-இன்னம்பூரான்
11 02 2018

நல்லதோர் வீணை செய்து

nallathor

தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரம் அவர்கள் தமிழுக்கு ஆற்றிய பணி மகத்தானது. அவருடைய நாட்டுப்பற்று ஊரறிந்த தேசபக்தி.  இதழியலை அவர் உரமிட்டு வளர்த்தார். முதல் இதழ் ‘தேசபக்தன்’.  சூது வாது தெரியாத திரு.வி.க. அவர்கள் ஏமாற்றப்பட்டார். இதழ் கை மாறியது. ஆனால் செழிக்கவில்லை. பின்னர் ‘நவசக்தி’. அந்த இதழின் தொகுப்புகளை அவர் கட்டிக் (பைண்ட் செய்து) காப்பாற்றினார். அவையும் தொலைந்து போயின. சில வருடங்களுக்குமுன் அவற்றைத் தேடிஅலைந்து நான் களைத்துப்போனேன். ரோஜா முத்தையா ஆய்வு மையத்தில் ஓர் ஆண்டு மலர் மட்டும் கிடைத்தது.

சில நாட்களுக்கு முன் இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் இதழில் வந்த செய்தி ஒன்று கண்டு என் மனம் நொந்தது.தற்காலம் அதருமமிகு சென்னையின் போரூர் பகுதியில் ‘செட்டியார் அகரம்’ என்ற பெயரில் அடங்கி விட்ட ‘துள்ளம்’ என்ற குக்கிராமம் தான் அவர் பிறந்த ஊர். அவருடைய தந்தை நடத்திய திண்ணைப்பள்ளியில் தான் அவர் தமிழ் பயின்றார். சுப்ரதீப கவிராயர், மு.ராகவையங்கார் போன்ற புலவர்கள் நிறைகுடங்களாகத் திகழ்ந்தனர். இதழாசிரியர் ஆனபின் ஒரு முறை, திரு.வி.க. அவர்கள் பிறந்த மண்ணைக் கண்டுகளிக்க அவர் சென்றார். மூன்று நாள் இரட்டை மாட்டு வண்டிப் பயணம். (இப்போது பஸ்ஸில் [ஓடினால்!] விரைவில் போய்விடலாம். அவருடன் ஆரம்பப் பள்ளியில் படித்த கிராமத்துப் பெண்மணி ஒருவர், அங்கு அவரால் ஆக்கபூர்வமாக ஒன்றும் செய்வது இயலாது என்பதை உணர்த்தி, அவரைச் சென்னைக்கே திரும்பச் சொன்னார். உண்மைதான்! தற்காலச் செய்தி என்ன என்றால், அங்கு அவருடைய இல்லத்தையே ஒரு நூலகமாக மாற்றிய அரசு, ‘பாப்பாத்தியம்மா! மாடு வந்தது’ என்ற கூற்றுக்கிணங்க,

அத்துடன் தன் கைங்கர்யத்தை நிறுத்திக்கொண்டது. கேட்பாரில்லை. நூல்கள் களவு போயின; கிழிந்து போயின. நூற்றுக்கணக்கான நூல்கள் இருந்த இடத்தில் நாற்பது நூல்கள் கூட இல்லை. இந்த அவலம் நேர 16 வருடங்கள் தான் பிடித்தன. அவருடைய நூற்றாண்டு விழா எடுக்கப்போகிறார்களாம். ஆனால், நூலகத்தை விஸ்தரித்துப் பராமரிப்பதை பற்றி ஒரு சொல் கூட பேசப்படவில்லை.

நல்ல வேளை. தமிழ்மரபு அறக்கட்டளையின் சுபாஷிணி இங்கிலாந்தில் இருந்த என்னைப் பத்து வருடங்களுக்கு முன்னால், திரு.வி.க, அவர்கள் எழுதிய நூல்களையாவது மின்னாக்கம் செய்வதற்காகச் சென்னைக்கு செல்லத் தூண்டினார். நானும் விரைந்தேன். திரு.வி.க. அவர்கள் போற்றிய முருகன் அருள் கிட்டியது என்று தோன்றுகிறது. மற்றவர்களின் மறுபதிப்புகளை மின்னாக்கம் செய்ய விரும்பாத எனக்கு, அவருடைய அத்யந்த மாணவர் பேராசிரியர் மு.வரதராசன் அவர்களின் சீடரும், திரு.வி.க. அவர்களின் ‘பெரிய புராணம்’ நூலை ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்ற முனைவர்.அ.நாகலிங்கம் அவர்களின் நட்பு கிடைத்தது; அவரிடமிருந்து திரு.வி.க, அவர்களின் சாது அச்சுக்கூடத்தில் பிரசுரம் செய்யப்பட்ட  மூலநூட்கள் கிடைத்தன. அவற்றின் மின்னாக்கப்  பிரதிகள் செய்யப்பட்டன. அவை அந்த நூலகத்தின் மின்னாக்க நூலகத்தில் உங்களுக்கு இலவசமாகக் கிடைக்கின்றன. பின்னணியில் அக்னிஹோத்ரம் டாக்டர் வாசுதேவன் அவர்கள் (எனக்கு மின்னாக்கம் வாத்தியார்) மிளிருகிறார்.

******

Reference:

http://www.newindianexpress.com/states/tamil-nadu/2018/jan/27/tamiol-nadu-thiru-vi-kas-home-turned-into-library-without-books-1764009.html

சித்திரத்துக்கு நன்றிhttp://1.bp.blogspot.com/_BmyhDEvtwuE/SYrbdaZXmMI/AAAAAAAAAyQ/MkjLwxTtnkE/w1200-h630-p-k-no-nu/nallathor+veenai.gif

******

“…தொல்காப்பியத்தின் மொழிநடையும், உள்ளுறையும் தமிழரின்தொன்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். தொல்காப்பிய மொழி…விழுமிய கருத்துக்களை இழுமென் மொழியாக எளிதில் மலர்விக்கும்…இத்தொன்மை வழிவழி வந்தவர் தமிழராவர். பழந்தூய தமிழரும், வழிவந்த தமிழரும், இடையே குடிபுகுந்து நிலைத்த சிலருஞ் சேர்ந்த ஓரினமே இப்போதுள்ள தமிழினமாகும்…கலப்பு என்பது இயற்கை. உலகில் எம்மொழியும், எந்நாடும் எவ்வினமும் தோன்றியவாறே கலப்பின்றித் தனிமைத் தூய்மையும் என்றும் ஒரு பெற்றியாய் நிலவுதல் அரிது…கலப்பால் வளர்ச்சியே உண்டு…தமிழ்நாட்டில் ஆரியர் தமிழர் பிரிவு பெரிதும் பேசப்படுகிறது… அதை வாழ்விடை ஏன் பாராட்டிப் பகைமை வளர்த்தல் வேண்டும்?…இப்போது தூய ஆரியர் இன்னார், தூயத் தனித்தமிழர் இன்னார் என்று எவரே பிரிக்க வல்லார்?…இயற்கை நிலை இவ்வாறாக, பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ்நட்டில் வாழ்ந்துவரும் ஆரியர்களுக்கும் தமிழர்களுக்கும் கலப்பு ஏற்பட்டிராதென்று கருதுவது மதியுடைமை கொல்! எனவே தூய ஆரியராதல் தூய தமிழராதல் இப்போது இல்லை என்பதை வலியுறுத்துகிறேன்…பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் பூசலையொட்டி வடமொழி தென்மொழிப் பிணக்கும் எழுந்து திருவிளையாடல் புரிகிறது…வடமொழி பாரத நாட்டுக்குரிய பொது மொழி. ’யாதும் ஊரே யாவருங்கேளிர்’ என்னும் விழுமிய கொள்கையுடைய தமிழர் வழிவழி வந்த இக்காலத் தமிழர்  சிறுமைப் பிரிவுகளில் கருத்திருத்தல் அறமாகாது…”

~தமிழ் தென்றல் திரு.வி.க. அவர்கள்   ஜூலை 5: 1928, ஏப்ரல்  10,11,12: 1929 & ஆகஸ்ட் 6 :1932 அன்று ஆற்றிய சொற்பொழிவுகளிலிருந்து.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க