மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) 9

0

By
லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்

 

அந்தப் பெண், தன்னிடம் சிறுமிகள் வந்து சேர்ந்ததை விவரித்தாள். “ஆறு வருடங்களுக்கு முன்பு, ஒரே வாரத்தில் இவர்கள் பெற்றோர் இறந்து விட்டனர். தந்தை மரம் வெட்டுபவன். ஒரு நாள் மரம் வெட்டும் போது அவன் மேல் மரம் விழுந்து வயிறு நசுங்கி விட்டது. உடலை வீட்டிற்க்குக் கொண்டு வரும் முன்பே அவன் உயிர் பிரிந்து விட்டது. ஊரார் அவனை அடக்கம் பண்ணினர். மூன்று நாட்களுக்குப் பின் அவன் மனைவி இந்த இரட்டைக் குழந்தைகளைப் பெற்றாள். அவள் மிகவும் ஏழை. அவளுக்கு உற்றார், உறவினர் ஒருவரும் கிடையாது. பிரவசத்தின் போதோ அல்லது மரணத்தின் போதோ ஒருவரும் அருகில் இல்லை.

நானும் என் கணவரும் அடுத்த குடிசையில் வாழ்ந்து வந்தோம். குழந்தைகள் பிறந்த மறுநாள் காலை அவளைப் பார்க்கச் சென்ற போது அவளுடைய இறந்த உடல் குளிர்ந்து விறைத்துப் போயிருந்தது. அவள் சடலம் குழந்தையின் மேல் உருண்டு கால் நசுங்கி விட்டது.

ஊரிலுள்ளவர்கள் ஒன்று கூடிச் சடலத்தைக் கழுவி அடக்கம் பண்ணின பின்பு குழந்தைகளை யார் கவனிப்பார்கள் என்ற கேள்வி எழும்பியது. எனக்குக் குழந்தை பிறந்து எட்டுவாரங்களாகியிருந்து. ஊரில் நான் மட்டும்தான் பாலூட்டும் தாயாக இருந்ததால் இந்தக் குழந்தைகளுக்கும் பால் கொடுத்து வளர்க்க ஒப்புக் கொண்டேன். ஊர்க்காரர்களும் “இப்போது நீ குழந்தைகளைக் கவனித்துக் கொள், அவர்கள் எதிர்காலத்தைப் பற்றிப் பின்பு நாம் ஒரு முடிவெடுக்கலாம்” என்றனர். முதலில் ஊனமுற்ற குழந்தைக்கு நான் பால் கொடுப்பதில்லை. அந்தக் குழந்தை பிழைக்காது என்று நினைத்தேன். ஆனால் ஏன் ஒன்றுமறியாத குழந்தை துன்ப படவேண்டும் என்று நினைத்து அதற்கும் பால் கொடுக்க ஆரம்பித்தேன். நான் இளமையாகவும், நல்ல உடல் பலத்தோடும் இருந்ததால் தேவைக்கு அதிகமாகப் பால் சுரந்தது. இறைவனின் சித்தப்படி இந்தக் குழந்தைகள் நன்றாக வளர்ந்தனர். ஆனால் என் மகனோ இரண்டு வயதான போது இறந்து விட்டான். எங்களுக்குச் செல்வம் பெருகிய போதிலும் எனக்கு வேறு குழந்தைகள் பிறக்கவில்லை. என் கணவருக்கு ஒரு ஆலையில் வேலை கிடைத்தது. நல்ல வருமானம் இருப்பதால் கவலையில்லாமல் வாழ்கிறோம். இவர்கள் இல்லாவிட்டால் என் வாழ்க்கை வறண்டு போயிருக்கும். இந்தச் சிறுமிகள் எனக்கு அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கிறார்கள். இவர்களை நான் எப்படி நேசிக்காமல் இருக்கமுடியும்?”, என்று சொல்லிக் கொண்டு ஊனமுற்ற சிறுமியை அணைத்துக் கொண்டு மற்ற சிறுமியின் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டாள். மெடீனா அவள் சொல்லி முடித்தை கேட்டுத் “தாயும், தந்தையும் இல்லாமல் ஒருவரால் வாழ முடியும். ஆனால் கடவுள் இல்லாமல் வாழ முடியாது, என்ற பழமொழி எவ்வளவு உண்மை” என்று சொல்லிப் பெருமூச்சு விட்டாள்.

அவர்கள் அவ்வாறு பேசிக் கொண்டிருந்த போது மைக்கேல் உட்கார்ந்திருந்த மூலையிலிருந்து திடீரென்று மின்னலடித்தது போல் வெளிச்சம் தோன்றி அந்தக் குடிசை முழுவதும் பிரகாசமடைந்தது. எல்லோரும் அவனைப் பார்த்த போது மைக்கேல் உட்கார்ந்து கைகளைக் குவித்துக் கால் முட்டுக்களில் ஊன்றி மேலே நோக்கிப் பார்த்துப் புன்னகை புரிந்து கொண்டிருந்தான்.

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.