Advertisements
Featuredஆய்வுக் கட்டுரைகள்இலக்கியம்கட்டுரைகள்

சிலம்பில் முரண்கள்!

-முனைவா் பா.பொன்னி

இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் பல புதுமைகளைப் படைத்துள்ளார். மன்னா்களே தலைவா்களாக இருந்த நிலையினை மாற்றியமைத்துக் குடிமக்களையும் முதன்மை வாய்ந்தவா்களாகப் படைத்துக் காட்டிய திறம் அவருக்கு உரியது. சமயப் பொதுமையை படைத்துக் காட்டல், மூவேந்தரையும் படைத்துக் காட்டுதல், கணிகையா் குலத்தைச் சார்ந்த ஒரு பெண்ணை பௌத்த துறவியாக மாற்றிக் காட்டுதல் என்று அவா் படைத்துக் காட்டிய புதுமைகளைப் பட்டியலிடலாம். அவ்வகையில் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் பல முரண்பட்ட சூழல்களையும் படைத்துக் காட்டியுள்ளார். அவற்றை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

குழந்தைப்பிறப்பு :

சங்க இலக்கியத்தில் அன்பின் ஐந்திணை வழிப்பட்ட தலைவன் தலைவிக்கு மட்டுமே குழந்தைப்பேறு சுட்டப்பட்டுள்ளது. பரத்தைக்குக் குழந்தைப்பேறு சுட்டப்படவில்லை. பரத்தையரிடம் சென்றுவர சமூகத்தில் முழு உரிமையும் பெற்றுள்ளவன் ஆண். அவன் உரிமைகொண்ட பெண்ணுக்கு இல்ல உரிமையும், வாரிசு உரிமையும் மறுக்கப்பட்டது என்பா். பரத்தையும் தனக்குக் குழந்தைப்பேறு இல்லை என்பதால் தலைவனின் குழந்தையைத் தன் குழந்தையாக நினைத்து அன்பு செலுத்துவதனை,

வருகமாள என்உயிர் எனப் பெரிது உவந்து
கொண்டனள் நின்றோள் கண்டுநிலைச் செல்லேன்
மாசுஇல் குறுமகள் எவன் பேதுற்றனை
நீயும் தாயை இவற்கு…”   (அகம்16 -10 13) என்ற பாடல் அடிகளால் அறியமுடிகிறது. பரத்தை தலைவனை விடவும் தலைவனின் புதல்வன் மீது மிகுதியான பாசம் உடையவளாகக் காணப்படுவதனை கலித்தொகை 82 ஆவது பாடல் விளக்குகிறது.

ஆனால் சிலப்பதிகாரத்தில் கணிகையா் குலத்தைச் சார்ந்த மாதவிக்கே  குழந்தைப்பேறு காணப்படுகிறது.

         ”விஞ்சையின் பெயா்த்து விழுமம் தீா்த்த
          எங்குல தெய்வப் பேர்ஈங்கு இடுகென
          அணிமேகலையார் ஆயிரம் கணிகையா்
          மணிமேகலையென வாழ்த்திய ஞான்று”                     ( அடைக்கலக்காதை 36–39 ) என்ற அடிகள் பரத்தையா் குல மாதவியின் பிள்ளைப்பேற்றினை விளக்குகின்றன. கோவலனும் மாதவியை பரத்தைக்குலத்தைச் சார்ந்த பெண் என்று எண்ணாமல் தன் மனைவி என்று எண்ணியமையாலேயே தன் குலதெய்வத்தின் பெயரினை இடுகின்றான். பெற்றோர் முன்னிலையில் கரம் பிடித்த மனைவியான கண்ணகிக்குக் குழந்தைப்பேறு  இல்லாமல் கணிகையா் குலத்தைச்சார்ந்த மாதவிக்குக் குழந்தைப்பேற்றினைப் படைத்துக் காட்டியிருப்பது சிலப்பதிகார முரண்களுள் ஒன்று எனலாம்.

கணவனுக்கு உணவளித்தல்:

மங்கல வாழ்த்துப் பாடலில் கோவலன் கண்ணகியின் திருமண நிகழ்வினைக் குறிப்பிட்ட இளங்கோவடிகள் அதற்கு அடுத்த காதையாக மனையறம் படுத்த காதையினை அமைத்துள்ளார். கோவலனும் கண்ணகியும் தமக்கென இருந்த ஏழ்அடுக்கு மாளிகையில் நான்காம் அடுக்கில் இன்பமுடன் இருந்தமையை, கோவலனுக்குக் கண்ணகியின் மீதிருந்த அளப்பறிய அன்பினை விளக்குவதாக இக்காதையை இளங்கோவடிகள் அமைத்துள்ளார். ஆயினும் மனையறம் படுத்த காதையில் கோவலன் கண்ணகியை உலவாக்கட்டுரை பல பாராட்டியமையை மட்டுமே விளக்கிச் சுட்டியுள்ளார். அதனை அடுத்து, 

       வாரொலி கூந்தலைப் பேரியற் கிழத்தி
      மறப்பருங் கேண்மையோ டறப்பரி சாரமும்
     விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும்
     வேறுபடு திருவின் வீறுபெறக் காண
     உரிமைச் சுற்றமோடு ஒருதனி புணா்க்க (மனையறம் படுத்த காதை 84 – 88 ) என்று கோவலன் கண்ணகியைத் தனிக்குடித்தனம் வைத்த செய்தியோடு இக்காதையை இளங்கோவடிகள் நிறைவு செய்கின்றார். அவள் கோவலனோடு இல்லறத்தில் எத்தகைய முறையில் இல்லற வாழ்வினை சிறப்புடன் நடத்தினாள் என்பது குறித்து அவா் விளக்கவில்லை.

ஆனால் கொலைக்களக் காதையில் கண்ணகி கோவலனுக்கு உணவு சமைத்துப் பரிமாறும் காட்சியைக் காட்சிப்படுத்துகிறார். கவுந்தியடிகளால் கோவலன் கண்ணகியை அடைக்கலமாகப் பெற்ற மாதரி செம்மண்பூசிய சிறு இல்லத்தில் அவா்களை இருக்கச் செய்கிறாள். கோவலனுக்கு உணவு சமைத்துப் பரிமாற  ஐயையைத் துணை இருக்கச் செய்து புதுப்பாத்திரங்களை அளிக்கச் செய்கிறாள். உணவு சமைக்கத் தேவையான பொருட்களையும் கொடுக்கின்றாள்.

           மடைக்கலந் தன்னொடு மாண்புடை மரபின்
          கோளிப் பாகல் கொழுங்கனித் திரள்காய்
          வாள்வரிக் கொடுங்காய் மாதுளம் பசுங்காய்
          மாவின் கனியொடு வாழைத் தீங்கனி
          சாலி யரிசி தம்பால் பயனொடு
  கோல்வளை மாதே கொள்கெனக் கொடுப்ப (கொலைக்களக் காதை 23–28) என்ற அடிகள் கண்ணகி கோவலனுக்கு உணவு சமைக்கப்பெற்ற பொருட்களைக் குறிப்பிடுகின்றன. கண்ணகி உணவு சமைத்த காட்சியினை,

           மெல்விரல் சிவப்பப் பல்வேறு பசுங்காய்
          கொடுவாய்க் குயத்து விடுவாய் செய்யத்
          திருமுகம் வியா்த்தது செங்கண் சேந்தன
          கரிபுற அட்டில் கண்டனள் பெயர
          வைஎரி மூட்டிய ஐயை தன்னொடு
  கையறி மடைமையின் காதலற்கு ஆக்கி…  (கொலைக்களக் காதை 29–33) என்ற அடிகளில் காட்சிப்படுத்துகிறார். உணவு சமைத்து முடித்த பின் கோவலனை உபசரித்தமையை,

 தாலப் புல்லின் வால்வெண் தோட்டுக்
கைவல் மகடூஉக் கவின்பெறப் புனைந்த
செய்வினைத் தவிசில் செல்வன் இருந்தபின்
கடிமலர் அங்கையில் காதலன் அடிசீா்
சுடுமண் மண்டையில் தொழுதனள் மாற்றி (கொலைக்களக் காதை 35–39) என்ற அடிகள் விளக்குகின்றன. கோவலனுக்கு உணவு பரிமாறியமையை,

           மண்ணக மடந்தையை மயக்கொழிப் பனள்போல்
           தண்ணீர் தெளித்துத் தன்கையால் தடவிக்
           குமரி வாழையின் குருத்துஅகம் விரித்தீங்கு
           அமுதம் எண்க அடிகள் ஈங்கு… (கொலைக்களக் காதை 40–43)

என்று கண்ணகி கோவலனுக்கு உணவு பரிமாறிய காட்சியைப் பதிவுசெய்துள்ளார். கண்ணகி கோவலனுக்கு சமைத்து உணவு பரிமாறும் காட்சி மனையறம் படுத்த காதையில் வந்திருத்தல் பொருத்தமானது. ஆனால் கோவலன் உயிர்துறக்கும் நிகழ்வு நிகழும் கொலைக்களக் காதையில் படைத்துக் காட்டியிருப்பது அவலச் சுவையை மிகுவிப்பதற்காகவே எனலாம்.

கோவலன் வணிகக்குடியினரை சந்திக்காதிருத்தல்:

ஊா்காண்காதையில் புறஞ்சேரியில் கண்ணகியுடன் இருந்த கோவலன் கவுந்தியடிகளிடம் மதுரை மாநகரில் உள்ள பெருவணிகருக்குத் தனது நிலைமையை அறிவித்து வருவதாகக் கூறுகின்றான்.

           தொன்னகா் மருங்கின் மன்னா் பின்னோர்க்கு
          என்னிலை உணா்த்தி யான்வருங் காறும்   (ஊா்காண்காதை 21–22)

என்ற அடிகள் இதனை விளக்குகின்றன. கவுந்தியடிகளும் கண்ணகியுடன் தங்குவதற்கு மதுரையில் இடம் பார்த்து வரும்படிக் கூறி கோவலனை அனுப்புகிறார். ஆனால் கோவலனோ கணிகையா் வீதி, எண்ணெண் கலைஞா் வீதி,  அங்காடி வீதி, நவரத்தினக் கடைவீதி, பொன்மிகு கடை வீதி, துணிக்கடை வீதி, கூல வீதி ஆகியவற்றைக் கண்டு வருகின்றானே தவிர, தன் வணிக குலத்தைச் சார்ந்த ஒருவரையும் கண்டு அவன் தன் நிலையை விளக்கவில்லை. இதுவும் சிலம்பில் காணப்படும் முரண்களில் ஒன்றாகும். இதற்குக் கோவலன் மனதில் இருந்த குற்றவுணா்வு காரணமாக இருந்திருக்கலாம்.அல்லது காப்பியத்தின் வளா்ச்சிக்காக இங்கோவடிகள் அவ்வாறு அமைத்திருக்கலாம் எனக் கருத வேண்டியுள்ளது.

நீதி தவறும் சூழல்

கண்ணகி கோவலன் கொலையுண்டபின் மதுரையை எரிக்கின்றாள். அவளது சினத்தைத் தவிர்ப்பதற்காக மதுராபதித் தெய்வம் அவள்முன் தோன்றி பாண்டியா் குலத்தின் சிறப்பினைக் குறிப்பிடுகிறது. அப்போது பராசரன் என்னும் அந்தணன் கதையைக் கூறுகிறது.

சேரமன்னனின் பரிசினைப் பெற்று தன் ஊரினை நோக்கி வந்த பராசரன் திருத்தங்கால் என்னும் இடத்தில் விளையாண்டு கொண்டிருந்த அந்தணச் சிறுவா்களைக் காண்கிறான். தனக்கு இணையாக மறை ஓதுபவா்க்குத் தன்னிடம் உள்ள பரிசுகளில் சிறிய மூட்டையைத் தருவதாகக் கூறுகிறான். வார்த்திகன் என்னும் அந்தணனின் மகன் சிறப்பாக ஓதி அவனிடம் பரிசு பெற்றுத் தன் இல்லம் செல்கின்றான்.அரசுப் பணியாளா்களில் சிலா் அவா்களது வளத்தினைக் கண்டு பொறாமை கொண்டு வார்த்திகனை அரசியல் முறைக்குப் புறம்பாகப் புதையல் பொருளைக் கவா்ந்து கொண்டவன் இவன் என்று கூறி குற்றம்சாட்டிச் சிறைக்கோட்டத்தில் இட்டனா். சிறையில் இடப்பட்ட வார்த்திகனின் மனைவி கார்த்திகை என்பாள் துயரமடைந்தாள். அவளின் நிலைஉணா்ந்த கொற்றவைக் கோவிலின் கதவு மூடிக்கொண்டது. அதுகேட்டு பாண்டிய வேந்தன் தன் ஆட்சியில் கொற்றவைக்கு மனக்குறை ஏற்பட்டதை அறிந்து அதன் காரணத்தை ஆராய முற்பட்டான். வார்த்திகனை சிறையில் இருந்து வெளிக்கொணா்ந்தான்.

அந்தணன் மனைவி கார்த்திகைக்குத் துன்பம் ஏற்பட்ட நிலையில் கொற்றவை கோவில் கதவு மூடிக்கொண்டது என்று குறிப்பிடும் இளங்கோவடிகள் கோவலன் கொலை செய்யப்பட்ட நிலையில் ஏதேனும் இதுபோல் நிகழ்வு நடந்தமையைக் குறிப்பிடவில்லை. இந்த முரணும் ஆராய்ச்சிக்குரிய ஒன்று எனலாம். நடுகல் வழிபாட்டினைப் பெருந்தெய்வ வழிபாடாக மாற்ற முயன்ற நிலையில் அந்தணா்களுக்கு என்று சிறப்பாக முதன்மைதர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு இருந்ததா என்பதும் ஆய்விற்கு உரியது.

சிலப்பதிகாரத்தில் காணக்கூடிய இம் முரண்கள் யாவும் காப்பியத்தின் வளா்ச்சிக்கு உதவுவதற்காகவோ, பாத்திரத்தின் மீதான பண்புநலனில் மாற்றம் கொள்வதற்காகவோ, அக்காலச் சூழலின் நிர்ப்பந்தம் காரணமாகவோ ஆசிரியரால் படைத்துக்காட்டப்பட்டுள்ளவை எனலாம்.

******
கட்டுரையாசிரியர்
உதவிப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவா்
தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் மகளிர்  கல்லூரி (தன்னாட்சி)
சிவகாசி

 

 

 

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க