செங்கொடி
வி.தி. அரசு
மரணத் தீர்ப்புக்கு மதுரையை எரித்த கண்ணகி
இன்று தன்னையே எரித்துக் கொண்டாள்
கண்ணகிக்கு தாலிக் கொடி – செங்கொடியே
உனக்கு என்ன தாலிக் கொடியா-இல்லை
தொப்புள் கொடியா இல்லவே இல்லை-பின் ஏன் இந்த முடிவு?
பவளக்கொடியே படித்துப் பார்த்தேன் உன் கடிதத்தை
அதில் தமிழின் பாசக்கொடிக்கு என்றிருந்தாய்
பூங்கொடியே உன் தியாகத்திற்கு நாங்கள்
போர்த்த வேண்டும் உன் உடம்பில் நம் தேசியக்கொடி.
மரத்தை வெட்டுவதே தவறென்றான் – மனிதன்
தலையை வெட்டுவது சரியா எனக் கேட்டாய் சட்டத்தை
சட்டம் ஒரு இருட்டறை, உன் உடம்பில் பற்றி எரிகின்ற
கோரத்தீயின் வெளிச்சத்தில் அது விழித்துக் கொண்டது.
உனது அலறல் சத்தம் கேட்கவில்லை செங்கோட்டைக்கு
அதை கேட்கச் செய்த ஜார்ஜ் கோட்டைக்கு மனமார்ந்த நன்றி;
மரணத்தீர்ப்பை எழுதிவிட்டு மரணம் அடைந்த பேனாவின் முனையே
நீ மீண்டும் உயிர்த்தெழு, மரணத்திற்கு மரணத்தை கொடுத்து விட்டு
அந்த மூவருடன் சேர்ந்து நீயும் வாழ்ந்து விடு.
செங்கொடியே உனது மரணம் சரித்திரமானது
மற்ற மொழிகளுக்கோ இது விசித்திரமானது.
செங்கொடியே நீ இறக்கவில்லை, மாறாக நம் பாரதம் இருக்கும் வரை
உன் தியாகம் பறந்து கொண்டிருக்கும் நம் தேசிய கொடி போல்
தமிழா நமது திருமணச்சடங்கில் ஒன்றைத் திருத்திக் கொள்வோம்
அம்மி மிதித்து அருந்ததி பார் என்பதில்செங்கொடியும் சேர்த்துக் கொள்வோம்.
கவிதையை தட்டி உதவிய திருமதி. உமா சண்முகத்திற்கும் நன்றி.