ஆ. செந்தில் குமார்

 

வஞ்சியவள் சீதையின்
வாட்டத்தைப் போக்கி – காத்து நின்ற
அஞ்சனையின் மைந்தனவன்
அனுமனைப் போன்று
எதிரிகளின் படைதம்மை வீழ்த்தியே நித்தம்
எமைக் காத்து நின்றான் எமது அண்ணன்!

எங்குமே காணாத அவன் வீரம் கண்டு
சிங்கக் கொடியுமே வீழ்ந்தது அன்று!
சங்கும் முழங்கியது அவன் வீரம் கொண்டு
எங்கும் தமிழ் ஒலிக்க செய்திட்டான் அவனே!

செங்காந்தள் மலர் போன்ற தன் மனதைக் கொண்டு
செந்தமிழர் தம் மனதில் கோலோச்சி நின்றானே!
செங்கதிரோன் ஒளி போன்ற அவன் கண்ணைக் கண்டு
எதிர்த்து நின்ற சேனைகளும்
அஞ்சியது அன்று!

நெஞ்சுரமே சிறிதுமின்றி இருந்த நம் பகைவர்
வஞ்சனைகள் பல சேர்ந்து வீழ்த்தியது நம் படையை!
முத்து முத்தாய் பொழிகின்ற வான் மழையைப் போல
கொத்து கொத்தாய் பொழிந்தன குண்டுகள் தலை மேலே!

செங்குருதி பெருக்கெடுக்க தலைசாய்ந்த நம் மக்கள்!
எங்குமே மரணத்தின் ஓலம் – நாடே
பிணக்காடாய் மாறிய அவலம்!
அறமின்றி
மறம் சிறிதுமின்றி
வஞ்சனையின் துணைக்கொண்டு
இன அழிப்பு செய்திட்டார் நம் பகைவர்!
பிஞ்சென்றும் பூவென்றும்
பால் மணம் மாறா
பிள்ளையென்றும் பாராமல்
நஞ்சு மனம் கொண்டு அவர்கள்
கொன்று கொன்று குவித்தனரே!
கங்குகரை காணாத
கடல் போன்ற மக்கள்
பொங்கி வந்த வேதனையால்
சிலையாகி நின்றனரே!

இன்றளவும் கிடைக்கவில்லை
இதற்கு ஒரு நீதி!
எங்களுக்கும் காலம் வரும்
எம்மண்ணில் விதைக்கப்பட்ட வீரமும்
முளைத்து வரும்!
அது வரையும் காத்திருபோம்!
ஈழத்தை வென்றெடுப்போம்!
புலிக்கொடியை நாட்டிடுவோம்!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க