தமிழ்த்தேனீ

கற்பனையான ஒரு பதிவு இது, பெரும் யோகிகளும் ஞானிகளும் இந்த சம்சார பந்தத்தை அறுத்துக்கொண்டு இறைவனை அடைய மிகவும் மனப்பக்குவம் தேவை என்று சொல்கிறார்கள்.  பலர் ஏதேனும் துன்பம் வந்தாலோ என்னை ஏன் இறைவா இப்படி சோதிக்கிறாய் அழைத்துக் கொண்டு போய்விடு என்பார்கள், அழைத்துக் கொண்டு போய்விடு என்று சொல்பவர்கள் எல்லாம் மனப்பூர்வமாகவா சொல்கிறார்கள் , அது அவ்வளவு எளிதா என்று சிந்தித்தேன், அதனால் வந்த கற்பனை இது .

“ வர்லாம் வா  “   சிறு கதை

*இப்போ என்னோட வரியா மானுடனே வர்லாம் வா என்றது அமானுஷ்யக் குரல்
அட மறு படியும் ஆரம்பிச்சிட்டியா நான் கொஞ்சம் பலகீனமான உடனே எங்கேருந்தோ வந்து வர்லாம் வா வர்லாம் வான்னு கூப்பிட ரெடியாக காத்துகிட்டு இருக்கே , மத்த நேரத்திலே நீ எங்கே இருக்கே என்ன செய்யறே ஒண்ணுமே புரியமாட்டேங்குது

நானும் ரொம்பக் காலமா நீ யாரு எங்கே இருக்கே என்னதான் செஞ்சிண்டு இருக்கே அப்படீன்னு ஆராய்ஞ்சிண்டே இருக்கேன் இது வரைக்கும் ஒரு சின்ன ஆதாரம் கூட கிடைக்கலே
தவஸ்ரேஷ்டர்களும், முனிவர்களும், யோகிகளும், சித்தர்களும் பக்தி செஞ்சா போதும், பாவம் பண்ணாம இருந்தா போதும் ,கூடிய வரைக்கும் புண்ணியம் செய்யுங்க உன்னை எளிதா அடையலாம்ன்னு காலம் காலமா சொல்றாங்க , அவங்களாலே கூட உன்னை அவ்ளொ எளிதா நெருங்க முடியலே.

ஆனா பக்திமான்லேருந்து சக்திமான் வரைக்கும் நிரூபிக்கிறாங்க பணம் இருந்தாத்தான் உன்னை அடைய முடியும்னு. யார் பணத்தை அதிகமா சேத்து வெச்சு பதுக்கி வெக்கிறாங்களோ அவங்களை யாராவது ஒருத்தன் உன்கிட்ட அனுப்பறான். இல்லேன்னா அவங்களுக்கு நீயே தரிசனம் குடுக்கறே , உண்டியல் ரொம்பினா போதும்னு அப்பிடியும் இல்லேன்னா நேரிலேதான் பாக்க முடியலையேன்னு ஏங்கிப் போயி கோயில்லே வந்து சிலாரூபமாவாவது பாக்கலாம்னு பாத்தா அங்கேயும் பணம் இருந்தாத்தான் அனுமதிக்கறாங்க, ஆனா நிறைய பணத்தை சேமிச்சு வைக்கறவன் எல்லாரையும் அவங்களே வாசல் வரைக்கும் வந்து பூரணகும்பம் வச்சி அழைச்சிட்டுப் போயி யாரும் தொடக் கூடாதுன்னு எழுதிப் போட்டிருக்கற த்வஜஸ்தம்பத்தையும் தொட்டுக்கோங்க தொட்டு கும்பிடுங்க என்று அனுமதிச்சு , கர்பக் கிருஹம் உள்ளேயே அழைச்சிட்டுப் போயி உனக்கே அவங்க தரிசனம் காட்டறாங்க ,

நீயும் அவங்களைப் பாக்கறே இன்னும் அதிகமா பணம் தர, அதிகமா பதவி தர,, செல்வம் செல்வாக்கு எல்லாம் தர, இது என்னடான்னு ஆச்சரியப்பட்டா மறு நாளே செய்தி வருது உன்னையே கடத்திட்டாங்க பணத்துக்காகன்னு. ஒண்ணுமே புரியலே கிருஷ்ணா நாராயணா .

ஆனா எங்களை மாதிரி நடுத்தர வர்க்கம்  நடுத்தெரு வர்க்கம் மாதிரியானவங்களை பதவியைப் பறிச்சு பணத்தைப் பறிச்சு பலவிதமா சோதிச்சு எங்களை பலகீனமாக்கி அப்பிடி பலகீனமான நேரத்திலே வர்லாம் வா வர்லாம் வான்னு கூப்புடுறியே இது நியாயமா கிருஷ்ணா நாராயணா
எனக்கு இன்னமும் கொஞ்சம் கடமை இருக்கு அதை முடிச்சிட்டு வரேன் என்றார் மானுடன்.

இதோ பாரு எப்பவும் கேள்வி கேட்டுகிட்டே இருக்காதே , பதில் சொல்றது கஷ்டம் , அப்பிடியே நான்பதில் சொன்னாலும் உனக்கு அதைப் புரிஞ்சிக்கறது கஷ்டம், அதுனாலே நானே நேரிலே வந்து கூட்டிகிட்டு போறதெல்லாம் ரொம்பப் பெரிய சமாச்சாரம் ,அது உனக்கு புரியலே நான் கூப்புடும் போது வந்துட. இல்லேன்னா உனக்குதான் கஷ்டம் என்றான் கிருஷ்ணன்.

அதெல்லாம் அப்புறமா பாத்துக்கலாம் இப்போதான் எனக்கு பேரன் பொறந்திருக்கான் நான் அவனைக் கொஞ்ச வேண்டாமா பிறகு வருகிறேன் என்றார் மானுடன்

சரி உன் இஷ்டம் ஆனால் பீஷ்மருக்கு நான் ஒரு வரம் கொடுத்தேன் அவர் எப்போது என்னிடத்துக்கு வரவேண்டுமோ அப்போது வரலாம் என்று , அதுபோன்ற அருமையான வரத்தை பல யுகங்கள் கழித்து இப்போது உனக்கு கொடுக்கிறேன்., ஆனால் அந்த வரத்தை சரியாக உபயோகித்துக் கொள் . இப்போது நான் செல்கிறேன் என்றபடி அமானுஷ்யக் குரல் மறைந்தது.

அப்போதிலிருந்து அவர் யோசிக்கத் தொடங்கினார் வந்த நல்ல வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டோமோ , இந்த உலகத்திலே இருந்து அப்படி என்ன சாதிக்கப் போகிறோம் ? பரம்பொருளை அடைய தவம் இருக்கிறார்கள், நான் பரம்பொருளே என்னை நோக்கி வந்து மனமிறங்கி அழைக்கும் போது அதைவிட முக்கியமாய் வேறெதையோ நினைத்துக் கொண்டு நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விட்டிருக்கிறோமே,

நல்ல வேளை பூர்வ ஜென்ம புண்ணியம் பரம்பொருள் நம் மேல் கோபப்படாமல் நம் இஷ்டத்துக்கு நாம் நினைக்கும் போது வரலாம் என்று வரம் கொடுத்திருக்கிறது
இந்த வரத்தை எப்படி உபயோகிப்பது வீணாக்காமல் என்று மிகவும் கவனமாக கையாண்டு உபயோகிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இது வரை வாழ்க்கையில் உழைப்பு கவலை சோகம் பிரிவாற்றாமை இழப்பு என்று ஏகப்பட்ட மானுட விதிகளை அனுபவித்தாயிற்று, சரி இனிமேல் சற்று காலமாவது மகிழ்ச்சியுடன் வாழலாம் சந்தோஷங்களை அனுபவிக்கலாம் என்று நினைக்கும் இந்த நேரத்திலே வந்து அழைத்தால் எப்படிப் போவதாம் ! என்று தன்னையே சமாதானப் படுத்திக் கொண்டு வாழத்தொடங்கினார் ,

பேரன் தாத்தா என்றான் அட அதுக்குள்ள உனக்கு பேச்சு வந்துடுத்தா ! உனக்கு இப்பத்தான் உனக்கு ஆயுஷ்ஹோம்ம் செஞ்சு முதல் பொறந்த நால் கொண்டாடினா மாதிரி இருக்கு. ,காலம் ரொம்ப வேகமா ஓடறது நீயே அந்தக் கிருஷ்ணனோட ப்ரசாதம் தானே வரம்தானே , நீ என்னைத் தாத்தான்னு கூப்படறதே “ செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே “ ன்னு மஹாகவி பாரதியார் பாடின பாட்டு நியாபகத்துக்கு வருது.

மஹாகவி பாரதியார் 39 வயசுக்குள்ளே கண்ணன் என் காதலன்னு கண்ணனை அடைஞ் காதல்ன்னா என்னான்னு நிரூபிச்சுட்டார். ஆனா வாழ்ந்த அந்த குறுகிய காலத்துக்குள்ளே எத்தனையோ அவதிகள் பட்டும் அதற்கு நடுவே நல்லதைச் செய்து நல்லதைப் பேசி நல்லதைப் பாடி சாகாவரம் அடைஞ்சார், உலகப் புகழ் அடைஞ்சார் . எத்தனை காலம் வாழ்கிறோம் என்பது முக்கியமே இல்லை இறந்த பின்னும் வாழ்கிறோமா என்பதே முக்கியம்னு நிரூபிச்சார், உனக்குத் தெரியுமோ என்றார் மானுடன்.

குழந்தை தாத்தா என்றது மறுபடியும் , ஆமாண்டா நான் தாத்தாதான் ஆனா பாரதியார் எனக்கே தாத்தா என்றார் . குழந்தை தன் பொக்கை வாய் திறந்து ஏதோ புரிந்தாற்ப் போல் சிரித்துவிட்டு மறுபடியும் நீ தாத்தா என்றது .

ஆமா நான் தாத்தா நீ பேரன் என்றார் மானுடன் அவருக்குள் ஏதோ ஒரு மாற்றம் ! அட நாம எப்போ சாகணும்னு நெனைக்கிறோமோ அப்போ சாகலாம்னு வரம் கொடுத்தானே மாயக்கிருஷ்ணன் , இது வரமா அல்லது அவரே நினைக்காத நேரத்திலே மஹாகவி பாரதியாரை கையைப் பிடிச்சு உரிமையோட வா போகலாம்ன்னு கூட்டிண்டு போனானே அது வரமா !

என்ன இருந்தாலும் நாம சாதாரண மானுடன்தானே அதுனாலேதான் கண்ணனே வந்து கூப்புடும்போது போகாமே இருந்துட்டோம் கண்ணன்தான் நாம் எப்போ நெனைக்கிறோமோ அப்போ வர்லாம்னு வரம் கொடுத்திருக்கானே , சரி இப்போ முதல் வேலையா நாம் எப்போ போகணும்னு தீர்க்கமா முடிவெடுக்கணும்னு யோசிக்க ஆரம்பித்தார்.

ஒரு பேரன் பொறந்துட்டான் இப்பிடீ யோசிச்சுகிட்டே இருக்கும் போதே நாலு பேரன் ஒரு பேத்தின்னு பிள்ளை , பெண்களுக்கு குழந்தைகள் பொறந்து எல்லாரோடையும் கொஞ்சி மகிழ்ந்தாச்சு , இனிமே என்ன எப்போ வேணா வர்ரதுக்கு நான் ரெடி , நீ எப்போ வரமுடியுமோ அப்போ வந்து என்னைக் கூப்பிட்டுண்டு போ நான் தயாரா இருக்கேன் என்றபடி ஈசிசேரில் சாய்ந்து மனக்கண்ணால் கிருஷ்ணனைப் பார்க்கத் தொடங்கினார்,

எனகுத் தெரியும் கிருஷ்ணா நீ வருவே “ வர்லாம் வா வர்லாம் வா “ என்று வர்லாம் வா என்னும் ஸ்லோகத்தையே நாராயண மந்திரமாய் நினைத்துக் கொண்டு சொல்ல ஆரம்பித்தார். திடீர்ன்னு யாரோ அவரைத் தூக்கிண்டு போறாமாதி உணர்வு, ஓ வந்துட்டியா கிருஷ்ணா நீதான் என்னைத் தூக்கிண்டு போறியா என்று கண்ணை விழித்துப் பார்க்க முயன்றார்.

எங்கிருந்தோ ஒரு குரல் டாக்டர் சார் பேஷன்ட் கண் முழிச்சிட்டார் , அவருக்கு நினைவு வந்துடிச்சு என்று ஒரு செவிலித்தாயாரின் குரல் கேட்டது. மருத்துவர் வந்து மானுடரே கண்ணைத் திறங்க , உங்களுக்கு ஒண்ணும் இல்லே பயப்படாதீங்க, நீங்க பொழைச்சிகிட்டீங்க என்றார்.

அட கிருஷ்ணன் இன்னும் வரலியா என்றார், அவர் வாயருகில் காதை வைத்துக் கேட்ட மருத்துவர் எல்லாரும் வெளியேதான் இருக்காங்க , பயப்படாதீங்க நான் கிருஷ்ணனை வரச் சொல்றேன் என்றபடி வெளியே சென்று மானுடன் பொழைச்சிட்டார் பயப்படவேண்டாம், உள்ளே போயி பாக்கலாம்
என்றார்,

அப்பா பயப்பட ஒண்ணுமில்லே இப்போ நல்லா ஆயிட்டீங்க . அப்பா நீங்க ஈசீசேர்லே சாஞ்சுண்டு இருந்தீங்களே அப்போ உங்களுக்கு வேர்த்துக் கொட்டித்து, மூச்சு விடமுடியாமே அவதிப் பட்டீங்க , அதுனாலேதான் இங்கே கூட்டிண்டு வந்தோம், இப்போ டாக்டர் சொல்லிட்டார் இனிமே பயப்பட ஒண்ணுமில்லே உங்களுக்கு இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமா நடந்தாச்சு என்றார் கிருஷ்ணன்,

அப்போ அந்தக் கிருஷ்ணன் வரலியா என்றார் மானுடன் .

இன்னும் அப்பாவுக்கு மயக்கம் சரியா தெளியலே என்றான் அவர் மகன் கிருஷ்ணன்
ஆமா எனக்கு மயக்கம் தெளிஞ்சு போச்சுப்பா என்றார் பலகீனமாக அப்பா இப்போ நீங்க ஒண்ணும் பேசவேண்டாம் நன்னா ரெஸ்ட் எடுக்கணும்னு டாக்டர் சொல்லி இருக்கார் என்றான் கிருஷ்ணன். ஹே கிருஷ்ணா நான்தான் வரேன்னு சொல்லிட்டேனே ஏன் வந்து என்னைக்கூட்டிண்டு போக மாட்டேங்கற என்றார் மானுடன். அப்பா இன்னிக்கிதான் சரியாயி மயக்கம் தெளிஞ்சிருக்கு இன்னும் ஒரு வாரத்திலே கூட்டிண்டு போயிடறேன் வீட்டுக்கு என்றான் கிருஷ்ணன்,

ஏன் கிருஷ்ணா அம்மா எங்கே என்றார் மானுடன் . உங்களுக்கு சரியாகனுமேன்னு அம்மா வேண்டாத தெய்வமில்லே, அதோ அங்கே நிக்கறா வெக்கப்பட்டுண்டு, என்றான் கிருஷ்ணன், எதுக்குடா வெக்கம் அவளை வரச்சொல்லு என்றார் மானுடன் சரி நான் வெளியிலே போயி அம்மாவை அனுப்பறேன் என்று வெளியே போனான்
திடீரென்று மயக்கும் குழலோசை கேட்டு திரும்பிப் பார்த்தார் மானுடன் அங்கே கிருஷ்ணன் ஒரு கள்ளப் புன்னகையுடன் வர்லாம் வா வர்லாம் வா மானுடனே என்று கையை நீட்டினான் .

உள்ளே வந்த மானுடனின் மனைவி பக்கத்திலே உக்காந்து நீங்க பொழைக்கணுமேன்னு நான் வேண்டாத தெய்வம் இல்லே என்றாள், தழுதழுப்புடன். உங்க கிட்ட ரகசியமா ஒரு விஷயம் சொல்லணும் உங்களுக்கு மறுபடியும் ஒரு பிள்ளை பொறக்கப்போறான் என்று வெட்கப்பட்டாள்,

அதிர்ந்து போய் கிருஷ்ணனைத் திரும்பிப் பார்த்த மானுடன் என்ன கிருஷ்ணா ஒரு ரெண்டு நிமிஷத்துக்கு முன்னாடி வரக் கூடாதோ , கேட்டியா என் பொண்டாட்டி சொன்னதை , எனக்கே வெக்கமா இருக்கு , ஆனாலும் நீ எல்லாரும் சொல்றா மாதிரி மாயக்கண்ணன்தான்.

சரி எனக்காக இன்னொரு தடவை ஒரே ஒரு சந்தர்ப்பம் குடுத்துதான் பாரேன் நிச்சயமா நான் உன்னோட வந்துருவேன் . அடுத்த தடவை நீ மறுபடியும் வாயேன் அப்போ நான் உன்னோட வந்துடறேன்  சரியா என்றார் மானுடன்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.