த. ஆதித்தன்

 

பெற்றோர்களின் வறுமையால் சொந்த கிராமத்தை விட்டு சென்னைக்கு வந்துவிட்டான் சட்டைநாதன்.  ஆட்டோ ஓட்டும் அவன் சித்தப்பா மாநகராட்சிப் பள்ளியில் அவனை ஒன்பதாம் வகுப்பு  சேர்த்து விட்டிருக்கிறார்.

 

காலையில் ஐந்து மணிக்கு எழுந்திருந்து சித்தப்பாவின் ஆட்டோவைத் துடைத்துக் கொடுப்பது, தெருக்குழாயில் வீட்டிற்குத் தேவையான தண்ணீர் பிடித்துக் கொடுப்பது,  கடைக்குச் சென்று வீட்டிற்கு வேண்டியவற்றை வாங்கி கொடுப்பது உள்ளிட்ட காலைக் கடன்களை முடித்து விட்டு பள்ளிக்குத்  தயாராக மணி காலை 8.30 ஆகிவிடும்.  பின்னர் இரண்டு கிலோமீட்டர் நடந்து சென்றால் பள்ளிக் கூடம் வந்துவிடும்.  ஓட்டமும் நடையுமாக சென்றால் வீட்டுப் பாடங்களை முடிக்க நேரம் கிடைக்கும்.  மாலையில் வீடு சென்றால் பீடி சுற்றும் தொழிலாளியான சித்திக்கு உதவி செய்வதிலேயே நேரம் கடந்துவிடும் இவனுக்கு வீட்டுப்பாடம் செய்வதற்கு நேரம் ஏது.

வகுப்பாசிரியை தெரசாவின் கோபக் கணைகள் மட்டும் இல்லை என்றால் இவை ஒன்றும் அவனை பாதித்திருக்காது.

இதேபோன்று ஆசிரியர்கள் இருப்பார்களோ;  மாட்டார்களோ           தெரியாது.  ஆனால் தெரசா டீச்சர் மட்டும் அப்படி.

அவர் வகுப்பு நடத்தாமல் ஊர்க்கதை பேசுவதுதான் அதிகமாக இருக்கும்.  அப்படி பொதுவாகப் பேசும்போது கூட அவரின் பேச்சில் அன்பைக் காண முடியாது.  அதிகாரத்தைதான் காணமுடியும்.

சட்டைநாதன் ஒருநாள் பள்ளிக்கு வர தாமதமாயிற்று,  காரணம் அன்று தெருக்குழாயில் தண்ணீர் வராததால் இரண்டு தெரு தள்ளி உள்ள அடிபைப்பில் இருந்து தண்ணீர் பிடிக்க வேண்டியதாயிற்று.  அந்த சோர்வால் பள்ளிக்கு வேகமாக நடந்து வர முடியவில்லை

“ குட் மார்னிங் டீச்சர் ”என்றான்.

தெரசா டீச்சரின் முகம் அனலைக்கக்கியது. “ ஏண்டா லேட்டு?”

“லேட்டாயிடுச்சி டீச்சர்”

“காரணம் கேட்டா அதையே சொல்ரே”?  சீறி விழுந்ததோடு “வீட்டுப்பாட நோட்டை எடு” என்றார்.

வீட்டுப் பாடம் முடிக்கலை டீச்..ச…ர்…” சொல்லி முடிக்கும் முன்பே அவர் கையில் இருந்த பிரம்பு அவனைப் பதம் பார்த்தது.

“வகுப்புக்கு உள்ள வராத …, வெளிய நின்னே பாடத்த கவனி… மதியம் சாப்பாட்டு டைம்ல ஸ்டாப் ரூமுக்கு வந்து வீட்டுப் பாடத்த முடிச்சுக் குடுத்திட்டு வகுப்புக்கு உள்ள போ” என்றார்.

வகுப்பாசிரியர் சொன்னதால், அதிலும் தெரசா டீச்சர் சொன்னதால் எந்த பாட வேளையிலும் உள்ளே செல்ல முடியவில்லை.

நேரம் ஆக ஆக கால் வலித்தது.  உள்ளே தமிழ் வகுப்பு நடந்தது, “  நல்ல களிமண்னைக் கொண்டு எத்தகைய உருவத்தையும் செய்ய முடியும்.  அது குயவன் கையாளும் விதத்தைப் பொறுத்தது.  அதுபோல மாணவர்களே உங்களை வடிவமைப்பது சமூகக் குயவன்.  ஆம் சமூகமாகியக்  குயவன்” என பாடத்தை நடத்திக் கொண்டிருந்தார்.

மதிய உணவு வேளை வந்ததும் ஆசிரியர் அறையின் வெளியே அமர்ந்து வீட்டுப் பாடங்களை முடித்தான்.  தெரசா டீச்சரிடம் கொடுத்துவிட்டு சத்துணவு சாப்பிட வேகமாக ஓடிச் சென்றான். பசி வயிற்றைக் கிள்ளி எடுத்தது.  எல்லோரும் சாப்பிட்டு முடித்திருந்தார்கள்.  சத்துணவுக் கூடத்திற்குள் எட்டிப் பார்த்தான்.  பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தார்கள்.  வெளியே மாணவர்கள் கொட்டியிருந்த மீதமான சாப்பாடு ஒர மரத்தடியில் கிடந்தது.  தண்ணீர் குடிக்கலாம் என அருகில் இருந்த குழாயைத் திருகினான்.  ஏற்கனவே காலியாகியிருந்ததால் சொட்டு சொட்டாக சில துளிகள் விழுந்தன.  அப்படியே அருகில் இருந்த திண்டில் ஏறி வெளியில் பார்த்தான்.

சாலையின் எதிர்புறம் ஒரு தனியார் பள்ளி.  அப்பள்ளியின் கேண்டீன் கண்ணில் பட்டது.  இவன் வயதை ஒத்த மாணவர்கள் இருவர் ஐஸ்கிரீமை ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்படியே திண்டில் இருந்து இறங்கி குழாய் அருகில் அமர்ந்தான்.  குழாயில் இருந்து சிறு துளி மண்ணில் விழுந்தது.

சட்டை நாதன் மனதுள் என்னென்னவோ தோன்றியது.  “இவ்வளவு கஷ்டங்களையும் நான் எதுக்குத் தாங்கிக்கணும்?”

“வயிற்றுப் பிழைப்புக்காகவா?

“ஏழையாய் பிறந்ததற்காகவா?

அவன் அருகில் எந்த குயவனும் இல்லை.

…..

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.