குறளின் கதிர்களாய்…(194)
செண்பக ஜெகதீசன்
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனைய துடைத்து.
-திருக்குறள் -1010(நன்றியில் செல்வம்)
புதுக் கவிதையில்…
பிறர்க்குதவும்
சிறப்புமிகு செல்வர் பெற்ற
சிறிய வறுமை,
மழை கொடுத்து
மண்ணை வாழ்விக்கும்
வான்மேகம்
வறுமையுற்றது போன்றதே…!
குறும்பாவில்…
பண்புமிகு செல்வரின் சிறுவறுமை,
உலகைக் காக்கும் மழைமேகம்
வறுமையுற்றதற்கு ஒப்பாகும்…!
மரபுக் கவிதையில்…
செல்வப் பயனே ஈதலெனும்
சிறப்ப றிந்த செல்வரவர்,
இல்லை யென்றே சொலுமளவில்
இடராய் வந்த சிறுவறுமை,
எல்லை யில்லாக் கருணையாலே
எங்கும் பாரை வளமாக்கும்
வல்லமை மிக்க வான்மேகம்
வறுமை யுற்றது போலாமே…!
லிமரைக்கூ..
சிறப்புமிகு செல்வரின்சிறு வறுமை
யதற்கு ஒப்பானதே, உலகை வாழவைக்கும்
வான்மேகத்தின் மழையிலா வெறுமை…!
கிராமிய பாணியில்…
செல்வம் செல்வம் நல்ல செல்வம்,
அடுத்தவுருக்குக் குடுத்துவாழ்ந்தா
அதுதான் செல்வம் நல்ல செல்வம்..
அப்படிக் குடுக்கற நல்லவனுக்கு
வறும வந்தாலும் சின்னதுதான்,
அது
ஒலகத்த வாழவைக்கிற
வானத்து மேகம் மழபெய்யாம
வறுமயானது போலத்தான்..
அதால
செல்வம் செல்வம் நல்ல செல்வம்,
அடுத்தவுருக்குக் குடுத்துவாழ்ந்தா
அதுதான் செல்வம் நல்ல செல்வம்…!