செய்திகள்

சிதம்பரத்துக்குக் கப்பல் திருவாதிரை 02.01.2018

reginald-cooray02

திருவாதிரைக்குச் சிதம்பரம் அருள்மிகு நடராசப் பெருமான் கோயிலுக்கு ஈழத்துச் சைவர்கள் காங்கேயன்துறைத் துறைமுகத்திலிருந்து அண்மையில் உள்ள தமிழகத் துறைகளுக்குக் கப்பல் வழி செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு 2016 மார்கழியில் யாழ்ப்பாணம் நல்லூர் நாவலர் விழாவில் வடமாகாண ஆளுநர் மேதகு ரெஜினால்டு கூரே அவர்களிடம் கேட்டுக்கொண்டேன்.

மிக ஆர்வத்துடன் வடமாகாண ஆளுநர் மேதகு ரெஜினால்டு கூரே அவர்கள் என் வேண்டுகோள ஏற்றார்கள். இலங்கை அரசின் அனைத்து மட்டங்களிலும் அவரது கடும் முயற்சியால் 20.12.2016இல் இலங்கை அரச அநுமதி பெற்றார்கள்.

பின்னர் இலங்கை அரசு இந்திய அரசுக்கு எழுதி ஒப்புதல் கேட்டது. 21.12.2017இல் இந்திய அரசின் ஒப்புதலை இலங்கை அரசுக்குத் தெரிவிக்க, இலங்கை வெளிவிவகார அமைச்சும் வடமாகாண ஆளுநர் மேதகு ரெஜினால்டு கூரே அவர்களுக்கு அறிவித்தது.

திருவாதிரைக்குச் சிதம்பரத்துக்குக் கப்பல் வழிபோக நான் வேண்டுகோள் விடுத்தேனாயினும் அனைத்து உரிமங்களையும் பெற்று இலங்கை இந்துக்களுக்கு நல்வாய்ப்பாக அமைய முயன்றவர் நல்லுள்ளம் கொண்ட வடமாகாண ஆளுநர் மேதகு ரெஜினால்டு கூரே அவர்களே.

இலங்கை அரசின் அலுவலகங்களிலும் இந்திய அரச அலுவலகங்களிலும் அநுமதிக்குரிய ஆவணங்கள் அலுலவலர்களின் மேசைகளில் தங்காது விரைந்து பயணிக்க நான் வடமாகாண ஆளுநர் மேதகு ரெஜினால்டு கூரே அவர்களுக்கு ஒத்துழைத்தேன்.

கப்பல் பயண ஒழுங்குகளை ஒருங்கிணைக்கும் பணியில் வடமாகாண ஆளுநர் மேதகு ரெஜினால்டு கூரே அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். 2.1.2018 திருவாதிரை நாளன்று சிதம்பரத்துக்கு இலங்கை அடியார்கள் போகும் வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளோம். அருள்மிகு நடராசப் பெருமானை அவனருளாலே அவன்தாள் வணங்கும் வாய்ப்பைப் பெறுவோம்.

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

மார்கழி 9, 2048 (24.12.2017)

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க