வ.சுப.மாணிக்கனாரின் வள்ளுவம் கூறும் விழுமியங்கள் – 2

0

-முனைவர் சு.இரமேஷ்

பொருட்பயனிலை

அறிவு அறிவுக்கே, கல்வி கல்விக்கே, பொருள் பொருளுக்கே என்னும் கூற்று நடைமுறைக்கு ஒவ்வாது. கற்றதனால் ஆய பயனென் கொல் (2) என்னும் அறிவினான் ஆகுவது உண்டோ (315) என்னும் கல்வி அறிவுகளுக்கு காட்டுவதுபோல “செல்வந்தான் பெற்றத்தாற் பெற்ற பயன்” (524) ஒன்று உண்டு எனக்காட்டுகிறது. தமிழில் பொருள் பற்றிக் குறிப்பில் கோட்பானது ஈதலும் தூய்த்தலும் ஆகும்.

உலகத்தில் இன்னும் சிலர் கடன்பட்டு இரவல் பட்டும் குடும்பக் கடன்போல் கொடைக்கடன் செய்வோர் உள்ளனர். தாய்க்குக் கொடுத்தால் அவள் தன் மகளுக்கு கொடுக்குமாப்போல பெற்றதையெல்லாம் பிறர்க்கே ஈயும் அன்பு நிறை நெஞ்சினர் அரிதாக நம்மிடை உள்ளனர் என்பதை,

இன்னோர்க்கு என்னாது என்னொடுஞ் சூழாது
வல்லாங்கு
வாழ்தும் என்னாது நீயும்
எல்லார்க்கும்
கொடுமதி மனைகிழ வோயே!
பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்துவேற்
குமணன் நல்கிய வளனே” – (புறம்.163)

என்ற இப்பாடல் கொடைபற்றிய திறனை அறிவிக்கின்றது.

“வினை செய்தவன் தானே முழுப்பயனையும் நுகரவேண்டும் என்பதற்கு ஒப்ப, செல்வம் ஈட்டியவன் முழுவதும் தூய்க்க வேண்டும் என்னும் கொள்கையினர் தானுண்டு, தன் வாய்உண்டு, தன் உடல் உண்டு, தன்னையே நினையும் தடிப்பினாராய்ப் பெற்றோர் உறவினர் சுற்றும் அற்றவர் போலத் தூய்க்கும் அவாவினர் இவரைக் கண்ட வள்ளுவர்.

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே
தமியர் உணல்” (229)

என்று கூறும் ஆசானின் கொதி நெஞ்சம். இன்மை இடும்பைக் கிரந்து தீர்வாம் (1063) என்று இரப்பு பற்றிச் சினந்த புலவர், உணவுக் குவியல் இருந்தும் ஈயார் என்று காட்டுவார். கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ் (1078) என்று குறிப்பிடுகிறார். (வள்ளுவம், ப.82) கொடா நோன்பிகளுக்குக் கயவர் என்று பெயர் சூட்டினார்.

தனித்து உண்பது அவா உணர்ச்சிக்கும் அச்ச உணர்ச்சிக்கும் அடிப்படை. “அறத்தான் வருவதே இன்பம்” (39) மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம்  (65), ஈத்துவக்கும் இன்பம் (228) போன்றவை ஆசான் காட்டுகின்ற  நல்இன்பங்களாகும்.

அதே நேரத்தில் துய்க்கும் இன்பத்தை கட்டுப்படுத்துவர் அல்லர் திருவள்ளுவர், “அருள் என்னும் அன்புஈன்குழவி” (757) என இயற்கையை ஆசிரியர் ஒப்புவர் தூய்ப்பின்பம் அறிபவனே பிறர்க்கு ஊட்டின்பம் அறிவான். “தான் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு” (399) என்றபடித் தன்னின்பம் கொண்டு பிறரை நுகர்விக்க வல்லவனாவான். அதே நேரத்தில் அறனொடு பட்ட இன்பத்தூய்ப்பை குறைத்துக் கொள்ளச் சொல்வார் வள்ளுவர் என்பதை குறிப்பிடுகின்றார். (வள்ளுவம், ப.84)

ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடில்லை
போகாறு
அகலாக் கடை”  – (478)

என்று வருவாயைக் கடந்து வறுமைக் கோட்டிற்குள் அடி எடுத்துவையாதே என்பது இதன் கருத்தாகும். வரவு முழுவதையும் தூய்த்து இன்ப வாழ்வு நடத்துதலை ஆசிரியர் உடன்படுகிறார் என்பதை மூதறிஞர் குறிப்பிடுகின்றார்.

மனை முழுதும் நிரம்பிய பொருள் இருந்தும் குறைந்துவிடும் என்று கருதி எடுத்து உண்ண மறுப்பவது கொடுத்து உண்க என்று எப்படிக் கூறுவது தன் வயிற்றை வஞ்சிக்கும் இவன் உலகிடக் கிடப்பதோர் கடமை இல்லை என்ற சினத்தால்,

வைத்தான் வாய்சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான்  
செயக்கிடந்தது இல்” – (1001) என்பர்.

திருக்குறள் கற்கும்போதே ஒழுகும் எண்ணத்தார்க்கு முழுதும் கற்றபின் ஒழுகும் எண்ணம் உண்டாகாது அதுபோல பொருள் வருங்காலை செலவிடான் வந்த பின்னும் செலவிட நினையான். பூதங்காக்கும் பொருள் என்பது மொழி என்கின்றார்.

ஆற்றின்  அளவறிந்து ஈக  அது பொருள்
போற்றி  
வழங்கும்  நெறி” (477)

அளவறிந்து ஈவதே வள்ளுவம் எனத்துணிக என்று வாழ்நூல் செய்தவர் வள்ளுவர். அனைத்தும் ஈக என்று பொறுப்பின்றிக் கூறாமல் அளவறிந்து ஈக என்று நினைந்து சொல்லறிந்து மொழிந்தனர் என்பதைக் குறிப்பிடுகின்றார். – (வள்ளுவம், ப.91)

கொடைக்கடன்

கொடைக்கடன் ஒப்புரவும் ஈகையும் இருவகைப்படும். பொதுக்கொடை என்பது ஒப்புரவு (தனிக்கொடை) ஈகையாம் ஒப்புரவு என்கின்ற விளக்கு ஒ –பல்லுயிருக்கும் ஒத்த, புரவு –கொடை – அல்லது காப்பு என்பது பொருள்.

“பேரறிவாளன் திருஊருணி நீர் நிறைந்தற்று” (215)

“மாரிமாட்டு என்னாற்றுங் கொல்லோ உலகு” (211)

எனப் பரந்த பொதுவுவமைகளை உயர்திணையுள்ளும் அஃறிணையுள்ளும் பல்லுயிர்க்குப் பொருந்திய பெருங்கொடை என்பதுவே ஒப்புரவு அதிகாரத்தின் கருத்து ஆகும். (வள்ளுவம், ப.84)

இன்மை நிலை

உலகில் இருப்போரும் உள்ளனர் இல்லாதோடும் உள்ளனர். நம் முன்னோர்கள் காட்டுமிராண்டியாக வாழ்ந்தபோது தாய்வழிச் சமூகமாக வாழ்ந்தனர். அனைத்தும் அனைவருக்கும் என்னும் பொதுவுடைமைக் காலமாக இருந்தது. காலப்போக்கில் உணவைப் பங்கீட்டுப் பிரச்சனையால் தனியுடமையும் ஆணாதிக்கம் உருவாயிற்று. வளர்ந்து தொழிலாளி முதலாளி ஆகிய இருவருக்குமான கொள்கைப் போர் நடந்துகொண்டிருக்கின்றது. ஆனால் தனியுடைமை என்று வரலாற்றுக் காலந்தொட்டு நீண்டும் கொண்டுதான் இருக்கின்றது. தனிவுடைமை என்பது இல்லாதார்க்கும் இருப்பவருக்குமிடையே சுய நல அரசுகளின் உதவியுடன் இடைவெளியானது நீண்டுகொண்டே இருக்கும் இருப்போர் இல்லாதோரின் பிரிவுகளும்  பிரச்சினைகளும் நீடிக்கும் ஒற்றுமையில்லாது மன்னுயிர்க்கெல்லாம் தீமைதவிர எதுவும் மிஞ்சாது. இதுவே தனிவுடைமையின் கொடுஞ்செயலாகும். இத்தகைய கொள்கைகொண்ட நாடுகளில் அன்றும் ஒருவன் பொருள் ஈட்டுவதற்கு எந்த ஒரு வரையறை இல்லை. “கோடி தொகுத்தார்க்கும்” (377) என்றபடி ஈட்டியவையெல்லாம் தொகுத்துக் கோடற்கு வரையறை இல்லை. பண்டைக் காலத்தில் செல்வர்களுக்கென தனி வரி விதிப்புமில்லை. இறை எல்லார்க்கும் ஒப்பவே வகுக்கப்பட்டது. பெருஞ்செல்வந்தர்பால் நேரடிப் பொருள்கேட்பது கொடுங்கோன்மை என்று அறிஞராலும் எண்ணப்பட்டது.

வோலொடு நின்றான் இடுவென்றது போலும்
கோலொடு
நின்றான் இரவு” (552)

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன்
கோற் கீழ்ப்படின்” (558)

போன்ற குறள் தனியுடைமை மக்களின் பற்று மனப்பான்மைக்கு அன்றும் இன்றும் சான்று என்கிறார்.  – (வள்ளுவம், ப. 104)

சிலரிடம் மறைந்திருக்கும் பொருளைச் சமப்படுத்த வேண்டி பெருங்கொடையான ஒப்புரவு பண்பினை தனியதிகாரமாக வகுத்தனர்.

”ஒப்புரவின் நல்லபிற பெறல்” (213)  என்றும் ஈதல் நன்று என்றும் குறிப்பிட்டுள்ளார் என்பதைக் குறிப்பிடுகின்றார்.

ஒப்புரவும் ஈகையும் தனியுடைமை நாட்டிற்குக் காப்புத்தூண்கள் ஆவன. தனியுடைமை நாடுகளில் பொதுவுடைமை வழிகளைச் சிறுகச்சிறுக கையாள்கின்றன. (வள்ளுவம், ப.106) என்று கூறுவதால் பொதுவுடைமை கொள்கைதான் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாகும் என்பதை குறிப்பிடுகிறார்.

வள்ளுவர் வறுமை நிலைமையைத் துய்த்தாரோ அறியேன் ஆயினும் வறியோர் துன்பத்தினை  நன்கு அறிந்தவர் என்பதற்கு, “இன்மையின் இன்மையே இன்னாதது” (1041) இன்மை என ஒரு பாவி (1042), அறம் சாரா நல்குரவு (1047) எனக் துடிப்புள்ளம் கொண்டு வறுமையின் நிலையைப் புலப்படுத்துகின்றார். – (வள்ளுவம், ப. 108)

வறியோர் வேறு தாம் வேறு எனப் பிரித்து நிற்றார் அல்லர் என்பதற்கு,
இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போதும் நிரப்பு (கு.1048) என்ற குறள்வழி மனத்துடிப்பை எடுத்துரைக்கினர்.

இன்மை நிலையைத் துடைப்பது உடையார் கடன் பிறர் மேற்றாக வைத்து ஆசான் கூறிய அறநிலையாகும். ஒருவன் பசித்திருந்தால்,

உறுபசியும் ஓவாப்  பிணியும் செறுபகையும்
சேராது  
இயல்வது  நாடு” (734) என்ற குறளின்வழிப் பசியின்மை, பிணியின்மை, பகையின்மை என்னும் முக்கூற்று உடையது. இம்மூன்று உடைய நாடே நம்  முன்னோர்கள் காணவிழைந்த உலகம் என்கிறார். –  (ப.117)

பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும்
வளனும் சுரக்க” – (சிலம்பு) என்று இளங்கோ பசிபணியைப் பற்றி பாடியுள்ளார்.

அறிவுப் பிறப்பு

மக்களுள் அறிவுப் பிறப்பும் உண்டு அறிவிலாப் பிறப்பும் உண்டு என்று கூறுவது வள்ளுவ முரண்பாடாகும். ஒரு சாதிக்கே அறிவு, ஆண்மை, பண்பு, நாகரிகம் இருக்கும் என்பது குறுகிய மனம் அறிவில் எழுந்த ஆகாக் கொள்கையாகும்.

அறிவுப்பிறப்பால் வாய்த்த நாம் பெற்ற உடம்பால் குறையுடை யோமாயினும் அவ்வுடற்குறை நம் வாழ்வில் இடையூறும் இல்லை. ஆனால், வாழ்க்கை இழந்தவர் எனக் கருதுவது மானுடப்பிறப்பை அவமதிப்பதாகும்.

உள்ளது கொண்டு இல்லது நிரப்பிக் கொள்ளும் நினைப்பரிய வன்மை நம் அறிவின் இயல்பு என்பது வள்ளுவம்,

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின்
உள்ளக் கெடும்” (421)

அறிவு அற்றம் காக்கும் கருவி (வள்ளுவம், ப.421)

என வரும் குறள்களே சான்றாகும் என்கிறார் மூதறிஞர். (வள்ளுவம், ப.132)

மக்கள் வாழ்விற்கு நிறையுடலை அரிய பெருந்துணை என்றோ குறையுடலைத் தடுப்பரிய இடையூறு என்றோ கூறுவது வள்ளுவம் அன்று. நல்வாழ்விற்கு அறிவாட்சியே அடிப்படை என்பதை,

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடையரேனும்
இலர்” (430) என்னும் இக்குறளே தனிச் சான்றாகும்.

மக்கட்கு ஒழுக்கம் அறிவு, கல்வி, ஊக்கம், முயற்சி என்னும் பிரிவில்லா இயற்கை நலங்களே பிறழ் வாழ்வு நலங்கள் என்பது வள்ளுவத்தின் கருத்தாகும். எல்லாரும் அறிவுத்தன்மை உடையவர்களே அதனை ஆட்சிப்படுத்தினால் எல்லாரும் நலம் பெறுவர்.

அரியன கற்று மனக்குற்றம் அற்றவர் என்று நாம் எண்ணிய பெரியோர் மாட்டும் அறிவின்மை காணப்படும் சிறிதும் கற்றறியான் கண்ணும் பெருநலம் பயக்கும் இந்நிலையை அறிந்தவர் வள்ளுவர்,

செயற்கரிய செய்வார் பெரியார் சிறியர்
செயற்கரிய
செய்கலா தார்” (26)

என்னும் குறளின்வழி பெரியவர் சிறியர் என்பன ஒருவர் சுட்டாது இலக்கண வகையில் தோன்றிய காரணப் பெயர்கள். பெரியவர் என்றோ, சிறியவர் என்றோ பிறப்பில் ஒரு பகுப்பு இல்லை என்பது வள்ளுவம். பெரியாராயினர் இழிந்த செயலைச் செய்தால் சிறியராவார். சிறியவராயினும் அரிய செயலைச் செய்தால் பெரியராகவார் எனக் குறிப்பிடுவதை உணர்த்துகின்றார். (வள்ளுவம், ப.145)

முடிவுரை

வள்ளுவரின் நெஞ்சமானது அவரின்  குறளோடு ஒன்றிணைந்தது செயல்வடிவமே. வள்ளுவரின் நெஞ்சமாக அமைந்திருக்கின்றது என்றுரைக்கிறார்.

திருக்குறட்குப் பொதுமை நிலைக்களம் அல்ல மக்கள் மனமே நிலைக்களமாக அமைகின்றது. நிலைப்பன்மைக்கேற்ப அறப்பன்மை வகுப்பது திருக்குறளின் முறையாகும். அவரவர் வாழ்நிலைக்கேற்ப பொருத்திக் கற்பதே குறட்கல்வி நெறியாக அமைகிறது.

பொருளை ஈட்டலும் வேண்டும் தூய்த்தலும் வேண்டும். அகத்தூய்மையும் பொருள் ஒழுக்கம் அகங்கை புறங்கை போன்றன என்கிறார்.

அறத்தான் வருவதே இன்பம் என்றும் பசியை மாற்றும் ஈகையாரும் செய்ய வேண்டுவன என்றுக் குறிப்பிடுகின்றார்.

முயற்சியே உயிர்நிலை, செயலுக்குவரும் அறங்களைக் கூறுவதே வள்ளுவம் எனவும் யாருக்கும் ஒல்லும் நெறிகாட்டுவதே வள்ளுவம் என்று கூறுகின்றார்.

பொதுமைப்படுத்துதலாம் வறுமை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு.  மக்களுள் சிறியவர் பெரியவர் என்பதை உணர்த்தினாரில்லை; மாறாக நடத்தையினால் ஒருவரின் தன்மை மாறுகிறது என்பதை வள்ளுவம் உணர்த்துகிறது.

வள்ளுவனிஸம் என்ற கொள்கை உருவாக்க எவ்வகையில் இவை வழிவகுக்கும் என்பதற்கான மேலாய்வுக்கு எடுத்துச் செல்ல இக்கட்டுரை பரிந்துரைக்கின்றது.

******

கட்டுரையாளர்
உதவிப் பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை,
அ.வ.அ.கல்லூரி (தன்.)
மன்னன் பந்தல்,     மயிலாடுதுறை.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *