Advertisements
Featuredஇலக்கியம்பத்திகள்

அன்றும் இன்றும் [3]

-இன்னம்பூரான்
ஜனவரி 3, 2018

அன்பினால் இவ்வுலகத்தை ஆட்படுத்தவேண்டுமானால், முதல் படியில் கால் வைப்பது மக்கள்தான். அரசனோ, யதேச்சதிகாரியோ, ஜனநாயகத்தின் தலைவனோ, யாராக இருந்தாலும், அவன் ஒரு கருவிதான்.  ‘யதா ராஜா ததா பிரஜா’/ ‘யதா பிரஜா ததா கூஜா’/ ‘யதா கூஜா ததா பூஜா’  போன்ற பொன்வாக்குகள் ‘ஈயத்தை பாத்து இளித்ததாம் பித்தளை’ என்ற மாதிரி பொலிவு இழந்து பல நூற்றாண்டுகள் கடந்து போயின; இறந்தும் போயின, அண்ணாகண்ணன். ‘தெய்வாம்சம்’ பொருந்திய வம்சாவளி அரசர்களின் கரகாட்டம், தற்காலம் கூடுவிட்டுக்கூடு பாய்ந்து, அரசியல்வாதிகளின் குடும்பநிதிசேகரம் பொருட்டு, மக்கள் நலம் என்ற ‘தோண்டியை போட்டுடைத்த’ கம்பங்கூத்தாடியாகப் பேயாட்டம் ஆடுகிறது. மஹாகவி பாரதியார் பாடிய வகையில் ‘பாப்பானுக்குத் தொப்பை சுருங்கியதோ இல்லையோ’ பிரதிநிதித்துவம் என்ற ஜனநாயகத்தூண் உடைந்தே போனமாதிரி தான் நாடகங்கள் நடந்தேறுகின்றன. இவ்விடம் ‘நாடகமே உலகம்’ என்று கூறினால், அது அடக்கி வாசிப்பது எனலாம். பித்தலாட்டமே நம் உலகம் என்றால் அது மிகையல்ல.

இந்தியா விடுதலை அடைந்தபோது நான் பாலகன். தந்தையின் நாட்டுப்பற்று எனக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்தது. அவர்தான் என் தகவல் மையம். சில நிமிடங்களுக்கு முன்னால் தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்கள் ஏப்ரல் 28, 1942 அன்று தேகவியோகம் ஆனது பற்றிப் படித்தபோது, அந்த நிகழ்வை என்னிடம் 9 வயதில் என் தந்தை சொன்னது நினைவில் இருப்பதை கவனித்தேன். தேகவியோகம் என்ற சொல் பசுமரத்தாணி அடித்தது போல் நினைவில் இருக்கிறது. தமிழ்த்தாத்தாவின் பெயர் நினைவில் இல்லை. ஒரு காரணத்துடன் தான் நான் இதைச் சொல்கிறேன். பெற்றோர்களும், ஆசிரியப் பெருமக்களும் பசுமரத்தாணி அடிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். சிலவரிகள் கல்வியைப் பற்றி இப்போதைக்கு. பெற்றோர்களுக்குள் கல்வி, திரவியம் ஆகியவை ஒரே மாதிரியாக அமைவதில்லை. திரவியம் இல்லாதவர்களுக்கு நிதி உதவி செய்யலாம். கல்வி இல்லாத பெற்றோர்களுக்கு யார் வழிகாட்டமுடியும்? சில கிராமங்களில், பள்ளி ஆசிரியர், தபாலதிகாரி, கோயில் அர்ச்சகர் போன்றோர் ஓரளவு வழி காட்டமுடியும்; செய்யவும் செய்தார்கள். தற்காலம் ஏராளமான பள்ளி மாணவர்கள்; ஏராளமான படித்து முன்னேறிய மனிதர்கள்.ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு வழிகாட்டி/மார்க்கபந்து அமைவது நடக்கக்கூடியதுதான். அதற்கு பிறகு வருவோம்.

அன்பு ஒரு தளை. அது எல்லா ஜீவராசிகளிடமும் தென்படும் நற்பண்பு. காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு. புலியோ, சிங்கமோ, நம் வீட்டு நாயோ தன் குட்டிகளைப் பொத்திப் பாதுகாப்பதை நாம் அறிவோம். அது தான் அன்புத் தளை. நமது சமுதாயத்தில் மக்கள் அன்பினால் பிணைக்கப்பட்டால், கட்டப்பஞ்சாயத்தும் வராது; கந்து வட்டியும் மிரட்டாது. ஆனால், அவையும், சாதி மத பேதமும், இன பேதமும், நிற பேதமும், பாலியல் கொடுமைகளும் புதியவை அல்ல; அவை காலம்காலமாக கொடுமை நிகழ்த்தியுள்ளவை என்பதை நினைக்கும்போது, என் மனம் மிரண்டு போகிறது. அன்பு ஒரு மாயையா? அல்லது அன்பும், காழ்ப்புணர்வும் உடன் பிறந்தவர்களோ? இன்பமும் துன்பமும் மாங்காய்ப் பச்சடியாக கலந்து வருவதுதான் வாழ்வின் இயல்போ என்ற கவலைகள் எழுகின்றன.

அன்பே சிவம் என்று இயங்கும் நிகழ்வுகளையும் காண்கிறோம், அவை சொற்பமாக இருந்தாலும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.ஸேரா கியரிங் (Sarah Gearing) என்பவருக்கு ஓர் அரிய வியாதி ~ சிதறிக்கொண்டிருக்கும் மூளை. பல அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டிய அத்தியாவசியம். இல்லையேல் அவருடைய உயிருக்கு ஆபத்து. அவரை முன்பின் அறியாத ஆயிரக்கணக்கான சராசரி மனிதர்கள் மொத்தமாக 12 கோடி ரூபாயை, எறும்பு போல் சிறுகச்சிறுகச் சேமித்துக் கொடுத்தார்கள். அவரும் சில அறுவை சிகிச்சைகள் முடிந்து, புன்சிரிப்புடன் நன்றி கூறுகிறார் என்று இண்டிபெண்டண்ட் என்ற ஆங்கில இதழ் கூறுகிறது. எங்கிருந்து வந்தது அந்த அன்பு?

(தொடரும்)

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

Comment here