கணியன்பாலன்

 

உலகின் மிகத் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியும், தமிழ்ச் சமூகமும் மிகச்சிறந்த விழுமியங்களை, மிகச்சிறந்த பண்பாட்டு மரபுகளை, மிகச்சிறந்த தத்துவ, அறிவியல், கலை, இலக்கியக் கருவூலங்களை கிரேக்க மொழியும் அதன் சமூகமும் போன்றே உலகிற்கு வழங்கியுள்ளது. ஆனால் இன்றைய உலகம் அதனை அறியாதுள்ளது. அவைகளை உலகம் அறியச் செய்வதற்கேற்ற ஆழமான விரிவான ஆய்வுகளைச்செய்வது நமது முதல் கடமையாகிறது. நவீன அறிவியலில் இடம், காலம் ஆகிய இரண்டும் அனைத்திற்கும் அடித்தளமாகக் கருதப்படுகிறது. பழந்தமிழ்ச் சமூகம் இடம், காலம் ஆகிய இரண்டையும் அறிவியலுக்கு மட்டுமல்ல, இலக்கணத்திற்கும் அடித்தளமாகக் கொண்டிருந்தது என்பதை தொல்காப்பியம் உறுதிப்படுத்துகிறது. தமிழ் மொழி குறித்த ஆய்வுகள் போன்றே தமிழ்ச் சமூகம் குறித்த விரிவான ஆழமான ஆய்வுகள் மிக மிகத் தேவையாகவுள்ளது. அவ்வாய்வுக்கு தமிழ் மொழியின், தமிழ்ச் சமூகத்தின் மிகப்பெரிய கருவூலமாக விளங்கும் சங்க இலக்கியத்தின் காலத்தைத் துல்லியமாக அறிவது மிகமிகத்தேவை. மொழியியல், சமூகவியல் அறிஞர்கள் பலர் காலம் குறித்த புரிதல் இன்றியே ஆய்வு செய்கின்றனர். அவ்வாய்வு முழுமையாகாது. இந்தியாவின் காலம் குறித்த ஆய்வு 200 ஆண்டுகளுக்குப் பின்பே ஓரளவு துல்லியமாக ஆகியது. தமிழகக் காலம் குறித்த ஆய்வுக்குச் சில பத்தாண்டுகளாவது தேவைப்படும். சங்க இலக்கிய காலம் குறித்த ஆய்வு தமிழ் மொழி, தமிழ்ச் சமூகம் குறித்த  அனைத்து ஆய்வுகளுக்கும் அடிப்படையாகும்.

கிரேக்க மாவீரன் அலெக்சாண்டர் காலத்தை, கி.பி முதல் நூற்றாண்டு அல்லது கி.மு. 6ஆம் நூற்றாண்டு எனக் கொண்டால் கிரேக்க மொழி ஆய்வும், அதன் சமூக ஆய்வும் எப்படி இருக்கும்? அதுபோன்றுதான் தமிழ் மொழி, அதன் சமூகம் குறித்த ஆய்வுகள் குழப்பமும், முரண்களும் கொண்டதாக தற்பொழுது இருந்து வருகிறது. பழந்தமிழக நாணயங்கள், அதன் கல்வெட்டுகள், அகழாய்வுகள், எழுத்துப்பொறிப்புகள் அதன் இன்னபிற தரவுகள் சங்ககாலத்தை கி.மு. 500க்கு முன் கொண்டு செல்கின்றன. சிலர் அதன் காலத்தை கி.பி. க்குப்பின் எனக் கணிக்கின்றனர். ஆகவே சங்க இலக்கியக் காலம் குறித்த ஆய்வு முதன்மை பெறவேண்டியது மிக முக்கியமாகிறது. அவை குறிப்பிடும் வேந்தர்கள், வேளிர்கள், தலைவர்கள், புலவர்கள் குறித்த காலத்தை அறிவதும், பாடல்கள் ஒவ்வொன்றின் காலத்தையும் அறிவதும் இங்கு முக்கியமாகிறது. தமிழ் மொழியின்,  தமிழ்ச் சமூகத்தின் தத்துவார்த்த, அறிவியல், தொழில்நுட்ப, கலை, இலக்கிய, வரலாற்று விடயங்களை முழுமையாகவும், விரிவாகவும், ஆழமாகவும் ஆய்வது இன்றைய தேவை. இலக்கியம் குறித்த ஆய்வுகள் மட்டுமே தற்பொழுது நடந்து வருகிறது. அவ்வாய்வும் காலம் குறித்த புரிதல் இன்றியே நடைபெறுகிறது. பிற சமூகங்களோடும் பிற மொழிகளோடும் செய்யும் ஒப்பீட்டு ஆய்வு என்பது காலம் குறித்த புரிதல் இன்றி முழுமையடையாது. ஆகவே நமது இன்றைய கடமை என்பது,

1.தமிழ் மொழியின், தமிழ்ச் சமூகத்தின் மிகப்பெரிய கருவூலமாக விளங்கும் சங்க இலக்கியத்தின் காலத்தைத் துல்லியமாக அறிவது.

2.தமிழ் மொழியின், தமிழ்ச் சமூகத்தின் தத்துவார்த்த, அறிவியல், தொழில்நுட்ப, கலை, இலக்கிய, வரலாற்று விடயங்களை முழுமையாகவும், விரிவாகவும், ஆழமாகவும் ஆய்வு செய்வது

3.தமிழ் மொழியும், தமிழ்ச் சமூகமும் உலகிற்கு வழங்கியுள்ள மிகச்சிறந்த விழுமியங்களை, மிகச்சிறந்த பண்பாட்டு மரபுகளை, மிகச்சிறந்த தத்துவ, அறிவியல், கலை, இலக்கியக் கருவூலங்களை உலகிற்கு வெளிப்படுத்துவது.

 

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *