2018 பொங்கலோ பொங்கல்

இன்று பொங்கல் திருநாள்

என் துணைவியார் விடியற்காலையிலே எழுந்து பொங்கல் பானை வைக்க எல்லாவற்றையும் ஏற்பாடு செய்ய ஆரம்பித்துவிட்டார், நானும் சீக்கிரம் எழுந்து கூடமாட உதவி செய்வோம் என்று ஏதேனும் உதவி வேண்டுமா என்றேன்,

” முதல்லே பல் தேச்சுட்டு காப்பி மேசைமேலே வெச்சிருக்கேன் அதைக் குடிச்சிட்டு கரும்பை எடுத்து நறுக்கி அதை சின்னஞ்சிறிய துணடுகளாக நறுக்கி குடுங்கோ, அதோட அங்கே மஞ்சள் கொத்து வெச்சிருக்கேன் அதையும் சேர்த்து ஒரு கரும்புத் துண்டையும் வெச்சி நன்னா கட்டி அதை அந்தப் பொங்கல் பானையிலே கட்டிக் குடுங்கோ, சீக்கிரம் குளிச்சிட்டு வந்தா நல்லது, இன்னிக்கு பொங்கல் விசேஷமான திருநாள் , சூரியபகவானுக்கு உகந்த நாள் அதுனாலே சூரியனையும் நம்ம முன்னோர்களையும் மனப்பூர்வமா நெனைச்சுக்கற நாள் ,

குளிச்சிட்டு நீங்க வழக்கமா செய்யற தர்ப்பணம் செஞ்சு முன்னோர்கள் கிட்டே வேண்டிக்கோங்க. அதுக்கு தட்டு டம்ளர் எல்லாம் தயாரா வெச்சிருக்கேன், அதுக்கப்புறம் பெருமாள் சேவிக்கலாம், பெருமாள் அறையை நன்னா சுத்தம் பண்ணி பூவெல்லாம் பறிச்சு தட்டிலே வெச்சிருக்கேன் , வெற்றிலை பாக்கு மஞ்சள் பழம் எல்லாம் வெச்சிருக்கேன் , கரும்புத் துண்டத்தை அதிலே வையுங்கோ, அக்‌ஷதை கலந்து வெச்சிருக்கேன்,

சந்தனம் கரைச்சு வெச்சிருக்கேன், தேங்காயை எடுத்து சமபாகமா உடைச்சு அதிலே வையுங்கோ , பூஜைக்கு ரெடியா வெச்சிக்கலாம் , உங்களுக்கு பாத்ரூமிலே துண்டு எல்லாம் போட்டிருக்கேன் நேத்து உடுத்திண்ட பழசோட போயி தொடாதீங்கோ, நம்மோட முன்னோர்களுக்கு மடி ஆசாரத்தோட செய்யணும், பெருமாளுக்கும் சாளிக்ராமத்துக்கும் ஆசாரத்தோட பூஜை புனஸ்காரம் செய்யணும், சீக்கிரம் குளிச்சிட்டு வாங்கோ வந்து உதவி செய்யுங்கோ என்றாள். மூச்சுவிடாமல் ”
நினைத்துப் பார்த்தேன் நாம செய்யறதுக்கு என்ன இருக்கு எல்லாத்தையும் இவளே செஞ்சு தயாரா வெச்சிட்டு நான் ஏதோ உதவறா மாதிரி பேசறாளே இந்தப் பாங்கு நம்ம குடும்பத்திலே நம்மோட இந்திய மண்ணிலே பிறந்து வளர்ந்த இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமான ஒரு பதிவிரதாத் தனமில்லையோ என்று எண்ணும் போது மனம் விகசிக்கிறது.

நம்மைத் தாய்க்குப் பின் தாரமாய் தாங்கி வழிநடத்தி ஆதரவாய்த் தலை தடவி (இந்த தலை தடவிங்கறதுக்கு வேற அர்த்தம் நீங்க எடுத்துண்டா நான் பொருப்பில்லே) சரி அப்பிடியே அர்த்தம் எடுத்துண்டாலும் இதுக்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரான்னு நாம அதுக்காகத்தானே ஏங்கி ஏங்கி எல்லாப் பொண்ணையும் பாத்து அதெல்லாம் கிடைக்காம கடைசியிலே இவளை ( ஒரு நல்ல பொண்ணைக் கல்யாணம் பண்ணிண்டோம் ) ன்னு நெனைப்பு ஓடறது .

அழகாயிருப்பவர்கள் எல்லோரும் கற்பை விலை பேசுகிறார்கள், அமெரிக்காவைச் சேர்ந்த கிசெல்லே வயது 19, மாடல் அழகியான இவர் ஜெர்மன் நாட்டை மையமாக வைத்து இயங்கும் இணைய தளத்திலே தன் கற்பை ஏலம் விட்டிருக்கிறார். அந்தக் கற்பை விலைக்கு வாங்க ப்ரபலமான ஹாலிவுட் நடிகர்கள் தொழிலதிபர்கள், எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்திருக்கின்றனர்.

ஆனால் அரபு நாடுகளில் ஒன்றான அபுதாபியைச் சேர்ந்த ஒரு ஷேக் 15 கோடிக்கு ஏலம் எடுத்து அந்தப் பெண்ணின் கற்பை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறார், இதன் மூலம் அறிவது என்னவென்றால் கற்பின் விலை இன்றைய நிலவரப்படி 15 கோடி இன்னும் உயரலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.. எனும் செய்தியை தினமலர் வாரமலரில் பார்த்தேன்,

ஆக கற்பு என்பது கயவர்கள் மெல்லும் அவலாகிப் போனதில் வியப்பில்லை. ஆண்டாளையும் சாடுவர் எல்லோரையும் சாடுவர் , பாவம் அவர்களுக்கு கற்புள்ள பெண்கள் கிடக்காத ஏக்கத்தை எப்படித்தான் சரிசெய்துகொள்வது.

சரி அதைவிடுவோம் பொங்கல் நன்நாளில் நாம் பொங்கல் பானைக்கு கரும்பும் மஞ்சளும் கட்டுவோம் என்று முடிவுக்கு வந்து ஒரு கயிறை எடுத்து சுத்தம் செய்து பொங்கல் பானையில் மஞ்சளையும் கரும்பையும் கட்டினேன்.

ஏனோ தெரியவில்லை “மாங்கல்யம் தந்துனானேனா மமஜீவன ஹேதுனா” மந்திர கோஷமும் நாதஸ்வரமும் என் மனதிலே உச்சகட்டத்தில் ஒலிக்கிறது,

நமக்கு அழகும் நளினமும் கவர்ச்சியும் நிறைந்த நயன்தாரா, போன்ற பெண்களை காதலிக்க முடிகிறது ஆனால் கல்யாணம் செய்து கொள்ள பாமா ருக்மணி ரேவதி,  வசந்தா ஆனந்தி போன்ற பெண்களே கிடைக்கின்றனர், ஆனாலும் இவர்கள் போதுமைய்யா நமக்கு , (காலத்துக்கும் கஞ்சி ஊத்துவாங்க) நம்மைத் தூக்கிப் போடாமல், இப்போது புரிகிறதா ஆண்டாளின் கற்பு அரங்கன் மேல் காதல் ஆத்ம சமர்ப்பணம் எல்லாம் என்னவென்று.

காலம் முழுவதும் நாம் கட்டிய மஞ்சள் கயிற்றுக்காக நம்மையேக் கணவனாக வரித்து அடித்தாலும் அணைத்தாலும் நம்மையே அடித்து நம்மையே அணைக்கும் இவர்கள்தானே கற்புள்ளவர்கள், ஒப்பனை செய்து கற்பை விற்கும் பெண்கள் நமக்குத் தேவையா ,

வேண்டவே வேண்டாம் என்று இந்தப் பொங்கல் திருநாளில் ஒரு நல்ல முடிவெடுத்து, இவர்கள் செய்யும் பொங்கலில் பால் பொங்கியவுடன் பொங்கலோ பொங்கல் என்று உரக்க கோஷமிட்டு ஆண்டாளையும் அரங்கனையும் விநாயகரையும் வேங்கடவனையும் சூரியனையும் விவசாயிகளையும் எருதுகளையும், பசுக்களையும் , ஏரையும் வயலையும், நெல், அரிசி மஞ்சள் கரும்பு என்று எல்லாவற்றையும் மனதுக்குளே பசுமையாய் நினைத்துக் கொண்டு கொ

கொண்டாடுவோம் பொங்கலோ பொங்கல்
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

அன்புடன்

தமிழ்த்தேனீ

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.