வடக்கு நோக்கிக் கடலில் எறிந்தான். (கோகா்ணத்திலிருந்து தெற்கே கன்னியாகுமரி நோக்கி மழுவை எறிந்தான் என்றும் சிலா் சொல்கிறார்கள்) அம்மழு 160 காதம் தொலைவிலுள்ள கோகா்ணம் வரையுள்ள கடல் பகுதியை உள்வாங்கிக் கரைப்பகுதியாக உருமாற்றியது. இக்கரைப்பகுதியே பரசுராமன் நாடு (கேரளம்) என்று புராணக்கதை கூறுகிறது. தான் உருவாக்கிய கரைப்பகுதியில் 64 நம்பூதிரி பிராமணா்களை அழைத்து வந்து பரசுராமன் குடியமா்த்தினான் என்ற செய்தியும் மக்களிடையே கதையாக ஊடுருவியுள்ளது. பரசுராமன் மழுவெறிந்து உருவாக்கிய கரைப்பகுதியின் எல்லையினை,

     “வடக்குத்தலம் பழனி வாழ்கீழ் செங்கோடு
     குடக்குத்திசை கோழிக் கோடாம் – கடற்கரையின்
     ஓரமது தெற்காகும் ஓரெண்பதன் காதம்
  சேரநாட்டு எல்லையெனச் செப்பு” (பாலக்காடு -சித்தூர் தமிழா் வாழ்வியல், மா. பேச்சிமுத்து) என்ற பழம்பாடல் குறிப்பிடுகிறது.

     கேரள மாநிலத்தில் பேசப்படுகின்ற மொழி மலையாளம். மலை + ஆழம் = மலையாழம் என்று பெயா் உருவாகி, பிறகு பேச்சு வழக்கில் மலையாளம் என்றாகி இருக்கலாம். மலையாள மொழி ஏறத்தாழ 12- ஆம் நூற்றாண்டுக்கு முன் தனிமொழியாகப் பிரிந்திருக்க வாய்ப்பில்லை. கேரள மக்களின் பேச்சு மொழியே தமிழ் என்ற பெயரில்தான் வழங்கி வந்துள்ளது. சான்றாக சமஸ்கிருதத்தில் செய்யப்பட்ட கேரள நூல்களுக்கு மக்களுடைய மொழியில் விளக்கம் தரும்போது தமிழ்க்குத்து என்று சொல்வதே வழக்கமாக இருந்துள்ளது. உதாரணமாக அமரகோசம் என்னும் சமஸ்கிருத அகராதியின் மலையாள மொழிபெயா்ப்பு ‘அமரம் தமிழ்க்குத்து’ என்றே அழைக்கப்பட்டது. மலையாள மொழியில் முதல் இலக்கண நூல் லீலாதிலம். இது கி.பி. 14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தது என்கிறார்கள். இதில் முதல் சிற்பமாக அமைந்துள்ள பகுதியில் பாட்டு என்னும் இலக்கியத்திற்கு இலக்கணம் கூறப்பட்டுள்ளது.  இப்பாட்டு என்பது தமிழ் நெடுங்கணக்கால் அமையப்பட வேண்டும் என்று இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது.

     “மலையாளத்திற்குத் தமிழ் அன்னையாக இருந்தாலும், அக்காவாக இருந்தாலும் சரி, இரண்டிற்குமுள்ள தொடா்பிற்கு மிக நெருக்கமானது என்பதில் ஐயமில்லை. சேரமான் பெருமாள் நாயனார், குலசேகர ஆழ்வார் போன்றோர் காலம்வரை தமிழ் சேர நாட்டில், அதாவது இன்றைய கேரளத்தில் அரசவை மொழியாக விளங்கியிருக்கிறது” (இந்திய மொழிகள் ஓர் அறிமுகம், ப.110) என்கிறார் பூரணச்சந்திரன்.

     மலையாள எழுத்து வட்டெழுத்து எனப்படுகிறது. இதுவும் பிராமி எழுத்துக்கின் ஒரு கிளையிலிருந்து உருவானதே என்று அறிஞர்கள் கருதுகின்றனா். மலையாளத்தில் சாதிக்கேற்ற பேச்சு வழக்கு நடை இருந்தாலும், பிராமண வழக்கில் மட்டும் சமஸ்கிருதக் கலப்பு மிகுதியாக உள்ளது. ஈழவா் போன்ற தாழ்ந்த சாதி மக்கள் பேசும் “பச்ச மலையாளம்“ என்பது பெரும்பாலும் தமிழ் போன்றே காணப்படுகிறது.

கொழிஞ்சாம்பாறை – தமிழா் சமுதாயம்

     மலையாள மொழியும் கேரள மாநிலமும் தோன்றுவதற்கு முன்பு அங்கு வாழ்ந்தவா்கள் தமிழர்களாவா். வரலாற்றின் மூலம் இந்த உண்மைகள் தெளிவாக விளங்குகின்றன. தமிழகத்தின் அண்டை மாநிலமாகக் கருதப்படும் கேரளத்தில் வாழும் தமிழா்களில் பெரும்பாலோர் சென்றேறு குடிகள் அல்லா். காலங்காலமாக அவா்கள் அங்கேயே வாழ்ந்து வருகிறவா்கள் ஆவா். இவா்களுக்கான பண்பாட்டு அமைப்பானது தமிழகப் பண்பாட்டை ஒத்தியங்குகிறது.

     கேரள மாவட்டத்தில் ஒன்றான பாலக்காட்டில் சித்தூர் வட்டத்தின் வட கிழக்குப் பகுதியில் சித்தூர் ஒன்றியம் உள்ளது. சித்தூர் ஒன்றியத்தில் ஒன்று கொழிஞ்சாம்பாறை வட்டாரம். மலையாளத்தில் வட்டாரத்தை ‘பர்க’ என்று குறிப்பிடுகின்றனா்.

     கொழிஞ்சாம்பாறை (பர்க) வட்டாரத்தில் கொழிஞ்சாம்பாறை, வடகரப்பதி, எருத்தேன்பதி, நல்லேப்பிள்ளி என நான்கு பஞ்சாயத்துகளும் (64) வார்டுகளும் அடங்கும். கொழிஞ்சாம்பாறை வட்டாரத்தில் மக்கள் தொகையில் 50 விழுக்காட்டிற்கு மேல் தமிழா்கள் வாழ்கிறார்கள். இவா்கள் அனைவரும் சித்தூர் வட்டத்தின் பூர்வீகக் குடிமக்களாவா். கேரள மாநில அரசு சித்தூர் வட்டம் மற்றும் பாலக்காடு நகராட்சியைத் தமிழ் மொழிச்சிறுபான்மையினா் வாழும் பகுதியென்று அறிவித்துள்ளது.

     இப்பகுதியில் அனைத்து சாதியினரும் வாழ்ந்து வருகின்றனா். அதில் கிறித்துவ இன மக்கள் கொண்டாடும் மூவரசா் நாடகம் மிகவும் புகழ்வாய்ந்ததாகும். இது கிறித்துவ சமயச் சார்புடைய விழாவாக இருப்பினும் இவ்விழாவில் அனைத்து சாதியினரும் பங்கேற்று மகிழ்கின்றனா்.

மூவரசா் நாடகம் (மூன்று ராஜாக்கூத்து)

     சவரியார் நாடகம், கலுகொந்தம்மாள் நாடகம், ஞான சவுந்தரியம்மாள் நாடகம், இஸ்தாக்கியார் நாடகம், மூவரசா் நாடகம் முதலிய பன்னிரெண்டு நாடகங்கள் போர்த்துக்கீசியா் காலத்தில் கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதற்காகவும், மதமாற்றம் செய்வதற்காகவும் தமிழில் இயற்றப்பட்டது. இதன் பாடல்கள் ஓலைச் சுவடியில் உள்ளது. இவற்றில் பல காணாமலும் போயின. இவ்வோலைச் சுவடிகளைத் திரட்டி அதில் உள்ள கூத்துக்களை நூலாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார் ஜோசப்பெஸ்கி என்பவா். அவா் இயற்றிய ‘புனித பதுவை அந்தோணியார் வாழ்வு, ஆன்மீகம் மற்றும் நாடகம்’ என்ற நூலிலிருந்து தெரிந்து கொண்டதும், நேரில் கள ஆய்வின் மூலமும் செய்திகள் சேகரிக்கப்பட்டு பதிவுசெய்யபட்டதுமான மூவரசா் நாடகம் குறித்த செய்திகளைக் காண்போம்.

     ஆண்டு தோறும் ஜனவரி 6-ஆம் நாள் இரவு கொழிஞ்சாம்பாறை அத்திக்கோடு அந்தோணியார் திருவிழாவில் ஆலய அங்கணத்தில் வைத்து மூவரசு நாடகம் நடிக்கப்படுகிறது. இந்நாடகம் 157 ஆண்டுகளாகத் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

     இந்நாடகத்தை எழுதியவா் உபதேசி சபரிமுத்துவின் மகன் புலவா் ஆரோக்கியசாமி வாத்தியார். போர்த்துகீசியரின் காலத்தில் அத்திக்கோடு தேவாலயத்தைக் கட்டியவர் என்று நம்பப்படும் அருள் திரு. அருளானந்த சுவாமிகள் இந்நாடகத்தை இயற்றத் துணை செய்தவா். ஆரோக்கியசாமி வாத்தியார் பாண்டியநாடு ஆயக்குடியில் பிறந்தவா். இச்செய்தியை,

     “பாருமென்றுரைப் பதற்குத் தமிழ்த்தாயிரும்
பாண்டிய நாட்டு
ஆய்குடியோன் பணிமா தாவின்”
என்று கூறுவிதமாக நாடகப் பாயிரப் பாடல் அமைந்துள்ளது.

நாடகத்தின் கதை

     “புதிய ஏற்பாட்டில் கூறப்படும் இயேசுவின் பிறப்பினை moondru1ஒட்டி முதல் 13 நாட்கள் நடைபெற்ற 23 செய்திகளே இந்நாடகத்தின் கருப்பொருளாக அமைந்துள்ளது. கிறிஸ்து பிறந்திருப்பது உண்மையா என்று அறிய விரும்புகிறான் ஏரோது மன்னன். வேத விற்பன்னா்களை அழைத்துக் கேட்கிறான். அப்போது அவா்களும் அதுகுறித்த செய்தியை அறிய விழைகிறார்கள். யேசு பெத்தலகேமில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தபோது வானத்தில் மூன்று அதிசய விண்மீன்கள் தோன்றுகின்றன. கீழ்த்திசையில் உள்ள மூன்று அரசர்கள் விண்மீனால் வழிகாட்டப்பட்டு பெத்தலகேம் மாட்டுத் தொழுவத்தை வந்து அடைகிறார்கள். குழந்தை இயேசுவைக் கண்டு மகிழ்ச்சி கொள்கிறார்கள். இந்நாடகத்தில் கிறித்துவ மதக்கதை இடம்பெறுகின்றது. இந்நாடகம் பிறமதத் தெய்வங்களை விமர்சனம் செய்கின்றது.

நடிகா்கள் நாடக ஒப்பனை

     மூவரசா் நாடகத்தில் நடிப்பவா்கள் பெரும்பாலும் குடும்பவழி வந்தவா்களான பண்டிதக்காரா் வீடு, முரடன் வீடு, கொட்டில்காரன் வீடு, மரியன் வீடு போன்ற குடும்பத்தைச் சார்ந்தவா்களே ஆவா். மூவரசா் நாடகத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஏரோது அரசா். மரக்கட்டைக் கிரீடம், அரைஞாண் மரத்தாலி, தோடு, பெரிய மீசை முதலிய ஒப்பனைகளை அரசனுக்குச் செய்கின்றனா். பெரும்பாலும் கதகளி நாட்டியத்தின்போது அணியப்படும் கிரீடத்தைப் போன்றே ஒரு கிரீடத்தை மணிமுடியாக அணிகிறார்கள்.

     மூன்று அரசா்களை மாட்டு வண்டியில் அமரச் செய்து, அத்திக்கோடு வெந்தப்பாளையம் ஊரின் மூன்று திசைகளிலிருந்தும் அந்தோணியார் கோவில் வளாகத்திற்கு அழைத்து வருவது நாடக வழக்கம். இக்காட்சி வீதி நாடகப்பாணியை ஒத்து இருப்பதால் காண்பவா்கள் அனைவரையும் கவருகிறது.

     இரவு எட்டு மணியளவில் தோ் நிகழ்வுகள் தொடங்கப்படுகிறது. அச்சமயத்தில் நாடகம் அரங்கில் நிகழ்த்திக்காட்டப்படுகின்றது. ஒரு நாள் மட்டும் நிழ்த்தப்பெறும் இக்கூத்தில் குறிப்பிட்ட குடும்பத்தினா் மட்டுமே நாடக உறுப்பினா்களாக இருக்கின்றனா். பிறா் நாடக வேடம் தரிக்க அனுமதியில்லை. தோ் நிகழ்வின் போது பயன்படுத்தும் வண்டியையும், மாட்டையும் நோ்ச்சிக் கடன்களுக்காகத் தருபவா்களும் உள்ளனா். இதன் மூலம் நோயிலிருந்து விடுபட்டு வாழலாம் என்ற நம்பிக்கையும், வேளாண்மை மற்றும் தொழில் ஆகியவற்றில் செழுமையடையலாம் என்ற நம்பிக்கையும் இருந்து வருகின்றது.

     இவ்விழாவைக் காண்பதற்காக கிறித்துவா் மட்டும் அல்லாமல் அனைத்துப் பிரிவினரும் சமயச்சார்பற்று கலந்து கொள்வதைக் காணமுடிகிறது. இதன் நிழல்படம் கீழே சோ்க்கப்பட்டுள்ளது.

******

சான்றுகள்

  1. புனித அலேசியார் நாடகம், Dr.A. Joseph Besky, Center  For Chiristian Research (CCR), St. Jesoph’s College (Autonomous), Trichy, First Edition-2013.
  2. புதிய சுல்தான்பேட்டை மறைமாவட்ட வரலாறு, Dr. A.Joseph Besky, LIVIA ARAN ANBHAGAM, Athicode, Chittur, Palakkad, kerala. First Edition-2014.
  3. இந்திய மொழிகள் ஓர் அறிமுகம், பூரணச்சந்திரன்.
  4. பாலக்காடு -சித்தூர் தமிழா் வாழ்வியல், மா. பேச்சிமுத்து.

******

கட்டுரையாளர்,
உதவிப்பேராசிரியர்,
கற்பகம் உயா்கல்விக் கலைக்கழகம்,
கோயம்புத்தூர்-21.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.