க. பாலசுப்பிரமணியன்

வளமான வாழ்விற்கு வளமான சிந்தனைகள்

உடல்நலமும் மனநலமும் இணைந்து சிறப்பாக இருந்தால்தான் வாழ்க்கை சிறப்பாக இருக்க முடியும். உடல் நலத்திற்கு எவ்வாறு உடற்பயிற்சியும் சத்தான உணவும் தேவையோ அதேபோல் மனநலத்திற்கு நல்ல சிந்தனைப் பயிற்சியும் சத்தான சிந்தனைகளும் தேவை. ஒரு மனிதனின் சிந்தனையே அவனை உருவாக்குகிறது என்று அண்ணல் காந்தி அடிகள் கூறுகின்றார். வளமான தூய்மையான நேர்மறையான சிந்தனைகள் நமக்குத் தேவை. இவைகளை வளர்ப்பதற்கு நாம் அதைப் பேணும் சூழ்நிலைகளில் இருத்தல் அவசியம். எதிர்மறையான சிந்தனைகளைக் கொடுக்கும் மற்றும் வளர்க்கும் சூழ்நிலைகளில் நாம் இருந்தால் அதன் பாதிப்புக்கள் நம்மை உலுக்கும். அவைகளுக்கு இரையாகி நாம் வாழ்வில் வீழ்ச்சி அடைந்து கொண்டிருப்போம். இந்தக் கருத்தை பல மனநல வல்லுநர்கள் தங்கள் ஆராய்ச்சிகள் மூலம் உறுதிப் படுத்தியிருக்கின்றார்கள் நல்ல சிந்தனைகள் நம்முடைய வளர்ச்சிக்கு ஆணிவேர். நல்ல சிந்தனைகள் நம்முடைய மகிழ்ச்சிக்கு உத்திரவாதம். நல்ல சிந்தனைகள் நம்முடைய வருகாலத்திற்கு நாம் அளிக்கும் காப்பீடு. நல்ல சிந்தனைகளே நம்முடைய அன்பான உறவுகளை வளர்ப்பதற்கு  நாம் போடும் உரம்.. நல்ல சிந்தனைகளே நம்முடைய ஆளுமை வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும்.

ஒரு சிறிய கதை நினைவுக்கு வருகின்றது. ஒரு கிராமத்தின் எல்லையில் உள்ள ஒரு அரச மரத்தடியில் ஒரு முனிவர் அமர்ந்திருந்தார். அவருடன் அவருடைய சீடர்கள் அமர்ந்திருந்தனர். அங்கே வந்த ஒரு வழிப்போக்கன் அந்த முனிவரிடம் “நான் பக்கத்துக்கு கிராமத்திருக்குச் செல்கின்றேன். அங்குள்ள மக்கள் எப்படிப் பட்டவர்கள்” என்று கேட்கின்றான். அந்த முனிவர் பதிலுக்கு அவனிடம் ‘நீ வருகின்ற கிராமத்தில் உள்ள மக்கள் எப்படி’ என்று கேட்கின்றார். அதற்கு அவனோ “அங்குள்ளவர்கள் மிக மோசமானவர்கள்” என்று பதிலளிக்கின்றான். உடனே முனிவரோ “அப்படியா, இந்த கிராமத்தில் உள்ளவர்களும் அதே போன்றவர்கள்தான்” என்று சொல்கின்றார். சிறிது நேரம் கழித்து இன்னொரு வழிப்போக்கன் அதே போல் இந்த முனிவரிடம் கேட்க முனிவரும் தன்னுடைய அதே கேள்வியை இந்த வழிப்போக்கனிடம் கேட்கின்றார். இதற்கு பதிலளிக்கும் அந்த வழிப்போக்கன் மகிழ்வுடன் “அவர்கள்  மிகவும் நல்லவர்கள்”என்று சொல்ல முனிவர் “இந்த ஊர் மக்களும் அதே போல் நல்லவர்கள் என்று பதிலளிக்கின்றார். அதிர்ச்சியடைந்த சீடர்கள் முனிவரிடம் ‘குருவே, ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு விதமான பதில் கூறுகின்றீர்களே” எனக் கேட்க  முனிவரோ “உன் சிந்தனை எப்படியோ அப்படித்தான் உன் உறவுகள் அமையும் “என்று பதிலளிக்கின்றார்.

சிந்தனைகள் நமது சக்திக்கு உயிரூட்டுபவை. சிந்தனைகளின் வளமும் தூய்மையும் உண்மையும் நம்முடைய செயல்களுக்கு வெளிச்சம் போட்டு வழிகாட்டும் தன்மையுடையவை

‘தன்னெஞ்சறிவது பொய்யற்க” என்று அறிவுரை கூறும் வள்ளுவர் மேலும் கூறுகின்றார்

“சென்ற விடத்தாற் செலவிடாது தீதொறி

நன்றின் பால் உய்ப்பது அறிவு.”

பல நேரங்களில் நமக்கு துயரத்தை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலைகளில் மனம் தன்னைத்தானே குறைவாக மதிப்பிட்டு நமது சிந்தனைகளின் வளத்தைப் பாதிக்க வாய்ப்புக்கள் வரும். அந்த நேரங்களில் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம்மை இளக்காரமாகவோ அல்லது நமது இயலாமையை பெரிதுபடுத்தியோ நம்மைக் கொச்சைப்படுத்த வாய்ப்புகள் ஏற்படலாம். அந்த நேரங்களில் நாம் நம்முடைய சிந்தனைகளை மேலும் பலவீனமாக்கிக்கொள்ளாமல் நம்மீது வீசப்படும் கணைகளை எவ்வாறு நமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்று முற்போக்காகச் சிந்திக்க வேண்டும்.

ஒரு கிராமத்தில் ஒரு மனிதன் கழுதையை வளர்த்துக்கொண்டிருந்தான்,. ஒரு நாள் உணவுக்காக அந்தக் கழுத்தை மேய்ந்து கொண்டிருந்த பொழுது அருகில் உள்ள பெரிய பள்ளத்தில் விழுந்து விட்டது. எவ்வளவு முயன்றும் அதனால் மேலே ஏறி வர முடியவில்லை. அதன் ஊரிமையாளருடன் ஊர் மக்கள் அனைவரும் அந்தப் பள்ளத்தின் அருகே கூடிவிட்டனர். “இது இனிமேல் மேலே வந்து என்ன செய்யப்போகின்றது “ïஇதற்கு வயதாகி விட்டது. இதை வெளியே எடுத்து என்ன செய்யப்போகின்றாய்”  என்று பல அறிவுரைகளை வீசிவிட மக்கள் சொல்கேட்டு மனம்மாறிய உரிமையாளர் அந்தப் பள்ளத்திருக்குள்ளேயே அதைப் புதைத்துவிட எண்ணி  அருகில் இருந்த மணலைப்போட்டு மூடிவிட முயற்சி செய்தார். கொஞ்சம் கொஞ்சமாக பள்ளத்தில் மண்சேர அந்தக்கழுதை அதன் மீது கால் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏறி வெளியே வந்து விட்டது. அதன் சிந்தனையையும் தன்னம்பிக்கையையும் பாராட்டாமல் இருக்க முடியுமா?

எதிர்மறையான சூழ்நிலைகளிலும் வளமான முற்போக்கான நேர்மறையான சிந்தனை நமக்கு தன்னம்பிக்கையையும் வெற்றியையும் அளிக்கும் என்பதில் ஐயப்பாடு ஏதுமில்லை.

நல்ல நேர்மறையான முற்போக்கான சிந்தனையுடனும் அதைத் தருகின்ற சூழ்நிலைகளிலும் வாழ்ந்து பார்க்கலாமே !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *