பாரம்பரியமும் புதுமோகமும்
சிந்தைக்கு ஒவ்வா சத்தினை
சித்தமிழந்து ஏற்றதனைப் பல
சாத்தியங்களை சீரழித்தோம்
சுவைக்கடிமை சித்தமானதால்,
சுண்டைக்காயும் சீனியவரையும்
கண்டங்கத்திரியும் கருப்பட்டியும்
சமுத்திரம் கடக்க சாதித்தோம்,
சக்தியிழந்து நாண்டிடப் பல
சீவன்கள் செயலிழந்து கலங்கிடக்
காலணாபயனற்ற பண்டமதை
கத்தியின்றி இரத்தமின்றி போர்முனையில்
சத்தமின்றி சுவைபடுத்த வந்தனவே,
மதிகெட்டு மூடரானோம்,
சக்தியுள்ள சிலசீவன் சிலிர்த்தெழ,
சித்திக்குமே நம் சாதனை,
சோதித்துத் தேடியும் காணா சித்தமிது,
பாரோரும் வியந்திட ஆராயும் சிந்தையிது
காந்தமாய்க் கவர்ந்திடும் யாவும்
கந்தலாய் மாற்றிடவே என்றுணர்!!
கஞ்சியும் கம்பங்கூழும், கேழ்வரகும்,
கமர்கட்டும், சவ்வுமிட்டாயும்,
குழிப்பணியாரமும், கொழுக்கட்டையும்,இடியாப்பமும்,
பழையசோறும் பச்சைமிளகாயும்,
சின்னவெங்காயமும்,
சிறுதானியமும்,
சீர்வகுத்து சத்தமின்றி யுத்தமிட
சிதைவதுகாண் போர்முனையில்,
சீனத்து சித்துவிளையாட்டு!!
பழம்பெருமைசமைத்திட
சில இறையன்புகள்
சிங்காரவலம் வர சிந்திப்போம்
சிறையிடுவோம் சித்துவிளையாடல்களை!!
அருமையான கவிதை பகிர்வு .காலங்கள் மாறிடும்,மனிதர்கள் மாறலாம் ,மனம் என்றும் பழைய நினைவுகளை அசை போடும் . நம் மண்ணிற்கே உண்டான சக்தி அது .நாம் ஏன் புதிய கலாச்சரத்தை பின்பற்ற வேண்டும் .நம் முன்னோர்கள் சென்ற பாதையில் செல்வோம்,நலமாயிருப்போம் . தொடரட்டும் உங்கள் கவி .