க. பாலசுப்பிரமணியன்

வாழ்க்கைக் கல்வி

வாழ்ந்து பார்க்கலாமே!

புத்தாண்டு பிறக்கின்றது! இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற பாடல் எங்கிருந்தோ காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. நித்தமும் பிறப்பதா? வேடிக்கையாக இல்லை…? பிறப்பு என்பது ஒரு முறைதானே ?

தத்துவ மேதை ரஜ்னீஷ் கூறுகின்றார் – “நாம் உள்ளிழுக்கும் ஒவ்வொரு மூச்சும் பிறப்புத்தான்; நாம் வெளியிடுகின்ற ஒவ்வொரு மூச்சும் இறப்பின் அறிகுறிதான்”. அறிவியல் கருத்தாக நாம் அலசிப்பார்த்தாலும் நாம் வாழுகின்ற ஒவ்வொரு நொடியிலும் பல்லாயிரக்கணக்கான உயிரணுக்கள் பிறந்துகொண்டிருக்கின்றன; அதே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான உயிரணுக்கள் இறந்துகொண்டிருக்கின்றன. அதே போல் நம்முடைய மனதில் ஆயிரக்கணக்கான எண்ணங்கள் பிறந்துகொண்டும் மடிந்துகொண்டும் இருக்கின்றன. எனவே வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு நாள் மட்டுமல்ல, ஒவ்வொரு கணத்திலும் புதிதாய்ப் பிறந்துகொண்டுதான் இருக்கின்றோம்.

இந்த வாழ்க்கையை நாம் எப்படி வாழவேண்டும்? இதற்கு ஏதேனும் வழிமுறைகள் இருக்கின்றனவா என்று சற்று அலசிப் பார்த்தால், வாழ்க்கை என்பது  சமூக, பொருளாதார, சூழ்நிலை சார்ந்த ஒரு வழிமுறை. காலந்தொட்டு பல சமுதாயங்கள், பல நாடுகளில் தங்கள் தட்ப வெட்ப சூழ்நிலைகளுக்கேற்ப தங்கள் வாழ்க்கை முறைகளை வகுத்துக்கொண்டு வந்தது மட்டுமின்றி அதற்குத் தகுந்தவாறு வாழ்க்கை பற்றிய தங்கள் நோக்கங்களையும் கருத்துக்களையும் கோட்பாடுகளையும் மாற்றிக்கொண்டும் வந்திருக்கின்றன.

வாழ்க்கையைப் பற்றி பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன?

வாழ்க்கை என்பது ஒரு போராட்டமா?

வாழ்க்கை என்பது ஒரு விளையாட்டா ?

வாழ்க்கை என்பது ஒரு முயற்சியா ?

வாழ்க்கை என்பது ஒரு வியாபாரமா ?

பல அறிஞர்கள் வாழ்க்கையின் கோட்பாடுகளைப் பற்றி பலவித கோணங்களில் பல கருத்துக்களை அள்ளி வீசியிருக்கின்றனர். இத்தனை கருத்துக்களுக்கு நடுவிலும், அறிவுரைகளுக்கும் வழிகாட்டுதல்களுக்கு நடுவிலும் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள நாம் பல முயற்சி செய்துகொண்டிருக்கின்றோம். வாழ்க்கைக் கல்வி என்பது காலந்தொட்டு வீடுகளிலும் சமுதாய மேடைகளிலும் பேசப்பட்டும் அலசப்பட்டும் வரப்பட்டுள்ளன. இருந்தும் இன்றைய சமுதாயத்தில் வாழ்க்கைக்கு கல்வியின் அவசியத்தை மிக அதிக அளவில் நாம் இன்றியமையாததாகக் கருதுகின்றோம்.  காரணம் ?

சில தோல்விகளைச் சந்திக்க முடியாமல் இளைய சமுதாயம் தற்கொலையைத் தானமாகப் பெற்றுக்கொண்டிருக்கின்றது.

சில ஆசைகளுக்காக இந்தச் சமுதாயம் தங்கள் நேர்மையை விலை பேசிக்கொண்டிருக்கின்றது.

சில முன்மாதிரிகளால் தவறான தலைமையைப் போற்றிக்கொண்டிருக்கின்றது.

சில சுயநலங்களுக்கு முன்னே மனிதநேயம் மண்டியிட்டுக்கொண்டிருக்கின்றது.

இந்தச் சூழ்நிலையில் கல்விச்சாலைகளில் வியாபர நோக்கம் பரவலாகப் பரவியிருக்கும் நேரத்தில் கல்வி என்பது மாணவர்களை வெறும் தேர்வுகளுக்குத் தயாரிப்பதற்காக மட்டும் கருதப்படுகின்றது. கல்வியின் சீரிய நோக்கமான மனித நேயம், நாட்டுப் பற்று, திறன் வளர்த்தல், கலாச்சாரப் பண்புகள் ஆகியவற்றை ஓரம்கட்டி மாணவர்களைத் தேர்வுக்குத் தயாரிக்கும் வியாபாரம் பெருகிக் கொண்டிருக்கின்றது. இதில் கல்விச்சாலைகளை மட்டும் குறைகூறிப் பயனில்லை. வீடுகளில் பெற்றோர்களின் பங்கும் நுட்பமாக கவனிக்கப்படவேண்டியது அவசியம்.

வாழ்க்கையின் இலக்கு வெறும் உணவு, உடை மற்றும் இருக்கும் இடத்திற்காகவும், பணத்தை ஈட்டி சேமிப்பதற்காக மட்டுமின்றி பல சீரிய கருத்துகளை உள்ளடக்கி உள்ளது. வருங்காலத்தில் மாறி வரும் சமுதாயச் சந்தையில் நமது இளம் சந்ததியினர் வெற்றி பெறுவார்களா? அவ்வாறு வெற்றி பெற வேண்டுமானால் என்னென்ன வாழ்க்கைத் திறன்கள் தேவைப் படுகின்றன? அவைகள் எங்கெங்கு கிடைக்கும் ? அவைகளை அடைய நாம் என்னென்ன முயற்சிகள் செய்ய வேண்டும்?  இவற்றைக் கருத்தில் கொண்டு இளம் சந்ததியினருக்காக எழுதப்படும் இந்தத் தொடர் முந்தய “கற்றல் ஒரு ஆற்றல் ” என்ற தொடரின் பின்னோடியாக வளர்கின்றது. இதன் அடிப்படைக் கருத்து  “கற்றல்” பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மட்டும் நடப்பதல்ல : வாழ்க்கையின் ஒவ்வொரு படிகளிலும் கற்றல் நடந்து கொண்டிருக்கின்றது என்பதை உறுதிசெய்வதே. இன்றைய மூளை நரம்பியல் வல்லுனர்களின் ஆராய்ச்சியின்படி “கற்றலின் தொண்ணூறு விழுக்காடு பள்ளிகளுக்கு வெளியே நடந்துகொண்டிருக்கின்றது.” அது முறைசாராக் கற்றலாகவே நடந்து வருகின்றது. இது நம்முடைய வாழ்க்கையின் வெற்றிக்கு மிகப்பெரிய அடித்தளமாக அமைகின்றது. இதன் பல கோணங்களையும் உலகளாவிய பல கருத்துக்களையும் நாம் தொடர்ந்து பார்க்கலாம்.

தொடர்வோம் ..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *