திவாகரின் இமாலயன் – நூல் விமர்சனம்

1

அண்ணாகண்ணன்

Himalayan - இமாலயன்
Himalayan

இந்தோ சீன எல்லையில் உள்ள புலிக்குன்று (டைகர் ஹில்ஸ்) என்ற இடத்திற்கு ஒரு முறை, சுற்றுலா நிமித்தம் சென்றேன். எங்கும் பனி, எதிலும் குளிர். உச்சி முதல் உள்ளங்கால் வரை மூடிக்கொண்டுதான் சில மணி நேரங்கள் அங்கே செலவிட்டேன். அதற்குள் உடல் வெடவெடத்தது. சிறிது நேரம் இருந்த எனக்கே இப்படி இருந்தால், அங்கேயே காலம் முழுவதும் நின்று காவல் காக்கும் வீரர்களின் நிலையை என்னவென்று சொல்வது? அந்தப் பனி மலையில், போரும் செய்ய வேண்டுமானால் அது எத்தனை கடினமானது? ஆனால், 1962ஆம் ஆண்டு அப்படித்தான் இந்திய – சீனப் போர் நடைபெற்றது. இந்தப் பகீர், திடீர், ஜிலீர் அனுபவத்தைத்தான் ஒரு புதினமாக வடித்துள்ளார் திவாகர்.

இந்திய – சீனப் போர் என்பது, வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் ஒரு வரியில், வாக்கியத்தில் நாம் கடந்து செல்லும் ஒன்று. ஆனால், அதற்குப் பின்னே எத்தனை சதிகள், சம்பவங்கள், சாகசங்கள் நடைபெற்றுள்ளன? எந்தக் காரணத்திற்காக இந்தப் போர் நடைபெற்றது? இரு தரப்பின் பலம், பலவீனம் யாவை? யாரெல்லாம் யாருக்குப் பின் அணி திரண்டார்கள்? யாருடைய ஆதரவு யாருக்கு? போர் நடவடிக்கைகளின் போது, உள்நாட்டிலும் உலக நாடுகளிலும் நடந்தவை என்னென்ன? எனப் பலவற்றையும் இந்தப் புதினம், போகிற போக்கில் தொட்டுச் செல்கிறது.

இவ்வளவு சம்பவங்களுக்கு இடையில் ஒரு விறுவிறுப்பான கதையைப் பின்னி, உண்மையிலேயே பின்னிப் பெடலெடுத்து விட்டார் திவாகர். இந்தக் கதையின் நாயகன், இந்திய ராணுவத்தில் பணியாற்றும் ஒரு குரூப் கேப்டன். அவர் மூலமாக முன்னகரும் கதையில் பல்வேறு திருப்பங்கள், இணையாக அவரது காதல், அவருக்கு நடக்கும் விபத்து, அதற்குப் பிறகான ஆள் மாறாட்டம் என அந்தக் காலத்துத் திரைப்படம் பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது.

இமயமலை, திபெத், சீனப் பகுதிகளின் பெயர்கள், அங்கு வாழும் பழங்குடி இனங்களின் பெயர்கள், அவர்களது மொழிகளின் பெயர்கள், அந்தந்த இடத்துக்கு ஏற்ப, பின்புலத்துக்கு ஏற்ப நபர்களுக்குச் சூட்டப்பெற்ற பெயர்கள் என ஒவ்வொன்றும் கவனமாகச் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் ஒவ்வோர் அத்தியாயத்தின் தொடக்கத்திலும் அதே காலத்தில் இந்தியத் தலைவர்களும் உலகத் தலைவர்களும் உதிர்த்த மொழிகள், பொருத்தமாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. இது, புதின ஆசிரியரின் கடின உழைப்பைக் காட்டுகிறது.

கதையில் இமயமே ஒரு பாத்திரமாக இடம் பெற்றுள்ளது. அதன் அமைப்புகள், பாதைகள், நீரோட்டங்கள், அங்குள்ள மக்கள், அவர்களின் வாழ்க்கை என அனைத்தும் நேரில் பார்ப்பது போலவே விவரிக்கப் பெற்றுள்ளன. இந்தக் கதையின் நாயகி, பாறைகளைப் பற்றிப் படித்தவள் என்ற விவரம், கதையில் சரியானபடி பயன்படுத்தப் பெற்றுள்ளது. அவளே பின்னர், ஆண் பாறை, பெண் பாறை எனக் கண்டறிந்து, ஒரு புதிய நீர்த்தடத்தை உருவாக்குவது, ஆசிரியரின் செம்மையான கதைப் பின்னலைக் காட்டுகிறது.

இந்திய ராணுவத்தில் ஆள் பற்றாக்குறை இருந்த காரணத்தால், கடல் போன்ற சீன ராணுவத்தைச் சமாளிக்க, நம் எல்லையோரப் பழங்குடியின இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்தது, அவர்கள் உள்பட, இந்திய வீரர்கள் போர்க் களத்தில் நிகழ்த்திய துணிகரச் செயல்கள், இயற்கையின் அமைப்பைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சாதுர்யம் எனப் பலவும் புதினத்தின் இறுதிப் பக்கங்களைப் பரபரப்பாக்கிவிடுகின்றன. துணிகரமாகப் போரிட்ட இந்திய வீரர் ஒருவருக்குச் சீனப் படையினர் சிலையெடுத்ததும் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.

சீனப் படைகளால் இழப்பைச் சந்தித்த போதும், இந்தியாவின் விமானப் படையைப் பயன்படுத்திக் குண்டு வீசும் யோசனையைக் கதையின் நாயகர் தவிர்க்கிறார். அதற்கு அவர் கூறும் காரணத்தைப் புதினத்தைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

போருக்கு முந்தைய காலக்கட்டத்தைப் பற்றியும் அதற்கு எவ்வாறு இரு நாடுகளும் தயாராயின என்றும் அக்காலத்திய உளவு நடவடிக்கைகள் குறித்தும் புதினம் விரிவாகப் பேசுகிறது. இதே புதினத்தை நேரடியாகப் போர்க் களத்திலிருந்து தொடங்கி, போர் விவகாரங்களை மேலும் விரிவாகக் காட்டியிருந்தால், அது மேலும் பரபரப்பாக இருந்திருக்கும். ஆயினும் நூலாசிரியர் முன்னுரையில் தெரிவித்தபடி, அவர் வேண்டுமென்றே தான் அதனைத் தவிர்த்திருக்கிறார்.

வாசிப்புச் சுவாரசியத்தை விட, தேர்ந்த அற நெறிகளைப் பின்பற்றும் பாத்திரங்களைப் படைத்ததற்காகத் திவாகர் பெருமைப்படலாம். வரலாற்றை இப்படிக் கதையாகப் படிக்கும் போது, அது மனத்தில் சட்டெனப் பதிந்துவிடும். அந்த வகையில் இமாலயன், யாரும் அதிகம் தொடாத கருவைத் தொட்டுச் செல்கிறது. புதின ஆசிரியர் திவாகர் அவர்களுக்கும் வெளியிட்ட பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்தாருக்கு வாழ்த்துகள்.

நூல் கிடைக்குமிடம்:

இமாலயன் (வரலாற்றுப் புதினம்)
ஆசிரியர் – திவாகர்
வெளியீடு – பழனியப்பா பிரதர்ஸ், சென்னை
பக்கங்கள் – 363
விலை – 480
இணையத்தில் வாங்க – https://www.udumalai.com/imalayan.htm

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “திவாகரின் இமாலயன் – நூல் விமர்சனம்

  1. மிக்க நன்றி அண்ணா கண்ணன் அவர்களே.. எப்போதும் இரண்டு வரிக் குறள் போல படித்துப் பழகிய எனக்கு உங்கள் நீண்டகட்டுரை மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *