கவிஞர் ஜவஹர்லால்

 

யாரு மில்லா மேடையி லேநான்

நாட்டிய மாடுகின்றேன்; — கேட்க

யாரு மில்லா அவையினி லேநான்

பாடல் பாடுகின்றேன்.

மலரின் அசைவை அதுதரும் மணத்தை

நுகர வாருமென்றேன்; — அந்த

மலரே வாடி உதிர்ந்திடு வரையில்

மனிதர் நெருங்கவில்லை.

தென்னையின் கீற்றுச் சலசலப் பொலியின்

தேனிசை கேளுமென்றேன்; — அங்கே

தென்னையின் அடியில் நிற்பவர் கூடச்

சலசலப் புணரவில்லை.

சாதிக ளெழுப்பும் சச்சர வொலியின்

சத்தம் அடக்குமென்றேன்; — அந்தச்

சாதிகள் இரைச்சல் இன்னிசை யெனவே

சுவைத்தலை யேகண்டேன்.

ஊழல் எனவொரு புற்றுநோய் நாட்டை

உருக்குலைக் குதென்றேன்நான்; — அந்த

ஊழலில் குளித்தே திளைப்பவர் என்குரல்

உதறிடல் கண்டுநொந்தேன்.

யாரு மில்லா மேடையி லாடும்

நாட்டியம் என்னபயன் ? – கேட்க

யாரு மில்லா அவையினி லேஎன்

பாடலால் என்னபயன் ?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *