கபீர்தாசரின் கவிதைகள் – (2) தமிழாக்கம்:  க. பாலசுப்ரமணியன்

க. பாலசுப்பிரமணியன்

kabir-424x282

 

துயரத்தில் இறைவனைத் தேடும் மனிதா

சுகத்தில் அவனை ஏன் தேடுவதில்லை ?

சுகத்தில் அவனை நீ நாடிவிட்டால்

துயரமே என்றும் வருமோ உனக்கு ?

 

வாசம் இங்கே வாசம் அங்கே

வாசம் தேடும் கஸ்தூரி மானே

வாசம்  வருவது உள்ளிருந்து

விளங்கிடும் நாளும் வந்திடுமோ ?

 

குருவும் இறைவனும் ஒன்றாய் நின்றால்

அடைவேன் சரணம் யாருடைப் பாதம் ?

குருவின் பாதங்களே முதலில் சரணம்

குருவே காட்டினான் இறைவன் பாதையை !

 

சொல்வாய் என்றும் சொற்கள் இனியவை

சொல்லில் ஆணவம் சுத்தமாய் நீக்கி

சொல்லின் இனிமையை சுகமாய் உணர்ந்து

சொல்வாய் சொற்கள் இனிமையைப் பகிர்ந்து.

 

ஒரே உரையில்  உண்டோ இருவாள்கள்

ஒரே இடத்தில்  உண்டோ அன்பும் அகந்தையும் ?

ஒரே முகத்தில் கண்களும் காதும்

பார்த்திடும் கண்கள் என்றும் கேட்டதில்லை !

 

நாளை செய்வதை இன்றே செய்

இன்று செய்வதை இப்பொழுதே செய்

நல்லவை  செய்திட நாட்களைத் தேடாதே

நாளைய பொழுதை யாரே அறிந்தார் ?

 

செடியினில் மொட்டுக்கள் முனங்கின மெதுவாய்

மறைந்தே வருகிறான் மலர்கள் பறித்திட

மணமாய்  மலர்ந்த மலர்கள்  மறைந்திடும்

மலர்ந்திடும் நமக்கும் நாளை வந்திடும் !

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *